வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
உணவு சுவையாக உள்ளது என்று மேலே மேலே சாப்பிட்டுக் கொண்டே போனால் இன்றைக்கு வயிற்று வலி, நாளைக்கு வயிற்றுப்போக்கு என்றதாகும். டாக்டரிடம் போனால் நோய்க்கு மருந்து கொடுப்பார். குணமான மறுகணமே மீண்டும் அளவுக்கு அதிகமான உணவு நாடிப்போனால், வாழ்நாள் முழுவதும் வயிற்றுப்போக்கு என்ற நிலை ஏற்பட்டால் வாழ்க்கை என்ன ஆகும்? வேறு எந்தக் காரியத்தை நீங்கள் கவனிக்க முடியும்? சாப்பிடுவதை ஒரு உதாரணத்திற்காகச் சொன்னேன். அதேபோல் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால் உடல் வலுவிழந்து போகிறது; உடல் கெட்டால், மனம் கெட்டால், வாழ்வும் சீரழிகிறது. நாம் கெடுகிறோம்; குடும்பம் பாதிக்கப்படுகிறது; சமுதாயம் தப்புவதில்லை.
ஐயுணர்வோடு மெய்யுணர்வு இணைந்து வரும்போது உங்களுக்கு என்ன திடம் வருகிறதென்றால் உறவிலேயே ஒரு தெளிவு, அதாவது detachment in attachment, வருகிறது. இதுதான் உறவிலேயே துறவு நிலை. இது அல்லாது துறவு நிலை என்று தனியாக ஒன்று இருக்கவே முடியாது. அப்படியே எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போவதுதான் துறவு என்றால் இறப்பவர்கள் தான் துறவு நிலைக்குப் போகிறார்கள் என்று சொல்லலாம்! நாம் வாழும்போதே வாழ்வு நலமாக, அமைதியாக, மகிழ்ச்சியாக அமைய வேண்டுமே தவிர, நாம் இறந்தபிறகு துறவானால் என்ன, எதுவானால் என்ன? அவ்வாறு வாழும் பொழுதே வாழ்வு திருப்தியாக, மேன்மையாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அனுபோகத்திலேயும் எல்லை கட்டிக் கொள்ள வேண்டும்; அளவு இட்டுக் கொள்ள வேண்டும்.
-வேதாத்திரி மகரிஷி.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக