"அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு, அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு ".
Vethathiri Maharishi
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
வியாழன், 5 ஜூலை, 2018
❓ கேள்வி: சுவாமிஜி! ஆன்மீகத்தில் எவ்வுயிர்களுக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது. பகைவனையும் நேசிக்க வேண்டும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட நியதியாக இருக்கும் பொழுது, அர்ச்சுனனிடம் உன் பகைவர்களை கொல்வதில் தவறில்லை என்கிறாரே கீதையில் கிருஷ்ணர், இது நியாயமானதா?
✅ பதில்: பொதுவாக சண்டைக்குப் போகும் சிப்பாய்க்கு கூறும் அறிவுரை தான் இது. ஆரம்ப காலத்தில் மனிதன் ஒருவனை ஒருவன் கொன்று குவித்து வாழ்வது தான் நடந்தது. அந்தக் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதைதான் மகாபாரதம்.
சண்டையே இல்லாது வாழ்வது எப்படி என்று ஆராய்ந்து, மனித வாழ்வின் நோக்கத்தை விளக்க வந்த நூல்கள் மிக அரிது. திருக்குறள் போன்று மனித வாழ்வை முழுவதும் அறிந்து தெரிவிக்கும் மற்றொரு நூல் இன்னும் வரவில்லை.
மனிதன் பரிணாம வளர்ச்சியில் பல சீவ இனங்களைக் கடந்து தான் வந்திருக்கிறான். இறுதியில் குரங்கு மனிதனாக இருந்து, அதன்பின் மலைவாழ் மனிதனாக வாழ்ந்தான். அப்போது அவனுக்கு உடுக்க உடை, வசிக்க வீடு மற்றும் அறநெறி என்ற ஒன்றும் இருக்கவில்லை. இன்று கூட ஆதிகாலத்து மனிதன் எப்படி வாழ்ந்தானோ அது போல் ஆப்பிரிக்காவிலும் மலேசியக் காடுகளிலும் வாழ்கின்றார்கள். அந்நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, அன்பு, கருணை ஏதாகிலும் இருக்குமா? உருவத்தில் மனிதனாக இருந்தாலும் விலங்கினம் போன்று தான் வாழ்ந்து வருகிறான். இன்னும் விலங்கினப் பதிவும் செயலும் அவனுக்கு அப்படியே உள்ளது. காலத்தால் படிப்படியாக அறிவு உயர்ந்து கொண்டே வருகிறது. இருந்த போதும் கருமையத்தில் உள்ள விலங்கினப்பதிவு சந்தர்ப்பம் கிடைக்கும் போது சீறிக் கொண்டு வந்து செயலாகிறது. இவை மனிதனுக்கு விலங்கின வித்துத் தொடராக வந்த பதிவுகளாகும்.
மனித குலத்திற்கு விலங்கினத்திலிருந்து தவிர்க்க முடியாத மூன்று பதிவுகள் வந்திருக்கிறது. விலங்கினங்களுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது. தன் வலுவால் கொல்லக் கூடியதும், தன் வாய்க்குள் தள்ளக் கூடியதுமான ஏதோ ஒரு சீவனைப் பிடித்து உண்கிறது. அங்கு மூன்று குற்றங்கள் நிகழ்கின்றன.
ஒன்று கொலை; இரண்டு அதன் உடலைப் பறித்துண்ணல் என்ற திருட்டு; மூன்று அது வாழும் சுதந்திரத்தை, உரிமையைத் தடுத்தலாகும். விலங்கினத்தின் இந்த மூன்று குற்றங்கள் தான் வித்து பதிவாக வந்து ஆறறிவு பெற்ற மனிதனிடத்திலும் தொடர்கிறது.
உலகெங்கும் உள்ள குற்ற விளக்கச் சட்டங்களை (Criminal Procedure Code) எடுத்து ஆராய்ந்தால் அனைத்தும் இந்த மூன்று குற்றங்களுக்குள் அடங்கி விடும். இதை மனிதன் தெரிந்து கொண்டால், “நான் விலங்கு இல்லை; ஆறறிவு பெற்ற மனிதனாக வந்திருக்கிறேன். வாழ்வின் நிறைவில் இறைநிலையை அடைவது எனது நோக்கமாகும். அது போன்று தான் எல்லா உயிர்களும், எல்லா மனிதர்களும் தோன்றியுள்ளார்கள். அதனால் நான் எந்த உயிருக்கும் துன்பம் செய்ய மாட்டேன், என் பகைவர்களையும் நேசிப்பேன். இதுதான் மனிதப் பிறவி எடுத்த எனது பண்பு” என்று நினைத்தானானால் அந்த எண்ணமே அவனை உயர்த்தி விடும். மனிதனாக உள்ளவன் அப்போது தான் விலங்கினத்தை விட்டு மனிதனாகிறான். அதற்கு மேலான மனிதனாகி விட்ட பிறகு அவனுக்குள் உள்ள இறைநிலை பிரகாசிக்க ஆரம்பிக்கும் பொழுது தெய்வமாகிறான்.
அங்கு பகைவர்களை மன்னிக்கவும், பிறகு நேசிக்கவும் தான் சொல்வான், கொல்லச் சொல்ல மாட்டான். பிறரைக் கொன்று வாழ்தல் நீதியெனில் பிறகு உலகில் மிஞ்சுபவர் யார்? இந்தக் கவியைக் கவனியுங்கள்.
“உலகம் என்ற மண் மீது அனைவருமே பிறந்தோம்
உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு
உலகெங்கும் ஒளிவீசும் சூரியனும் ஒன்றே
உள்ளகடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய
உலகில் உள்ளோர் இதில் ஒன்றும் செய்ததில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப்போவார்
உலகில் ஒரு பகுதியினர் மற்றவரைக் கொன்று
உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்”
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
திங்கள், 2 ஜூலை, 2018
❓ கேள்வி: மகரிஷி அவர்களே! சித்தர்களின் பாடல்களில் 51 அட்சரங்கள் உள்ளன என்கிறார்களே, அதைத் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
✅ பதில்: அட்சரம் என்றால் ஒலியைக் குறிக்கும் எழுத்து. அட்சரத்திற்கு அடிப்படை மௌனம். அதிலிருந்து “அ” என்று விரிந்தது முதல் அட்சரம் “அ” விலிருந்து இன்றைக்கு 31 அட்சரங்கள் தமிழில் உள்ளன. வடமொழியில் 47 அட்சரங்கள் இருக்கின்றன. அங்கும் மூன்று ஒலிகள் குறைவு. அதனால் அவர்கள் அராபியில் இருந்து அந்த ஒலியை எடுத்துக் கொண்டு அதுபோன்ற சில எழுத்துக்களைக் கண்டுபிடித்துச் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். அதையும் சேர்த்தால் 50 அட்சரங்கள் வந்துவிடும். இந்த 50 அட்சரங்களைக் கொண்டு எல்லா சப்தங்களையும் எழுதி விடலாம்.
இந்த 50 ஒலிகளிலும்கூட சில ஜீவன்களின் சப்தத்தை எழுத முடியாது. (உ.ம்) பல்லி சப்தம் “த்ச”: பையன் மாடு ஓட்டுவது, குழந்தைகளை முத்தமிடும்போது வரும் சப்தம், இவையெல்லாம் காற்று வெளியிலிருந்து உள்ளே போகும் சப்தங்கள். அதனால் இவைகளை எழுத முடியாது. உள்ளேயிருந்து வெளிவரும் சப்தங்களைத்தான் எழுத முடியும். இந்த 50 அட்சரங்களுடன் “ஓம்” என்ற மௌன ஒலியும் சேர்த்து 51 அட்சரங்கள் ஆக்கியுள்ளார்கள்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)