நீர் நிறைந்த பாண்டத்துள் காற்றேறாது
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
... உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர் அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும். - வே.மகரிஷி
ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பும்போது அதிலுள்ள காற்று
எவ்வாறு வெளியேறி விடுகிறதோ அதைப் போன்றே
இறைநிலையோடு தொடர்ந்து தொடர்பு கொள்ளும்போது
நம் மனதுள் உள்ள எல்லா தீய குணங்குளும், எல்லா
உலகியல் பற்றுகளும் நம்மை விட்டு நீங்குவதோடு
நம் மனம் தூய்மை அடைகிறது. இந்நிலையை நாம்
அடைய வேண்டுமானால் அதற்கு 'தவம்' மட்டுமே
உதவி புரியும். வேறு எந்த வகையிலும் யாரிடமும்
பெறவும் முடியாது. தரவும் முடியாது. இந்நிலையில்
அறிவு உயர்வடைந்து தானே பரம்பொருள் என்பதை
அறிந்துகொள்ளும். இந்த விழிப்பு நிலையில் நம்மை
நாம் சீரமைத்துக் கொண்டு, நம்மிடமுள்ள வேண்டாத
குணங்களை நீக்கிக் கொள்ள வேண்டும். நாம் மனித
நிலையிலிருந்து மகான் என்ற நிலையை அடைய
முடியும். ஒரு கல் அல்லது மரத்தில் தேவையற்ற
பகுதிகளை நீக்கும்போது எப்படி அது ஒரு அழகிய
சிலையாக மாற்றம் பெறுகிறதோ அதைப் போன்று.
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.