Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 5 ஜூலை, 2018

❓ கேள்வி: சுவாமிஜி! ஆன்மீகத்தில் எவ்வுயிர்களுக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது. பகைவனையும் நேசிக்க வேண்டும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட நியதியாக இருக்கும் பொழுது, அர்ச்சுனனிடம் உன் பகைவர்களை கொல்வதில் தவறில்லை என்கிறாரே கீதையில் கிருஷ்ணர், இது நியாயமானதா?




 ✅ பதில்: பொதுவாக சண்டைக்குப் போகும் சிப்பாய்க்கு கூறும் அறிவுரை தான் இது. ஆரம்ப காலத்தில் மனிதன் ஒருவனை ஒருவன் கொன்று குவித்து வாழ்வது தான் நடந்தது. அந்தக் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதைதான் மகாபாரதம்.

 சண்டையே இல்லாது வாழ்வது எப்படி என்று ஆராய்ந்து, மனித வாழ்வின் நோக்கத்தை விளக்க வந்த நூல்கள் மிக அரிது. திருக்குறள் போன்று மனித வாழ்வை முழுவதும் அறிந்து தெரிவிக்கும் மற்றொரு நூல் இன்னும் வரவில்லை.

 மனிதன் பரிணாம வளர்ச்சியில் பல சீவ இனங்களைக் கடந்து தான் வந்திருக்கிறான். இறுதியில் குரங்கு மனிதனாக இருந்து, அதன்பின் மலைவாழ் மனிதனாக வாழ்ந்தான். அப்போது அவனுக்கு உடுக்க உடை, வசிக்க வீடு மற்றும் அறநெறி என்ற ஒன்றும் இருக்கவில்லை. இன்று கூட ஆதிகாலத்து மனிதன் எப்படி வாழ்ந்தானோ அது போல் ஆப்பிரிக்காவிலும் மலேசியக் காடுகளிலும் வாழ்கின்றார்கள். அந்நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, அன்பு, கருணை ஏதாகிலும் இருக்குமா? உருவத்தில் மனிதனாக இருந்தாலும் விலங்கினம் போன்று தான் வாழ்ந்து வருகிறான். இன்னும் விலங்கினப் பதிவும் செயலும் அவனுக்கு அப்படியே உள்ளது. காலத்தால் படிப்படியாக அறிவு உயர்ந்து கொண்டே வருகிறது. இருந்த போதும் கருமையத்தில் உள்ள விலங்கினப்பதிவு சந்தர்ப்பம் கிடைக்கும் போது சீறிக் கொண்டு வந்து செயலாகிறது. இவை மனிதனுக்கு விலங்கின வித்துத் தொடராக வந்த பதிவுகளாகும்.

 மனித குலத்திற்கு விலங்கினத்திலிருந்து தவிர்க்க முடியாத மூன்று பதிவுகள் வந்திருக்கிறது. விலங்கினங்களுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது. தன் வலுவால் கொல்லக் கூடியதும், தன் வாய்க்குள் தள்ளக் கூடியதுமான ஏதோ ஒரு சீவனைப் பிடித்து உண்கிறது. அங்கு மூன்று குற்றங்கள் நிகழ்கின்றன.

 ஒன்று கொலை; இரண்டு அதன் உடலைப் பறித்துண்ணல் என்ற திருட்டு; மூன்று அது வாழும் சுதந்திரத்தை, உரிமையைத் தடுத்தலாகும். விலங்கினத்தின் இந்த மூன்று குற்றங்கள் தான் வித்து பதிவாக வந்து ஆறறிவு பெற்ற மனிதனிடத்திலும் தொடர்கிறது.

 உலகெங்கும் உள்ள குற்ற விளக்கச் சட்டங்களை (Criminal Procedure Code) எடுத்து ஆராய்ந்தால் அனைத்தும் இந்த மூன்று குற்றங்களுக்குள் அடங்கி விடும். இதை மனிதன் தெரிந்து கொண்டால், “நான் விலங்கு இல்லை; ஆறறிவு பெற்ற மனிதனாக வந்திருக்கிறேன். வாழ்வின் நிறைவில் இறைநிலையை அடைவது எனது நோக்கமாகும். அது போன்று தான் எல்லா உயிர்களும், எல்லா மனிதர்களும் தோன்றியுள்ளார்கள். அதனால் நான் எந்த உயிருக்கும் துன்பம் செய்ய மாட்டேன், என் பகைவர்களையும் நேசிப்பேன். இதுதான் மனிதப் பிறவி எடுத்த எனது பண்பு” என்று நினைத்தானானால் அந்த எண்ணமே அவனை உயர்த்தி விடும். மனிதனாக உள்ளவன் அப்போது தான் விலங்கினத்தை விட்டு மனிதனாகிறான். அதற்கு மேலான மனிதனாகி விட்ட பிறகு அவனுக்குள் உள்ள இறைநிலை பிரகாசிக்க ஆரம்பிக்கும் பொழுது தெய்வமாகிறான்.

 அங்கு பகைவர்களை மன்னிக்கவும், பிறகு நேசிக்கவும் தான் சொல்வான், கொல்லச் சொல்ல மாட்டான். பிறரைக் கொன்று வாழ்தல் நீதியெனில் பிறகு உலகில் மிஞ்சுபவர் யார்? இந்தக் கவியைக் கவனியுங்கள். 

“உலகம் என்ற மண் மீது அனைவருமே பிறந்தோம்
உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு
உலகெங்கும் ஒளிவீசும் சூரியனும் ஒன்றே
உள்ளகடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய
உலகில் உள்ளோர் இதில் ஒன்றும் செய்ததில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப்போவார்
உலகில் ஒரு பகுதியினர் மற்றவரைக் கொன்று
உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்”

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 2 ஜூலை, 2018

❓ கேள்வி: மகரிஷி அவர்களே! சித்தர்களின் பாடல்களில் 51 அட்சரங்கள் உள்ளன என்கிறார்களே, அதைத் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

 ✅ பதில்: அட்சரம் என்றால் ஒலியைக் குறிக்கும் எழுத்து. அட்சரத்திற்கு அடிப்படை மௌனம். அதிலிருந்து “அ” என்று விரிந்தது முதல் அட்சரம் “அ” விலிருந்து இன்றைக்கு 31 அட்சரங்கள் தமிழில் உள்ளன. வடமொழியில் 47 அட்சரங்கள் இருக்கின்றன. அங்கும் மூன்று ஒலிகள் குறைவு. அதனால் அவர்கள் அராபியில் இருந்து அந்த ஒலியை எடுத்துக் கொண்டு அதுபோன்ற சில எழுத்துக்களைக் கண்டுபிடித்துச் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். அதையும் சேர்த்தால் 50 அட்சரங்கள் வந்துவிடும். இந்த 50 அட்சரங்களைக் கொண்டு எல்லா சப்தங்களையும் எழுதி விடலாம்.

 இந்த 50 ஒலிகளிலும்கூட சில ஜீவன்களின் சப்தத்தை எழுத முடியாது. (உ.ம்) பல்லி சப்தம் “த்ச”: பையன் மாடு ஓட்டுவது, குழந்தைகளை முத்தமிடும்போது வரும் சப்தம், இவையெல்லாம் காற்று வெளியிலிருந்து உள்ளே போகும் சப்தங்கள். அதனால் இவைகளை எழுத முடியாது. உள்ளேயிருந்து வெளிவரும் சப்தங்களைத்தான் எழுத முடியும். இந்த 50 அட்சரங்களுடன் “ஓம்” என்ற மௌன ஒலியும் சேர்த்து 51 அட்சரங்கள் ஆக்கியுள்ளார்கள்.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 23 அக்டோபர், 2017

குழந்தைகளை வாழ்த்துங்கள்


கேள்வி: சுவாமிஜி! சித்தர்கள் துறவிகளா அல்லது இல்லறவாசிகளா?


✅ பதில்: இல்லற, துறவறம் என்பதன் பொருள் பற்றி முதலில் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும் இல்லறம் கொண்டு பொருளீட்டி, காத்து, தானும் துய்த்து, பிறருக்கும் கொடுப்பது இல்லறம். இல்லறம் என்றால் பொருளை அடிப்படையாகக் கொண்டது.
பொருளீட்டிக் காட்ட வேண்டுமென்றால் அதற்கு ஒரு இடம் வேண்டும். “திருமணம் செய்து கொண்டு இருவரும் வாழ்ந்தால்தான் இல்லறம்” என்பார்கள். அது தவறான கருத்து. பொருளீட்டிக் காத்து அளவுமுறையோடு துய்த்து, அறம் செய்தல் இல்லறமாகும்.
பொருளீட்டும் தொழிலை விட்டு அகத்தவத்தின் சாதனையால் பிரபஞ்ச ரகசியம் அறிந்து, உடல், உயிர், மனம், அறிவு, சீவகாந்தம் உணர்ந்து, அறநிலை தெளிந்து, அறிவுத்துறையில் முழுமை பெற்று, நேர்மை தவறாது ஒழுக்கவழி வாழும் அறிவை மக்களுக்குப் புகட்டி, அதன்மூலமாகத் தொண்டு செய்து வாழக்கூடியவர்கள் “துறவறம்” என்ற நிலையை உடையவர்கள்.
துறவறத்தான் என்றால் பொருளீட்டிக் காப்பது தவிர்த்து, அறிவுத்துறையிலுயர்ந்து தொண்டாற்றிக் கொண்டு இருப்பவன்.
ஆனால் சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டிலுமே இருந்தார்கள். தங்களுக்கு வேண்டிய பொருட்களை அவர்களே ஈட்டி, பிறருக்கும் உதவினார்கள். அதே போன்று அறிவுத்துறையிலும் மேன்மையடைந்து எல்லோருக்கும் அறிவுத்தொண்டாற்றினார்கள்.
அன்றும், இன்றும், என்றும் அவர்கள் தொண்டு எங்கும் ஏற்புடையதாயிருக்கின்றது. எனவே சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டுமிணைந்த நல்லற ஞானிகள் ஆவர்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

கேள்வி: சுவாமிஜி! சீவத்தோற்றம், மனத்தோற்றம் என்பதை விளக்க வேண்டுகிறேன்.



 ✅ பதில்: கெட்டிப்பொருள், நீர், காற்று, அழுத்தக் காற்று அல்லது வெப்பம் என்ற பௌதீகப் பொருட்களின் வரிசையில் ஐந்தாவது பூதமான விண் என்ற உயிர் புகுந்து உராய்ந்து ஓடும் பொழுது, அங்கு பரு உடலில் உள்ள செல்களே தடையாக உணரப்பெற்று, உயிர் அழுத்தம் உண்டாகி உணர்ச்சி நிலை பெற்றால் அது சீவத்தோற்றம் எனப்படும்.

 சீவனானது புலன்கள் மூலம் பொருள் தொடர்பு கொண்டு இன்பம், துன்பம் துய்க்கும்போது அது மனத் தோற்றம்.

 புலன்களைக் கடந்து மனதை மன அலை மீதே செலுத்தி அமைதி நிலை பெற்று, “நான் யார்”? என்று வினவி, ஆராய்ச்சி செய்யும் போது அறிவிற்கு ஏற்படும் விளக்கமே ஆன்மத் தோற்றம் ஆகும்.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 13 ஜூலை, 2016

சிற்றறிவு பேரறிவுடன் இணைந்து செயலாற்றப்படவேண்டும் என்பதை விளக்க வேண்டுகிறேன்.




மகரிஷி: புலன் இன்பத்தில் மட்டும் மனம் நிலைத்து இருக்கின்றபோது, மனம் அதில் எல்லை கட்டி உணர்ச்சி நிலையில்தான் இயங்கும். அதுதான் சிற்றறிவு; சிற்றின்பம் என்று சொல்வது.
பேரறிவு எனபது “நான் யார்” என்று தெரிந்து கொண்ட பிறகு வந்த அறிவு. எல்லாம் வல்ல இறைநிலையே இங்கு அறிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல எல்லாப் பொருளிலேயும் அறிவாக இருப்பது அதுவே தான் என்றபோது மனம் விரிந்து அந்தப் பெருள்நிலையோடு, ஆதி நிலையோடு, பிடிப்புகொள்கிறது. அந்தப் பிடிப்பிலிருந்து பார்க்கிறபோது, எல்லாப் பொருளும் ஒரே இடத்திலிருந்துதான் உற்பத்தியாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன. எந்த இடத்திலும் உணர்ச்சி ஒன்றுதான். அதனால்தான் அந்த உணர்ச்சிக்கு ஒத்தும், உதவியும் வாழவேண்டும் என்கிற தெளிவு வருகின்றபோது, இது பேரறிவு.
அப்படி இல்லாமல் எனக்கு இன்பம் வேண்டும். யார் என்ன ஆனாலும் சரி. யார் என்ன சொன்னாலும் சரி என்று குறுகியிருக்கின்றபோது இது சிற்றறிவு. நாம் இப்போது பெரும்பாலும் சிற்றறிவு நிலையிலிருந்து பழகி விட்டோம்.
அப்படியின்றி அடுத்து அடுத்து எந்த காரியம் செய்தாலும் மற்றவருக்கு முரண்பட்டு இல்லாமல், பிற்காலத்தில் முரண்பாடு ஏற்படாதவாறு, இறை நிலையினுடைய ஒழுங்கு அமைப்புக்கு கேடில்லாமல் நான் வாழவேண்டும் என்ற மன விரிவோடு செய்கிறபோது, பேரறிவோடு இணைந்து செயல்படுகிறோம்.
அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் அடுத்தடுத்து தியானம் செய்கிறபோது மனம், பதிவு செய்யக்கூடிய புலனறிவைக் கடந்து நல்லறிவிலே நிலைபெறுகிறது.
புலனறிவில் நிற்கும்போது மனம் இறைநிலையை நெருங்க முடியாதவாறு உணர்ச்சி நிலையிலிருக்கும். அது இறைநிலையை நெருங்க நெருங்க சிக்கலுக்கு விடை கிடைக்கும். இதுதான் பேரறிவோடு இணைவது.
அப்படி கிடைக்கக்கூடிய விடையை சிந்தித்துப் பார்த்தால் அடுத்து இறைநிலையிலேயே நின்று விளக்கங்களை பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். பழகப் பழக இதில் வெற்றி கிடைக்கும்.
வாழ்க வளமுடன்

செவ்வாய், 12 ஜூலை, 2016

சுவாமிஜி, மைய ஈர்ப்பு சக்தி (Gravitational Force) பற்றி தங்கள் கருத்தென்ன?...



பதில்: இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் எனும் இறுக்கும் ஆற்றலால் அணு முதற்கொண்டு அண்டம் ஈராக சுழற்சி வேகம் கொண்டு அவைகளின் மையப்பகுதி நெருக்கமுறுவதை ஈர்ப்பு ஆற்றல் (Gravitational Force) என்கிறோம். ஆனால் அது ஈர்க்கும் ஆற்றல் அல்ல. இறுக்கும் ஆற்றல் தான். சுழற்சியின் போது தோன்றும் தள்ளுவேகத்தை இறைவெளியின் சுற்றி அழுத்தக் கூடிய ஆற்றல் குறைக்கிறது. சுற்றியிருக்கக் கூடிய இறுக்க ஆற்றல் தள்ளும் ஆற்றலையும் மையத்தில் கொண்டு வந்து ஈர்ப்பு ஆற்றலாகச் சேர்த்து விடுகிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, “வேதான் துகள்” எனும் பரமாணுவின் தன்மைகள் யாவை?



பதில்: சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தும் தன்மையால் வேதான்கள் கணக்கிலடங்காத வேகத்தில் தம்மைத்தாமே சுற்றிக் கொள்கின்றன. அதனால் அவை கோள வடிவமைப்பை பெறுகின்றன. வேதான் சுழற்சியால் ஏற்படும் விரிவலை விலக்கும் ஆற்றலாக எதனையும் வெளித்தள்ளிக் கொண்டேயிருக்கிறது. இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் அது தன் மையப்பகுதியை நோக்கி நெருக்கமுறுகிறது. அங்கு தள்ளும், கொள்ளும் ஆற்றலாகிய காந்தம் மலர்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 11 ஜூலை, 2016

மூலாதாரச் சக்கரம் உடலில் எங்கு அமைந்துள்ளது? உடலின் முன்புறமா? பின்புறமா?



பதில்:
மலத்துவாரத்திற்கு ஒரு அங்குலம் மேலே பால் சுரப்பியில் அமைந்துள்ளது. தவம் செய்யும்போது மூலாதாரம் அமைந்துள்ள உடலின் மையப்பகுதியில் மனம் செலுத்த வேண்டும். முன்புறமோ,பின்புறமோ அல்ல.
“அஸ்வினி முத்திரை” பயிற்சி செய்யும்போது மூலாதாரத்தின் மையம் இயல்பாக உணரப்படும். குதிரை சானமிடும்போது தன ஆசனவாயை அசைக்கும் விதமே அஸ்வினி முத்திரை.
இந்த முத்திரையை செய்வதன் மூலம் ஆற்றல் இயல்பாக மூலதார சக்கரத்திற்கு செல்லும்

“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?

சந்தேகங்களுக்கு விளக்கம். – யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி – ANBOLI JAN. 1987
கேள்வி:
“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?
...
பதில்:
இதற்கு விளக்கம் “குரு, தன்னை பின்பற்றுகிறவர்கள் ஆன்மிகத்தில் உயர வகுத்து கொடுத்துள்ள பாதை” என்பதாகும்.
மணலில் நடக்கும் மனிதன் தன பாதச்சுவடுகளை விட்டுவிட்டுசெல்லும்போது அதை பின்பற்றி வருகிறவர்களுக்கு அது பெரிதும் உதவும்.
“குருவின் பாதங்கள்” எனபது “குரு வகுத்து கொடுத்த ஆன்மிக பயிற்சிகள், தத்துவங்கள்” என்று கருதவேண்டும்.
குறிப்பு:
இந்த குருவின் பதிலை ஏற்று குரு பாதங்களை படமாக போட்டு அதற்க்கு பூ அலங்காரம் செய்வதை விடுத்து, பயிற்சிகளை செய்வதிலும் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தி குருவுக்கு உண்மையான சேவை செய்வோம்.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சுவாமிஜி! உலகில் நான்கில் மூன்று பகுதி கடலாக இருந்தும் மழை அடிக்கடி பொய்ப்பது ஏன்?


பதில்: உலகில் 72 சதவீதம் நீரால் சூழப்படுள்ளது. மீதம் 28 சதவீதம் தான் நிலம். உலகிற்கு மழை எவ்வளவு உண்டாகிறது என்றால் சூரிய வெளிச்சம் கடல் மீது எந்த அளவிற்குப்படுகிறதோ அந்த அளவிற்கே நீர் ஆவியாகி மேலே செல்கிறது. ஆவியான கடலைத்தான் வானத்தில் மேகம் என்கிறோம்.
ஆவியாகி மேலே சென்ற நீர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறங்கித்தானே ஆகவேண்டும்! மழையும் பெய்துதானே ஆக வேண்டும். பெய்கிறது; ஆனால் தேவையில்லாத இடத்தில் பெய்கிறது. அதாவது கடலிலேயே பெய்து விடுகிறது. அப்படியானால் இயற்கைகுப் பாரபட்சமா? இல்லை; மனிதனைத் தண்டிக்க வேண்டும் என்று அது அவ்வாறு செய்வதில்லை.
இயற்கை பொய்ப்பதற்கு மனிதனுடைய எண்ணம் தான் காரணமாக இருக்கிறது. எண்ணமே இயற்கையின் சிகரமாகும். மனித மனம் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது கிடைக்க வேண்டிய தெல்லாம் கிடைக்கும். ஆனால் ஒருவர் மற்றவருக்கு அது கிடைத்துவிடக்கூடாது, அவன் நம்மை விட நன்றாக இருந்து விடக்கூடாது என்று சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இயற்கை என்ன செய்யும்?
சில நூறு பேர்களை ஒரு சேர நேசிக்கிறவர்கள், உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அப்படி யாரேனும் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவரால், சிறிது லாபம் அடைகின்றவர்கள் தவிர வேறுயாருமில்லை.
இப்படி ஒருவருக்கொருவர் சபித்துக் கொள்ளும் போது, அதற்கு இயற்கையில் ஒரு விளைவு வரவேண்டும் அல்லவா? இயற்கையின் கருணைச் செயல் அங்கு தடைப்படுகிறது. அதனால் மனிதன் வாழாத இடத்தில், மழை பெய்துவிட்டுச் செல்கிறது. மனிதமனம், தானே இறையாற்றலாக உள்ளதை உணர்ந்து, தன்னால் இயற்கைக்குக் களங்கம் வராது இருக்க நல்லதையே எண்ணிப் பழக வேண்டும்.
முழுமையின் பின்னமாக மனிதமனம் முழுமையாலே இணைக்கப் பட்டுள்ளது. அங்கு முனைப்புத் தோன்றி அன்பு வரண்டுவிடும் பொழுது, இயற்கையின் சீர்மையும், ஒழுங்கும் கெடுகிறது. அவ்வாறு கெடாமல் இருக்க மனிதன் உயிர்களிடம் வற்றாத அன்பு செய்தல் வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி அவர்களே! “வடக்கில் தலை வைத்து வாழ்ந்தவர்கள் இல்லை” என்கிறார்களே, அது ஏன்?


பதில்: பூமியை சரிபாதியாகப் பிரித்தால் அதன் பூமத்திய ரேகையில் (Equator) இருந்து வடக்குப் பகுதியில் கெட்டிப் பொருள் அதிகமாக இருக்கும். தெற்குப் பகுதியில் கெட்டிப் பொருளைவிட லேசான நீர் பகுதி அதிகம். அதனால் காந்த ஈர்ப்பு சக்தியின் திணிவு (Intensity) வடக்குப் பகுதியில் அதிகமாக இருக்கும்.
வடக்கில் தலை வைத்துப் படுப்பதால் ஈர்ப்பு சக்தி காரணமாக உடல் முழுவதும் உள்ள சீவகாந்த சக்தி தலைப் பக்கமாக ஈர்க்கப்படும். அது நுண்மையான மூளைப்பகுதிக்கு நலனளிக்காது என்பதால் வடக்கில் தலைவைத்துப் படுக்கலாகாது என்கிறார்கள்.
நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும் நம் எடையை கால் பகுதி தாங்கிக் கொண்டுள்ளது. சீவகாந்த சக்தியின் ஈர்ப்பு உடலில் கால்பகுதி வழியாக பழகிவிட்ட ஒன்றானதால் அதனால் பாதிப்பு இல்லை. அதனால் கால் பகுதியை வடக்கிலும், மூளைப் பகுதியைத் தெற்கிலும் வைத்துப் படுப்பது நலமளிக்கும் என்பதை விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, ஒரு செயலின் பதிவு எவ்வளவு காலம் தொடரும் ஒரு செயலுக்கும், அதன் விளைவுக்கும் இடையே கால நீளம் உண்டா?


பதில்: காலம் என்பது தனியாக எங்கும் இல்லை. பூமியின் சுழற்சியை வைத்து காலம் எனச் சொல்கிறோம். செயல் என்பது இயக்கம், ஒரு இயக்கத்தின் தொடர் நீட்டத்தைக் கணிக்கும் அளவு காலமாகும். இயக்கமும் காலமும் தனித்து இல்லை, பரமாணுவின் இயக்கம் தொடரும் வரை அதன் காந்தப் புலத்தில் பதிவான பதிவுகளும் தொடரும்.
வினை விளைவாகும் காலத்தைக் கணிக்க இயலாது. அது வினை ஆற்றுபவர் நோக்கம், இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருளுக்கேற்ப இன்ப, துன்ப, அமைதி பேரின்ப உணர்வுகளாக வருகின்றன.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜீ, நீதிபதி குற்றவாளிக்குத் தண்டனை தருகிறார். அத் தண்டனையைப் பெறும் கைதி நீதிபதிக்குச் சாபமிடுகிறான். அது நீதியைப் பாதிக்காதா?


பதில்: அங்கு பாதிப்பு இல்லை. நீதிபதி தண்டனை தருவது தவறு செய்தவரைத் திருத்த வேண்டும் என்பதற்காகத் தான். அவரைத் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. கைதி சாபமிடுவது அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சினத்தால் வருவதுதானே தவிர, மனம் நுணுகி இறைநிலைத் தெளிவு பெற்ற குணத்தால் வருவதல்ல. அந்நிலையில் சாப அலை பாதிக்காது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, சுத்தவெளி என்பது அமைதி நிலையில் உள்ளதா? அதில் சூழ்ந்தழுத்தும் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது. அது இயக்கமின்றி அமைதி நிலையிலேயே எப்பொழுதும் இருந்து இருக்கலாமே?


பதில்: சுத்தவெளி அமைதியாய் இருக்கிறது என்றால் அசைவற்றது (Static) என்று பொருளல்ல. அதில் ஆற்றல் நுண்ணியக்க நிலையில் (Kinematic Quivering State) இருக்கிறது. அது தன்னையே இறுக்கிக் கொள்ளக்கூடிய (Self Compressive Surrounding Force) ஆற்றலாகவும் உள்ளது. அந்த ஆற்றலானது எப்போதும் அதிகரித்துக் கொண்டே (Ever increasing) இருந்து கொண்டு இருக்கிறது. இந்தப் பண்பினால் சுத்தவெளி அமைதி நிலையில் இருக்க முடியாது.
அதனுடைய துண்டுபட்ட பகுதியாகிய நாம் அமைதியாக இருக்கிறோமா? ஒரு சில நேரங்களில் அமைதியாக இருப்பதாகக் கூறுகிறோம். ஆனால் அப்பொழுதும் உடலியக்கம் அல்லது மன இயக்கம் நடந்து கொண்டு தான் உள்ளது. சுத்த வெளி அமைதி நிலையிலேயே இருந்திருக்குமானால் பரிணாமமும் இல்லை. இந்த பிரபஞ்சமும் தோன்றியிருக்காது. நாமும் இருந்திடுக்க மாட்டோம்.

திங்கள், 4 ஏப்ரல், 2016

துவைதம், அத்துவைதம்

வாழ்க வளமுடன்.
எல்லாம் ஒரே இலக்கை நோக்கி செல்லும் வழியே. தேவையில்லை குழப்பம்.
மனிதன் பல்வேறுமுறைகளில் இறைவழிபாட்டினை செய்கிறான்.
1. உருவ வழிபாடாக
2. ஒரே உருவமாக
3. பல உருவங்களாக
4. உருவமற்றதாக
5. பஞ்ச பூதங்களாக
6. யாகம், ஹோமம் செய்வதன் மூலமாக
7. மந்திரங்கள், ஜபித்தல் மூலமாக
8. அவரவர்கள் மதங்கள் கூறிய வழியில்
9. சூரியனை, சந்திரனை, கோள்களை, நட்சத்திரங்களை வணங்குவதன் மூலம்
10. சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்வதன் மூலம்
இந்த முறைகளில் கடவுளை வணங்குவதை புறவழிபாடு என்கிறோம்.
இந்த முறைகளில் கடவுள் வேறாக மனிதன் வேறாக பார்க்கிறோம்.
இதை “துவைதம்” என்கிறோம்.
கடவுளை இன்னொரு முறையிலும் வழிபடலாம்.
அது “அத்துவைதம்”.
இந்தக் கோட்ப்பாட்டின்படி கடவுள் என்கிற மாபெரும் சக்தியே மனிதஉரு வரையிலும் தன்மாற்றம் பெற்று வந்துள்ளது. கடலும் அதிலிருந்து எடுத்த ஒரு குவளை நீரும் போல.
கடவுள் வேறல்ல மனிதன் வேறல்ல என்கிற கோட்பாட்டை கொண்டது அத்வைதம். கடவுளின் ஒரு துளியே மனித மனம். அது இயல்பாக அடி மனத்தில் ஆறு தீய குணங்களற்றது. மேல் மனமே ஆறு தீய குணங்களுடன் உள்ளது.
இந்தப்பிரபஞ்சதிலுள்ள கண்களால் பார்க்க முடிந்த, மேலும் பார்க்க முடியாத, உணர மட்டுமே முடிந்த அனைத்து தோற்றங்கள் மற்றும் இயக்கங்களும் கடவுளின் தன்மாற்றமே.
கட+ உள் = கடவுள். வினைச்சொல். அகவழிபாட்டின் மூலம் உனக்கு வேண்டியதைப்பெறலாம் என்கிறவிதமாக மனதை உள்முகமாக திருப்பி, ஆழ்ந்து செல்வதை அகத்தவம் என்றார்கள்.
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் விரும்பும் முறையில் துவைதமாகவோ, அத்வைதமாகவோ கடவுள் வழிபாட்டை செய்ய உரிமை உள்ளது.
வேதாத்திரியம் அகத்தவம் தெய்வ வழிபாடுகள் அனைத்திலும் ஓர் சிறந்தவழிபாடு என்கிறது .
எனவே அகத்தவம் செய்கிறவர்கள் கடவுளை மற்றவழிகளில் வணங்கவில்லையே என்று பயப்படவோ, குறைபட்டுக்கொள்ளவோ தேவையில்லை. இதைப்புரிந்துகொண்டு தைரியமாக இவர்கள் மற்ற வழிபாட்டுமுறைகளில் இருந்து தானே விடுபடலாம்.
ஞானாசிரியர்கள் மற்ற வழிபாட்டு முறைகளை ஆதரிக்கவோ, குறைகாணவோ தேவையில்லை. நமது சங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்வோம். மற்றவர்களிடம் முரண்படாமல் அதே சமயம் ஏற்ற்றுக்கொண்ட அத்வைத கொள்கையில் மாறாமல் மகரிஷி வழியில் நின்று சேவை செய்வோம்.
அத்வைதக்கொள்கை: 1. கடவுள் அரூபம். 2. கடவுள் ஒன்றுதான். 3. எங்கும் உள்ளது. எல்லாம் வல்லது. 3. மனிதனாக, எல்லை கட்டிய சக்தியாக தன்மாற்றம் பெற்றிருப்பதும் கடவுளே.
அகத்தவ வழிபாட்டு முறையினால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் நேரம், பொருள், ஆற்றல், ஒருவர் வழிபாட்டினால் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏற்படும் தொந்திரவுகள் அனைத்தும் மிச்சம்.
வாழ்க வளமுடன்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

சாதனை தான் பயன் தரும்:

அறிவின் வளர்ச்சிக்கு மூன்று படிகள் உள்ளன அவை 

1) நம்பிக்கை 2) விளக்கம் 3) முழுமைப்பேறு (Faith, Understanding and Realisation ).

உடலைக் காக்கும் நெறியிலும் மூன்று ஒழுங்காற்றல் வேண்டும். அவை

1) ஒழுக்கம் 2) கடமை 3) ஈகை (Morality, Duty and charity).

இத்தகைய தெளிந்த நிலையில் மனிதன் வாழ்ந்து முழுமை பெற வேண்டுமெனில் கீழ்க்கண்ட ஏழு விதிகளை நன்கு உணர்ந்து ஆற்ற வேண்டும். அவை:

1) வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2) தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.

3) இயற்கையின் ஒழுங்கமைப்பையும் அதன் ஆற்றலின் விளைவான தவறற்ற காரண-விளைவு விதியையும் உணர்ந்து கொண்டும் மதித்தும் நடக்க வேண்டும்.

4)வாழ வேண்டிய முறையையும் ஆற்ற வேண்டிய செயல்களையும் வரிசையாகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

5) இத்தகைய வாழ்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல் வலிமையையும், திறமையையும், அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். இவற்றிற்கு முறையான உடல் பயிற்சி, உளப்பயிற்சி, சிந்தனை இவற்றைப் பழகிக் கொள்ள வேண்டும்.

6) விழிப்போடும், விடாமுயர்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றை பயன்படுத்த வேண்டும்.

7) அவ்வப்போது ஏற்படும் தவறுகளை அகத்தாய்வு ( Introspection), செயல் திருத்தம் என்ற இரண்டு வழிகளாலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஏழு விதிகளை நன்குணர்ந்து மனிதன் அறிவில் வளர்ச்சி பெற வேண்டும்; உடலையும் நன்கு காத்துக்
கொள்ள வேண்டும். இத்தகைய வாழ்வின் மூலமே மனிதன் பிறர்க்குப் பாரமாக இல்லாமலும், பிறருக்கு உதவியாகவும் இருந்து கொண்டே தானும் நிறைவோடும், மகிழ்ச்சியோடும் வாழலாம். முயல்க! சாதனை தான் பயன்தரும்.



                                                                                                   * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்".
.
நல்லோரைப் பின்பற்று:
"சீர் திருத்த நோக்குடையாய்
சிந்தனைசெய்! புவிவாழ்வை
யார் திருத்தம் செய்துள்ளார்
இதுவரையில்? - பார்திருந்த
ஆராய்ச்சி, நல்லொழுக்கம்
அன்பு செயல், இவையன்றோ
வேராச்சு? அதனால் நீ
விவேகமுடன் அவ்வழிச்செல்."
.
நிறை உணர்வு:-
"உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும்
உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து
திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன்;
செய்த வினைப் பதிவுகளைத் தூய்மை செய்துகொண்டேன்.
கருத்தொடராய்ப் பின் பிறவி இல்லை இனியில்லை
கர்மவினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்
அந்தப் பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி 

திங்கள், 18 ஜனவரி, 2016

மகளிரும் ஆன்மீகமும்

வாழ்க்கையானது ஆண், பெண் என்ற இருவரும் இணைந்து தான் நடைபெறுகின்றது. இந்த உலகில் எல்லோருக்குமே இந்த இரண்டுபேர் கூட்டுறவில் தான் பிறவி தோன்றுகிறது. என்றாலும் கூட ஒரு சில காரணங்களால் உலகெங்குமே ஆண்கள் மேலோங்கவும் பெண்கள் கீழாக மதிக்கப்பெறவும் ஒரு சந்தர்ப்பம் இருந்தது. காலத்தால் அந்தச் சந்தர்ப்பம் போனபிறகு கூட வழக்கத...்தை ஒட்டி, பழக்கத்தை ஒட்டி அதே ஆதிக்க மனப்பான்மை ஆண்களுக்கு ஏற்பட்டுத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது ஒரு சமுதாயம் திருந்த வேண்டுமானால் இந்தக் குறைபாடுகள் நீங்கத்தான் வேண்டும். அந்தக் குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்கு ஒரு சாரார் மட்டும் - ஆண்கள் மட்டுமோ, அல்லது பெண்கள் மட்டுமோ - முயன்றால் போதாது. இரண்டு பேர்களுமே அந்தக் குறைபாடுகளை உணர வேண்டும்; அவற்றை முறையாகப் போக்கிக் கொள்கின்ற விருப்பம் அவர்களுக்கு வர வேண்டும்.

ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டீர்களானால் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும், அந்தக் குடும்பத்திலே நல்ல குழந்தை பிறக்க வேண்டும், அந்தக் குழந்தை அறிவுடையவனாக, சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக வாழ வேண்டும். குடும்பத்திற்கும் நல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகிறோம். அப்படியானால் அந்தக் குழந்தைப்பேறுக்கு உரிய ஆண், பெண் இருவருமே சமஉரிமை, அறிவிலே திறமை, நுட்பம் இவை நிறைந்தவர்கலாகத்தான் இருக்க வேண்டும். ஆண்களுக்கு மாத்திரம் சில கல்வி வசதி செல்வ வசதி, இன்னும் அதிகார வசதி எல்லாமே வைத்துக் கொண்டு பெண்களுக்கு அவை மறுக்கப்பட்டால் என்ன ஆகும்?. ஒரு புறம் அறிவிலே அல்லது செல்வத்திலே, மற்ற எல்லாவற்றிலும் எழுச்சி, மற்றொரு புறத்திலே எல்லாவற்றிலும் தாழ்ச்சி. அங்கே பிறக்கக்கூடிய குழந்தைகூட அப்படித்தான் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வினை நீக்கிக் கொள்ள வேண்டும்.



.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உண்மையோடும் நேர்மையோடும் உள்ளோர்க்குத் துன்பங்கள்
உண்டாகா எனும் கருத்து ஒரு மயக்கக் கற்பனையே.
உண்மை ஒளியாய் வாழ்ந்த உலக அறிஞர் பலர்க்கு
உண்டான தொல்லைகளை யூகித்து உணர்ந்திடுவீர் !. "
.
வாழ்த்த மனம் நிறையும் :-
"மனைவியவள் தனைமதிக்க வில்லையென்ற குறையால்
மனம்வருந்தும் கணவருக்கும், மணந்தவர் பொறுப்பாய்
எனைமதிக்க வில்லையென்று ஏங்கும் பெண்களுக்கும்
இன்பவாழ்வு மலர்வதற்கு ஏற்றவழி சொல்வேன்;
நினைவு கூர்ந்துன் வாழ்க்கைத்துணை இதுவரை உங்கட்கு
நிறை மனத்தோடன்பு கொண்டு செய்தவெல்லாம் பாரீர்,
உனைமதித்து ஆற்றியுள்ள இனியசெயல் அனைத்தும்
உள்நினைந்து நன்றிகூறி வாழ்த்த மனம் நிறையும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
              
                                                                                                                

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

குழந்தை வளர்ப்பு:

வாழ்க வையகம்                                                         வாழ்க வளமுடன்

ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்றவாறுதான் அமையும். பெற்றோர்களுடைய வினைத்தொடரே குழந்தை. நல்ல குழந்தை வேண்டுமானால் பெற்றோர்கள் உடலை, உயிரை, அறிவைச் செம்மையாகப் பேணிக் காக்க வேண்டும். தவம், உடற்பயிற்சி ஆராய்ச்சி இவற்றால் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் போதைப் பொருட்களை உட்கொண்ட மயக்கத்திலும், இருவரில் ஒருவர் வருத்தமாகவோ, நோயுற்றோ இருக்கும் நாளில் ஒரு குழந்தை கருத்தரிக்குமேயானால், அது உடலிலும், அறிவிலும், தரம் குறைந்ததாகவே அமையும். மேலும் குழந்தை கருவுற்றிருக்கும் காலத்தில் தாயின் மனம் உற்சாகமாக இருக்கும்படி அந்தக் குடும்பத்தினர் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அறிவின் விழிப்பில் உற்பத்தியாகும் குழந்தை, உடல் அறிவு நலன்களோடு, குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் நலம் விளைக்கத்தக்க நல்நிதியாக அமையும்.

பிறந்த பிறகும் வளர்க்கும் முறையில் மிகவும் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். அந்தக் குழந்தை எந்த எந்தச் செயலில் ஈடுபடக் கூடாது என்று நினைக்கிறோமோ, அந்தச் செயல்களைப் பெற்றோர்கள் குழந்தையின் எதிரில் செய்யவே கூடாது.

கடைசியாக மக்களுக்குச் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் எனபது இந்த விஞ்ஞான காலத்தில் அவசியமில்லை. அவர்களுக்கு, வாழ்வதற்கு ஏற்ற கல்வியை கற்பித்து வைத்தால் அதுவே அழிக்க முடியாத பெரும் சொத்தாகும்.



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
சிறந்த சீர்திருத்தம் :
"குழந்தைகளைக் கொண்டுலகைச் சீர்திருத்தக்
கொடுமையின்றி கருத்து செயல் இரண்டும் வாழ்வில்
இழைந்துயரும். படிப்படியாய் உலகம் உய்யும்.
இது உலக சமுதாய சங்க நோக்கம்."
.
குழந்தை வயதிலேயே சீர்திருத்தம் ஆரம்பமாக வேண்டும் :-
"வழக்கத்தை மாற்றி சீர்திருந்தி வாழ
வலிவு முதலில் மனதில் அமைய வேண்டும்;
பழக்கத்திற் கேற்றபடி செயல் கருத்து
பதிவாகி மக்களுக்குப் பல கோணத்தில்
ஒழுக்க உணர்வோடு நீதி இன்பம் நேர்மை
உயர்வு எனும் சொற்களுக்கு அர்த்தம் காணும்
இழுக்கில்லா முழுத்திருத்தம் உலகில் காண
ஏற்றவழி குழந்தைகளைப் பண்படுத்தல்."
.
பெற்றோர் தவம் பிள்ளைகள் நலம் :
"பெற்றோர்கள்வழி வாழ்க்கைமுறை தொடர்ந்து
பிள்ளைகளின் உடல்வளமும் அறிவும்மாகும்;
பெற்றோர்கள் நலம்அமைந்த மக்கள் வேண்டில்
பிழைநீக்கும் தவம்அறமும் ஆற்ற வேண்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 16 ஜனவரி, 2016

வாழ்த்து :



வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு - சங்கிலித் தொடர்பு ஏற்பட்டு வாழ்த்து அதன் மூலம் பாய்ந்து வேலை செய்யும். ஒருவரை நாம் வாழ்த்தும் தகுதியைப் பெறுகிறோம். அந்த அளவுக்கு நமது பெருந்தன்மை தானே வளர்ச்சியடைகிறது. இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி அதன் மூலம் அடி மனத்திற்கும் பரவி நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும். வெறுப்புணர்ச்சி தானே மறைந்துவிடும்.
.

ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்கும் இடையேயுள்ள உயிர்த் தொடர் மூலம் அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி தகப்பன் விருப்பப்படி நடக்கும்படி செய்துவிடும். கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான். இது நான் அனுபவமாக பல குடும்பங்களில் கண்ட உண்மையாகும். வாழ்த்தின் மூலம் தேவையான நன்மைகளும் கிட்டும். ஆதலால்தான் கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும் பக்திப்பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். இதனால் 'மனவளம்' பெருகுவது நிச்சயம்.
.

"அருட்பேராற்றல் கருணையினால்,
உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம்,
உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்"

என்று வாழ்த்தி பயன்பெறுவோம்.
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்."
.

" எண்ணம், சொல், செயலால் எவருக்கும்
எப்பொழுதும் நன்மையே விளைவிக்க
நாட்டமாயிரு".
.

உலக நல வாழ்த்து :-

"உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.