Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 13 ஜூலை, 2016

சிற்றறிவு பேரறிவுடன் இணைந்து செயலாற்றப்படவேண்டும் என்பதை விளக்க வேண்டுகிறேன்.




மகரிஷி: புலன் இன்பத்தில் மட்டும் மனம் நிலைத்து இருக்கின்றபோது, மனம் அதில் எல்லை கட்டி உணர்ச்சி நிலையில்தான் இயங்கும். அதுதான் சிற்றறிவு; சிற்றின்பம் என்று சொல்வது.
பேரறிவு எனபது “நான் யார்” என்று தெரிந்து கொண்ட பிறகு வந்த அறிவு. எல்லாம் வல்ல இறைநிலையே இங்கு அறிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல எல்லாப் பொருளிலேயும் அறிவாக இருப்பது அதுவே தான் என்றபோது மனம் விரிந்து அந்தப் பெருள்நிலையோடு, ஆதி நிலையோடு, பிடிப்புகொள்கிறது. அந்தப் பிடிப்பிலிருந்து பார்க்கிறபோது, எல்லாப் பொருளும் ஒரே இடத்திலிருந்துதான் உற்பத்தியாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன. எந்த இடத்திலும் உணர்ச்சி ஒன்றுதான். அதனால்தான் அந்த உணர்ச்சிக்கு ஒத்தும், உதவியும் வாழவேண்டும் என்கிற தெளிவு வருகின்றபோது, இது பேரறிவு.
அப்படி இல்லாமல் எனக்கு இன்பம் வேண்டும். யார் என்ன ஆனாலும் சரி. யார் என்ன சொன்னாலும் சரி என்று குறுகியிருக்கின்றபோது இது சிற்றறிவு. நாம் இப்போது பெரும்பாலும் சிற்றறிவு நிலையிலிருந்து பழகி விட்டோம்.
அப்படியின்றி அடுத்து அடுத்து எந்த காரியம் செய்தாலும் மற்றவருக்கு முரண்பட்டு இல்லாமல், பிற்காலத்தில் முரண்பாடு ஏற்படாதவாறு, இறை நிலையினுடைய ஒழுங்கு அமைப்புக்கு கேடில்லாமல் நான் வாழவேண்டும் என்ற மன விரிவோடு செய்கிறபோது, பேரறிவோடு இணைந்து செயல்படுகிறோம்.
அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் அடுத்தடுத்து தியானம் செய்கிறபோது மனம், பதிவு செய்யக்கூடிய புலனறிவைக் கடந்து நல்லறிவிலே நிலைபெறுகிறது.
புலனறிவில் நிற்கும்போது மனம் இறைநிலையை நெருங்க முடியாதவாறு உணர்ச்சி நிலையிலிருக்கும். அது இறைநிலையை நெருங்க நெருங்க சிக்கலுக்கு விடை கிடைக்கும். இதுதான் பேரறிவோடு இணைவது.
அப்படி கிடைக்கக்கூடிய விடையை சிந்தித்துப் பார்த்தால் அடுத்து இறைநிலையிலேயே நின்று விளக்கங்களை பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். பழகப் பழக இதில் வெற்றி கிடைக்கும்.
வாழ்க வளமுடன்

செவ்வாய், 12 ஜூலை, 2016

சுவாமிஜி, மைய ஈர்ப்பு சக்தி (Gravitational Force) பற்றி தங்கள் கருத்தென்ன?...



பதில்: இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் எனும் இறுக்கும் ஆற்றலால் அணு முதற்கொண்டு அண்டம் ஈராக சுழற்சி வேகம் கொண்டு அவைகளின் மையப்பகுதி நெருக்கமுறுவதை ஈர்ப்பு ஆற்றல் (Gravitational Force) என்கிறோம். ஆனால் அது ஈர்க்கும் ஆற்றல் அல்ல. இறுக்கும் ஆற்றல் தான். சுழற்சியின் போது தோன்றும் தள்ளுவேகத்தை இறைவெளியின் சுற்றி அழுத்தக் கூடிய ஆற்றல் குறைக்கிறது. சுற்றியிருக்கக் கூடிய இறுக்க ஆற்றல் தள்ளும் ஆற்றலையும் மையத்தில் கொண்டு வந்து ஈர்ப்பு ஆற்றலாகச் சேர்த்து விடுகிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, “வேதான் துகள்” எனும் பரமாணுவின் தன்மைகள் யாவை?



பதில்: சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தும் தன்மையால் வேதான்கள் கணக்கிலடங்காத வேகத்தில் தம்மைத்தாமே சுற்றிக் கொள்கின்றன. அதனால் அவை கோள வடிவமைப்பை பெறுகின்றன. வேதான் சுழற்சியால் ஏற்படும் விரிவலை விலக்கும் ஆற்றலாக எதனையும் வெளித்தள்ளிக் கொண்டேயிருக்கிறது. இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் அது தன் மையப்பகுதியை நோக்கி நெருக்கமுறுகிறது. அங்கு தள்ளும், கொள்ளும் ஆற்றலாகிய காந்தம் மலர்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 11 ஜூலை, 2016

மூலாதாரச் சக்கரம் உடலில் எங்கு அமைந்துள்ளது? உடலின் முன்புறமா? பின்புறமா?



பதில்:
மலத்துவாரத்திற்கு ஒரு அங்குலம் மேலே பால் சுரப்பியில் அமைந்துள்ளது. தவம் செய்யும்போது மூலாதாரம் அமைந்துள்ள உடலின் மையப்பகுதியில் மனம் செலுத்த வேண்டும். முன்புறமோ,பின்புறமோ அல்ல.
“அஸ்வினி முத்திரை” பயிற்சி செய்யும்போது மூலாதாரத்தின் மையம் இயல்பாக உணரப்படும். குதிரை சானமிடும்போது தன ஆசனவாயை அசைக்கும் விதமே அஸ்வினி முத்திரை.
இந்த முத்திரையை செய்வதன் மூலம் ஆற்றல் இயல்பாக மூலதார சக்கரத்திற்கு செல்லும்

“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?

சந்தேகங்களுக்கு விளக்கம். – யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி – ANBOLI JAN. 1987
கேள்வி:
“குருவின் பாதங்கள்” என்றால் என்ன?
...
பதில்:
இதற்கு விளக்கம் “குரு, தன்னை பின்பற்றுகிறவர்கள் ஆன்மிகத்தில் உயர வகுத்து கொடுத்துள்ள பாதை” என்பதாகும்.
மணலில் நடக்கும் மனிதன் தன பாதச்சுவடுகளை விட்டுவிட்டுசெல்லும்போது அதை பின்பற்றி வருகிறவர்களுக்கு அது பெரிதும் உதவும்.
“குருவின் பாதங்கள்” எனபது “குரு வகுத்து கொடுத்த ஆன்மிக பயிற்சிகள், தத்துவங்கள்” என்று கருதவேண்டும்.
குறிப்பு:
இந்த குருவின் பதிலை ஏற்று குரு பாதங்களை படமாக போட்டு அதற்க்கு பூ அலங்காரம் செய்வதை விடுத்து, பயிற்சிகளை செய்வதிலும் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தி குருவுக்கு உண்மையான சேவை செய்வோம்.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சுவாமிஜி! உலகில் நான்கில் மூன்று பகுதி கடலாக இருந்தும் மழை அடிக்கடி பொய்ப்பது ஏன்?


பதில்: உலகில் 72 சதவீதம் நீரால் சூழப்படுள்ளது. மீதம் 28 சதவீதம் தான் நிலம். உலகிற்கு மழை எவ்வளவு உண்டாகிறது என்றால் சூரிய வெளிச்சம் கடல் மீது எந்த அளவிற்குப்படுகிறதோ அந்த அளவிற்கே நீர் ஆவியாகி மேலே செல்கிறது. ஆவியான கடலைத்தான் வானத்தில் மேகம் என்கிறோம்.
ஆவியாகி மேலே சென்ற நீர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறங்கித்தானே ஆகவேண்டும்! மழையும் பெய்துதானே ஆக வேண்டும். பெய்கிறது; ஆனால் தேவையில்லாத இடத்தில் பெய்கிறது. அதாவது கடலிலேயே பெய்து விடுகிறது. அப்படியானால் இயற்கைகுப் பாரபட்சமா? இல்லை; மனிதனைத் தண்டிக்க வேண்டும் என்று அது அவ்வாறு செய்வதில்லை.
இயற்கை பொய்ப்பதற்கு மனிதனுடைய எண்ணம் தான் காரணமாக இருக்கிறது. எண்ணமே இயற்கையின் சிகரமாகும். மனித மனம் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது கிடைக்க வேண்டிய தெல்லாம் கிடைக்கும். ஆனால் ஒருவர் மற்றவருக்கு அது கிடைத்துவிடக்கூடாது, அவன் நம்மை விட நன்றாக இருந்து விடக்கூடாது என்று சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இயற்கை என்ன செய்யும்?
சில நூறு பேர்களை ஒரு சேர நேசிக்கிறவர்கள், உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அப்படி யாரேனும் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவரால், சிறிது லாபம் அடைகின்றவர்கள் தவிர வேறுயாருமில்லை.
இப்படி ஒருவருக்கொருவர் சபித்துக் கொள்ளும் போது, அதற்கு இயற்கையில் ஒரு விளைவு வரவேண்டும் அல்லவா? இயற்கையின் கருணைச் செயல் அங்கு தடைப்படுகிறது. அதனால் மனிதன் வாழாத இடத்தில், மழை பெய்துவிட்டுச் செல்கிறது. மனிதமனம், தானே இறையாற்றலாக உள்ளதை உணர்ந்து, தன்னால் இயற்கைக்குக் களங்கம் வராது இருக்க நல்லதையே எண்ணிப் பழக வேண்டும்.
முழுமையின் பின்னமாக மனிதமனம் முழுமையாலே இணைக்கப் பட்டுள்ளது. அங்கு முனைப்புத் தோன்றி அன்பு வரண்டுவிடும் பொழுது, இயற்கையின் சீர்மையும், ஒழுங்கும் கெடுகிறது. அவ்வாறு கெடாமல் இருக்க மனிதன் உயிர்களிடம் வற்றாத அன்பு செய்தல் வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி அவர்களே! “வடக்கில் தலை வைத்து வாழ்ந்தவர்கள் இல்லை” என்கிறார்களே, அது ஏன்?


பதில்: பூமியை சரிபாதியாகப் பிரித்தால் அதன் பூமத்திய ரேகையில் (Equator) இருந்து வடக்குப் பகுதியில் கெட்டிப் பொருள் அதிகமாக இருக்கும். தெற்குப் பகுதியில் கெட்டிப் பொருளைவிட லேசான நீர் பகுதி அதிகம். அதனால் காந்த ஈர்ப்பு சக்தியின் திணிவு (Intensity) வடக்குப் பகுதியில் அதிகமாக இருக்கும்.
வடக்கில் தலை வைத்துப் படுப்பதால் ஈர்ப்பு சக்தி காரணமாக உடல் முழுவதும் உள்ள சீவகாந்த சக்தி தலைப் பக்கமாக ஈர்க்கப்படும். அது நுண்மையான மூளைப்பகுதிக்கு நலனளிக்காது என்பதால் வடக்கில் தலைவைத்துப் படுக்கலாகாது என்கிறார்கள்.
நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும் நம் எடையை கால் பகுதி தாங்கிக் கொண்டுள்ளது. சீவகாந்த சக்தியின் ஈர்ப்பு உடலில் கால்பகுதி வழியாக பழகிவிட்ட ஒன்றானதால் அதனால் பாதிப்பு இல்லை. அதனால் கால் பகுதியை வடக்கிலும், மூளைப் பகுதியைத் தெற்கிலும் வைத்துப் படுப்பது நலமளிக்கும் என்பதை விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, ஒரு செயலின் பதிவு எவ்வளவு காலம் தொடரும் ஒரு செயலுக்கும், அதன் விளைவுக்கும் இடையே கால நீளம் உண்டா?


பதில்: காலம் என்பது தனியாக எங்கும் இல்லை. பூமியின் சுழற்சியை வைத்து காலம் எனச் சொல்கிறோம். செயல் என்பது இயக்கம், ஒரு இயக்கத்தின் தொடர் நீட்டத்தைக் கணிக்கும் அளவு காலமாகும். இயக்கமும் காலமும் தனித்து இல்லை, பரமாணுவின் இயக்கம் தொடரும் வரை அதன் காந்தப் புலத்தில் பதிவான பதிவுகளும் தொடரும்.
வினை விளைவாகும் காலத்தைக் கணிக்க இயலாது. அது வினை ஆற்றுபவர் நோக்கம், இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருளுக்கேற்ப இன்ப, துன்ப, அமைதி பேரின்ப உணர்வுகளாக வருகின்றன.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜீ, நீதிபதி குற்றவாளிக்குத் தண்டனை தருகிறார். அத் தண்டனையைப் பெறும் கைதி நீதிபதிக்குச் சாபமிடுகிறான். அது நீதியைப் பாதிக்காதா?


பதில்: அங்கு பாதிப்பு இல்லை. நீதிபதி தண்டனை தருவது தவறு செய்தவரைத் திருத்த வேண்டும் என்பதற்காகத் தான். அவரைத் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. கைதி சாபமிடுவது அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சினத்தால் வருவதுதானே தவிர, மனம் நுணுகி இறைநிலைத் தெளிவு பெற்ற குணத்தால் வருவதல்ல. அந்நிலையில் சாப அலை பாதிக்காது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சுவாமிஜி, சுத்தவெளி என்பது அமைதி நிலையில் உள்ளதா? அதில் சூழ்ந்தழுத்தும் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது. அது இயக்கமின்றி அமைதி நிலையிலேயே எப்பொழுதும் இருந்து இருக்கலாமே?


பதில்: சுத்தவெளி அமைதியாய் இருக்கிறது என்றால் அசைவற்றது (Static) என்று பொருளல்ல. அதில் ஆற்றல் நுண்ணியக்க நிலையில் (Kinematic Quivering State) இருக்கிறது. அது தன்னையே இறுக்கிக் கொள்ளக்கூடிய (Self Compressive Surrounding Force) ஆற்றலாகவும் உள்ளது. அந்த ஆற்றலானது எப்போதும் அதிகரித்துக் கொண்டே (Ever increasing) இருந்து கொண்டு இருக்கிறது. இந்தப் பண்பினால் சுத்தவெளி அமைதி நிலையில் இருக்க முடியாது.
அதனுடைய துண்டுபட்ட பகுதியாகிய நாம் அமைதியாக இருக்கிறோமா? ஒரு சில நேரங்களில் அமைதியாக இருப்பதாகக் கூறுகிறோம். ஆனால் அப்பொழுதும் உடலியக்கம் அல்லது மன இயக்கம் நடந்து கொண்டு தான் உள்ளது. சுத்த வெளி அமைதி நிலையிலேயே இருந்திருக்குமானால் பரிணாமமும் இல்லை. இந்த பிரபஞ்சமும் தோன்றியிருக்காது. நாமும் இருந்திடுக்க மாட்டோம்.

திங்கள், 4 ஏப்ரல், 2016

துவைதம், அத்துவைதம்

வாழ்க வளமுடன்.
எல்லாம் ஒரே இலக்கை நோக்கி செல்லும் வழியே. தேவையில்லை குழப்பம்.
மனிதன் பல்வேறுமுறைகளில் இறைவழிபாட்டினை செய்கிறான்.
1. உருவ வழிபாடாக
2. ஒரே உருவமாக
3. பல உருவங்களாக
4. உருவமற்றதாக
5. பஞ்ச பூதங்களாக
6. யாகம், ஹோமம் செய்வதன் மூலமாக
7. மந்திரங்கள், ஜபித்தல் மூலமாக
8. அவரவர்கள் மதங்கள் கூறிய வழியில்
9. சூரியனை, சந்திரனை, கோள்களை, நட்சத்திரங்களை வணங்குவதன் மூலம்
10. சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்வதன் மூலம்
இந்த முறைகளில் கடவுளை வணங்குவதை புறவழிபாடு என்கிறோம்.
இந்த முறைகளில் கடவுள் வேறாக மனிதன் வேறாக பார்க்கிறோம்.
இதை “துவைதம்” என்கிறோம்.
கடவுளை இன்னொரு முறையிலும் வழிபடலாம்.
அது “அத்துவைதம்”.
இந்தக் கோட்ப்பாட்டின்படி கடவுள் என்கிற மாபெரும் சக்தியே மனிதஉரு வரையிலும் தன்மாற்றம் பெற்று வந்துள்ளது. கடலும் அதிலிருந்து எடுத்த ஒரு குவளை நீரும் போல.
கடவுள் வேறல்ல மனிதன் வேறல்ல என்கிற கோட்பாட்டை கொண்டது அத்வைதம். கடவுளின் ஒரு துளியே மனித மனம். அது இயல்பாக அடி மனத்தில் ஆறு தீய குணங்களற்றது. மேல் மனமே ஆறு தீய குணங்களுடன் உள்ளது.
இந்தப்பிரபஞ்சதிலுள்ள கண்களால் பார்க்க முடிந்த, மேலும் பார்க்க முடியாத, உணர மட்டுமே முடிந்த அனைத்து தோற்றங்கள் மற்றும் இயக்கங்களும் கடவுளின் தன்மாற்றமே.
கட+ உள் = கடவுள். வினைச்சொல். அகவழிபாட்டின் மூலம் உனக்கு வேண்டியதைப்பெறலாம் என்கிறவிதமாக மனதை உள்முகமாக திருப்பி, ஆழ்ந்து செல்வதை அகத்தவம் என்றார்கள்.
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் விரும்பும் முறையில் துவைதமாகவோ, அத்வைதமாகவோ கடவுள் வழிபாட்டை செய்ய உரிமை உள்ளது.
வேதாத்திரியம் அகத்தவம் தெய்வ வழிபாடுகள் அனைத்திலும் ஓர் சிறந்தவழிபாடு என்கிறது .
எனவே அகத்தவம் செய்கிறவர்கள் கடவுளை மற்றவழிகளில் வணங்கவில்லையே என்று பயப்படவோ, குறைபட்டுக்கொள்ளவோ தேவையில்லை. இதைப்புரிந்துகொண்டு தைரியமாக இவர்கள் மற்ற வழிபாட்டுமுறைகளில் இருந்து தானே விடுபடலாம்.
ஞானாசிரியர்கள் மற்ற வழிபாட்டு முறைகளை ஆதரிக்கவோ, குறைகாணவோ தேவையில்லை. நமது சங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்வோம். மற்றவர்களிடம் முரண்படாமல் அதே சமயம் ஏற்ற்றுக்கொண்ட அத்வைத கொள்கையில் மாறாமல் மகரிஷி வழியில் நின்று சேவை செய்வோம்.
அத்வைதக்கொள்கை: 1. கடவுள் அரூபம். 2. கடவுள் ஒன்றுதான். 3. எங்கும் உள்ளது. எல்லாம் வல்லது. 3. மனிதனாக, எல்லை கட்டிய சக்தியாக தன்மாற்றம் பெற்றிருப்பதும் கடவுளே.
அகத்தவ வழிபாட்டு முறையினால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் நேரம், பொருள், ஆற்றல், ஒருவர் வழிபாட்டினால் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏற்படும் தொந்திரவுகள் அனைத்தும் மிச்சம்.
வாழ்க வளமுடன்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

சாதனை தான் பயன் தரும்:

அறிவின் வளர்ச்சிக்கு மூன்று படிகள் உள்ளன அவை 

1) நம்பிக்கை 2) விளக்கம் 3) முழுமைப்பேறு (Faith, Understanding and Realisation ).

உடலைக் காக்கும் நெறியிலும் மூன்று ஒழுங்காற்றல் வேண்டும். அவை

1) ஒழுக்கம் 2) கடமை 3) ஈகை (Morality, Duty and charity).

இத்தகைய தெளிந்த நிலையில் மனிதன் வாழ்ந்து முழுமை பெற வேண்டுமெனில் கீழ்க்கண்ட ஏழு விதிகளை நன்கு உணர்ந்து ஆற்ற வேண்டும். அவை:

1) வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2) தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும், வாய்ப்புகளையும் கணித்துக் கொள்ள வேண்டும்.

3) இயற்கையின் ஒழுங்கமைப்பையும் அதன் ஆற்றலின் விளைவான தவறற்ற காரண-விளைவு விதியையும் உணர்ந்து கொண்டும் மதித்தும் நடக்க வேண்டும்.

4)வாழ வேண்டிய முறையையும் ஆற்ற வேண்டிய செயல்களையும் வரிசையாகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

5) இத்தகைய வாழ்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல் வலிமையையும், திறமையையும், அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். இவற்றிற்கு முறையான உடல் பயிற்சி, உளப்பயிற்சி, சிந்தனை இவற்றைப் பழகிக் கொள்ள வேண்டும்.

6) விழிப்போடும், விடாமுயர்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றை பயன்படுத்த வேண்டும்.

7) அவ்வப்போது ஏற்படும் தவறுகளை அகத்தாய்வு ( Introspection), செயல் திருத்தம் என்ற இரண்டு வழிகளாலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஏழு விதிகளை நன்குணர்ந்து மனிதன் அறிவில் வளர்ச்சி பெற வேண்டும்; உடலையும் நன்கு காத்துக்
கொள்ள வேண்டும். இத்தகைய வாழ்வின் மூலமே மனிதன் பிறர்க்குப் பாரமாக இல்லாமலும், பிறருக்கு உதவியாகவும் இருந்து கொண்டே தானும் நிறைவோடும், மகிழ்ச்சியோடும் வாழலாம். முயல்க! சாதனை தான் பயன்தரும்.



                                                                                                   * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்".
.
நல்லோரைப் பின்பற்று:
"சீர் திருத்த நோக்குடையாய்
சிந்தனைசெய்! புவிவாழ்வை
யார் திருத்தம் செய்துள்ளார்
இதுவரையில்? - பார்திருந்த
ஆராய்ச்சி, நல்லொழுக்கம்
அன்பு செயல், இவையன்றோ
வேராச்சு? அதனால் நீ
விவேகமுடன் அவ்வழிச்செல்."
.
நிறை உணர்வு:-
"உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும்
உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து
திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன்;
செய்த வினைப் பதிவுகளைத் தூய்மை செய்துகொண்டேன்.
கருத்தொடராய்ப் பின் பிறவி இல்லை இனியில்லை
கர்மவினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்
அந்தப் பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி 

திங்கள், 18 ஜனவரி, 2016

மகளிரும் ஆன்மீகமும்

வாழ்க்கையானது ஆண், பெண் என்ற இருவரும் இணைந்து தான் நடைபெறுகின்றது. இந்த உலகில் எல்லோருக்குமே இந்த இரண்டுபேர் கூட்டுறவில் தான் பிறவி தோன்றுகிறது. என்றாலும் கூட ஒரு சில காரணங்களால் உலகெங்குமே ஆண்கள் மேலோங்கவும் பெண்கள் கீழாக மதிக்கப்பெறவும் ஒரு சந்தர்ப்பம் இருந்தது. காலத்தால் அந்தச் சந்தர்ப்பம் போனபிறகு கூட வழக்கத...்தை ஒட்டி, பழக்கத்தை ஒட்டி அதே ஆதிக்க மனப்பான்மை ஆண்களுக்கு ஏற்பட்டுத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது ஒரு சமுதாயம் திருந்த வேண்டுமானால் இந்தக் குறைபாடுகள் நீங்கத்தான் வேண்டும். அந்தக் குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்கு ஒரு சாரார் மட்டும் - ஆண்கள் மட்டுமோ, அல்லது பெண்கள் மட்டுமோ - முயன்றால் போதாது. இரண்டு பேர்களுமே அந்தக் குறைபாடுகளை உணர வேண்டும்; அவற்றை முறையாகப் போக்கிக் கொள்கின்ற விருப்பம் அவர்களுக்கு வர வேண்டும்.

ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டீர்களானால் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும், அந்தக் குடும்பத்திலே நல்ல குழந்தை பிறக்க வேண்டும், அந்தக் குழந்தை அறிவுடையவனாக, சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக வாழ வேண்டும். குடும்பத்திற்கும் நல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகிறோம். அப்படியானால் அந்தக் குழந்தைப்பேறுக்கு உரிய ஆண், பெண் இருவருமே சமஉரிமை, அறிவிலே திறமை, நுட்பம் இவை நிறைந்தவர்கலாகத்தான் இருக்க வேண்டும். ஆண்களுக்கு மாத்திரம் சில கல்வி வசதி செல்வ வசதி, இன்னும் அதிகார வசதி எல்லாமே வைத்துக் கொண்டு பெண்களுக்கு அவை மறுக்கப்பட்டால் என்ன ஆகும்?. ஒரு புறம் அறிவிலே அல்லது செல்வத்திலே, மற்ற எல்லாவற்றிலும் எழுச்சி, மற்றொரு புறத்திலே எல்லாவற்றிலும் தாழ்ச்சி. அங்கே பிறக்கக்கூடிய குழந்தைகூட அப்படித்தான் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வினை நீக்கிக் கொள்ள வேண்டும்.



.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உண்மையோடும் நேர்மையோடும் உள்ளோர்க்குத் துன்பங்கள்
உண்டாகா எனும் கருத்து ஒரு மயக்கக் கற்பனையே.
உண்மை ஒளியாய் வாழ்ந்த உலக அறிஞர் பலர்க்கு
உண்டான தொல்லைகளை யூகித்து உணர்ந்திடுவீர் !. "
.
வாழ்த்த மனம் நிறையும் :-
"மனைவியவள் தனைமதிக்க வில்லையென்ற குறையால்
மனம்வருந்தும் கணவருக்கும், மணந்தவர் பொறுப்பாய்
எனைமதிக்க வில்லையென்று ஏங்கும் பெண்களுக்கும்
இன்பவாழ்வு மலர்வதற்கு ஏற்றவழி சொல்வேன்;
நினைவு கூர்ந்துன் வாழ்க்கைத்துணை இதுவரை உங்கட்கு
நிறை மனத்தோடன்பு கொண்டு செய்தவெல்லாம் பாரீர்,
உனைமதித்து ஆற்றியுள்ள இனியசெயல் அனைத்தும்
உள்நினைந்து நன்றிகூறி வாழ்த்த மனம் நிறையும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
              
                                                                                                                

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

குழந்தை வளர்ப்பு:

வாழ்க வையகம்                                                         வாழ்க வளமுடன்

ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்றவாறுதான் அமையும். பெற்றோர்களுடைய வினைத்தொடரே குழந்தை. நல்ல குழந்தை வேண்டுமானால் பெற்றோர்கள் உடலை, உயிரை, அறிவைச் செம்மையாகப் பேணிக் காக்க வேண்டும். தவம், உடற்பயிற்சி ஆராய்ச்சி இவற்றால் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் போதைப் பொருட்களை உட்கொண்ட மயக்கத்திலும், இருவரில் ஒருவர் வருத்தமாகவோ, நோயுற்றோ இருக்கும் நாளில் ஒரு குழந்தை கருத்தரிக்குமேயானால், அது உடலிலும், அறிவிலும், தரம் குறைந்ததாகவே அமையும். மேலும் குழந்தை கருவுற்றிருக்கும் காலத்தில் தாயின் மனம் உற்சாகமாக இருக்கும்படி அந்தக் குடும்பத்தினர் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அறிவின் விழிப்பில் உற்பத்தியாகும் குழந்தை, உடல் அறிவு நலன்களோடு, குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் நலம் விளைக்கத்தக்க நல்நிதியாக அமையும்.

பிறந்த பிறகும் வளர்க்கும் முறையில் மிகவும் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். அந்தக் குழந்தை எந்த எந்தச் செயலில் ஈடுபடக் கூடாது என்று நினைக்கிறோமோ, அந்தச் செயல்களைப் பெற்றோர்கள் குழந்தையின் எதிரில் செய்யவே கூடாது.

கடைசியாக மக்களுக்குச் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் எனபது இந்த விஞ்ஞான காலத்தில் அவசியமில்லை. அவர்களுக்கு, வாழ்வதற்கு ஏற்ற கல்வியை கற்பித்து வைத்தால் அதுவே அழிக்க முடியாத பெரும் சொத்தாகும்.



 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
சிறந்த சீர்திருத்தம் :
"குழந்தைகளைக் கொண்டுலகைச் சீர்திருத்தக்
கொடுமையின்றி கருத்து செயல் இரண்டும் வாழ்வில்
இழைந்துயரும். படிப்படியாய் உலகம் உய்யும்.
இது உலக சமுதாய சங்க நோக்கம்."
.
குழந்தை வயதிலேயே சீர்திருத்தம் ஆரம்பமாக வேண்டும் :-
"வழக்கத்தை மாற்றி சீர்திருந்தி வாழ
வலிவு முதலில் மனதில் அமைய வேண்டும்;
பழக்கத்திற் கேற்றபடி செயல் கருத்து
பதிவாகி மக்களுக்குப் பல கோணத்தில்
ஒழுக்க உணர்வோடு நீதி இன்பம் நேர்மை
உயர்வு எனும் சொற்களுக்கு அர்த்தம் காணும்
இழுக்கில்லா முழுத்திருத்தம் உலகில் காண
ஏற்றவழி குழந்தைகளைப் பண்படுத்தல்."
.
பெற்றோர் தவம் பிள்ளைகள் நலம் :
"பெற்றோர்கள்வழி வாழ்க்கைமுறை தொடர்ந்து
பிள்ளைகளின் உடல்வளமும் அறிவும்மாகும்;
பெற்றோர்கள் நலம்அமைந்த மக்கள் வேண்டில்
பிழைநீக்கும் தவம்அறமும் ஆற்ற வேண்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 16 ஜனவரி, 2016

வாழ்த்து :



வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு - சங்கிலித் தொடர்பு ஏற்பட்டு வாழ்த்து அதன் மூலம் பாய்ந்து வேலை செய்யும். ஒருவரை நாம் வாழ்த்தும் தகுதியைப் பெறுகிறோம். அந்த அளவுக்கு நமது பெருந்தன்மை தானே வளர்ச்சியடைகிறது. இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி அதன் மூலம் அடி மனத்திற்கும் பரவி நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும். வெறுப்புணர்ச்சி தானே மறைந்துவிடும்.
.

ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்கும் இடையேயுள்ள உயிர்த் தொடர் மூலம் அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி தகப்பன் விருப்பப்படி நடக்கும்படி செய்துவிடும். கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான். இது நான் அனுபவமாக பல குடும்பங்களில் கண்ட உண்மையாகும். வாழ்த்தின் மூலம் தேவையான நன்மைகளும் கிட்டும். ஆதலால்தான் கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும் பக்திப்பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். இதனால் 'மனவளம்' பெருகுவது நிச்சயம்.
.

"அருட்பேராற்றல் கருணையினால்,
உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம்,
உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்"

என்று வாழ்த்தி பயன்பெறுவோம்.
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்."
.

" எண்ணம், சொல், செயலால் எவருக்கும்
எப்பொழுதும் நன்மையே விளைவிக்க
நாட்டமாயிரு".
.

உலக நல வாழ்த்து :-

"உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

மனநிறைவு


 ....

பேரியக்க மண்டலம் கணக்கிட இயலாத பருமன் உடையது. அதில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், (சூரியன்கள்) கோள்கள் அதனதன் விரைவிலே பாதையிலே சற்றும் பிறழாமல் உலவிக்கொண்டிருக்கின்றன. மனிதர் வாழும் இப்பூவுலகம் மிகப் பெரியது. கணக்கிட முடியாத காலத்தையுடையது. மனித இனம், மற்ற உயிரினங்கள் எண்ணிலடங்கா. இவையெல்லாம் இறையென்ற பூரண ஆற்றலின் அழுத்தமென்ற விரைவாலும் ஒழுங்காற்றல் என்ற பிறழா நெறியாலும் பிசகாமல் சத்தியம் தவறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பேராற்றலின் கருணையினால் ஒவ்வொவொரு சீவனும் பிறக்கும் போதே அதன் வாழும் காலம் வரைக்கும் தேவையான அனைத்தும் இருப்பாகவும் இணைக்கப்பட்டும் உள்ளன. இவற்றையெல்லாம் நமது மனதை விரித்து எண்ணிப் பார்ப்போம்.
.

இறை நிலை, பேரியக்க மண்டலம், உயிரினங்கள், இன்ப துன்ப விளைவுகள், எண்ணம், செயல்கள் விருப்பம் நிறைவு என்ற எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்ந்து இணைந்த ஏற்பாடாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமக்கென்ன குறை. உண்மையில் குறையே இயற்கையில் எள்ளளவும் இல்லை.
.

பின் ஏன் மனக்குறை. உடல் நலக் குறை.
.

மனித உள்ளத்தில் தேவையுணர்வு, விருப்பம் என்று இரண்டு எண்ண எழுச்சிகள் உள்ளன. தேவை இயற்கையானது. உடலையும், உயிர் வளர்ச்சியும் ஒட்டி எழுவது. விருப்பம் தேவையிலிருந்தும் எழலாம், கற்பனையாகவும் பழக்கத்திலிருந்தும் எழலாம். தேவையை ஒட்டியதாகவே விருப்பத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நீயே ஞானி. கற்பனையாகவும் பழக்கத்தை ஒட்டியும் எழும் விருப்பங்களை அப்படியே செயல்படுத்த எண்ணத்தை உடலை இயங்க விடும்போது உனக்கு அமைந்த ஞானத்தை பயன்படுத்தாத வீணனாகிறாய்.
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"தான் உயரவும் பிறரை உயர்த்தவும்
ஏற்ற பயிற்சியும் தொண்டும்
மனவளக்கலையில் அடங்கியுள்ளன".
.

தியாகியும் - ஞானியும் :

"கடமையுணர்ந்து அதைச் செயலில்
காட்டுபவன் தியாகியாம்,
கடவுளே மனிதனான
கருத்தறிந்தோன் ஞானியாம்".
.

நட்டம் என்பது ஏது?

"வந்ததுதான் போகுமேயல்லாது
வருமுன்னே இருந்த ஒன்று போவதுண்டோ?
இந்த உண்மை எண்ணி எண்ணி உணர்ந்து கொண்டால்
எவர்க்கும் எப்போதும் நஷ்டமேது?."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 14 ஜனவரி, 2016

பேரின்ப வெள்ளம்

அன்பும் கருணையும் உடைய தெய்வ நிலையானது விண் முதல் ஆறறிவாகி, மனித மனத்தின் மூலம் தனது பரிணாமப் பயணச் சரித்திரத்தை உள்ளுணர்வாகக் காட்டிய பேரறிவிற்கு நன்றி கூறுமிடத்து, அத்தகு உள்ளுணர்வு அடைந்த நம்மையே இறைநிலைக்கு அர்ப்பணம் செய்து மகிழ்ச்சியடைவோம்.
...
மேலும் உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்தப் பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.

எல்லா உயிர் வகைகட்கும் உணவாகவும் மற்றும் வாழ்க்கை வசதிகளாகவும், சிக்கலில்லாமலும், வரையறை இன்றியும், தங்களது வளர்ச்சியை அர்ப்பணித்து உலகைக் காத்து வருகின்றன தாவார இனங்கள்.
அத்தகு தாவர வர்க்கங்களை அன்போடும் கருணையோடும் உருவாக்கி, இதர உயிரினங்களுக்கு அளித்துள்ள பேரன்புக்காகவும், கருணைக்காகவும் இறைநிலைக்கு நன்றி கூறி, அப்பெருமகிழ்ச்சியான பேரின்ப வெள்ளத்தில் திளைப்போம்.

ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கருதி என்றும் கொண்டாடுவோம்.


************************************
பிரம்மம்:
"நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன், அது
நினைவதனின் முடிவாகும், மூலமாகும்;
சூனியமே! தோற்றமெலாம் அதிலிருந்தே!
சுத்த வெளி! மௌனமது! உவமை இல்லை!
ஊன் உருவில் ஓடும் உயிர்ச்சுழற்சி வேகம்
உற்பத்தி செய்கின்ற மின் சாரத்தில்
தோன்றுகின்ற அலை இயக்கம் அறிவு ஆகும்.
சுயநிலையில் தியானித்து அறிதல் வேண்டும்."
.
"பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து
புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு
பொங்கிடுவோம் சமுதாயப்
பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம் மக்கள் குலம்
போர் ஒழித்து அமைதி பெற."
.
"பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க;
பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க;
உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க;
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

புதன், 13 ஜனவரி, 2016

குடும்ப அமைதியே ஞானத்திற்கு வழி

நாம் ஆன்மீக வாழ்வு நடத்த முயழ்கிறோம். மற்றவர்கள் அவரவர்
வழியில் நடப்பார்கள். நம் குடும்பத்திலேயே கூட அத்தகையவர்கள்
இருப்பார்கள். மற்றவர்களின் வழியால் நம் ஆன்மீக வாழ்வு பாதிக்கப்படக்
கூடாது. அவ்விதமாக - எல்லோருக்கும் ஒத்ததாக நம் வாழ்வு முறையை
அமைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நம் வாழ்வு ஆன்மீக
வாழ்வாக இருக்க வேண்டும்.

மனவளக்கலையை நான் வகுத்த போது, குடும்பத்திலிருந்து அமைதி
தொடங்கி, சமுதாய விரிவாக அது அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு
திட்டமிட்டுத்தான் அதனை வகுத்தேன்.

உலக சமாதானம் வேண்டுமானால் முதலில் அதற்கு மனித சமுதாயத்தில்
அமைதி வந்தாக வேண்டும். தன்னிலை விளக்கத்தின் மூலம் தான் அந்த
அமைதி வரமுடியும். தன்னிலை விளக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
அதனைப் பெற்று விட்டால் மட்டுமே அமைதி வந்து விடாது. தன்னிலை
விளக்கம் என்ற விளக்கின் வெளிச்சத்தில் உங்கள் வாழும் முறையைச்
சோதித்துக் கொள்ள வேண்டும். அவ்வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையைத்
திட்டமிட்டு நடத்த வேண்டும்.

'' உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கிறதா? பிணக்கிருக்கிறதா?'' என்று
ஆராயுங்கள். எல்லோரது வாழ்க்கையிலும் பிணக்குத்தான் மலிந்திருக்கிறது.
பிணக்கானது சிலர் வாழ்க்கையில் சிறிதாயிருக்கலாம். வேறு சிலரது
வாழ்க்கையில் பெரிதாயிருக்கலாம். ஆகவே, பிணக்கில்லாத வாழ்க்கையை
எவன் அமைத்து அதன்படி வாழ்கிறானோ அவன்தான் ஞானி. ஒருவர் பெற்ற
ஞானத்தைப் பரிசோதிக்கக் கருவி ஒன்று இருக்குமானால் அது அவரது
குடும்ப அமைதி தான்.




-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

********************************************************************
வேட்பு :-
"நிறைவாக அமைதியோடு வெற்றி கண்டு வாழ
நிலஉலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்,
குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்;
உறைவிடமும் உணவும் பால்உறவும் மதிப்போடு
உழைத்துப்பெற்றளவு முறையோடு துய்க்கவேண்டும்,
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்து தவம் அறம் கற்று பற்றி வாழ வேண்டும்."
.
"முற்கால வாழ்க்கையில் கண்ட அனுபவம்,
இக்காலத்தேவை நிகழ்ச்சிகள், சூழ்நிலை,
பிற்கால விளைவுகள் யூகித்துக் கடமைசெய்,
முக்காலம் கண்டமுனிவன் நீயே ஆங்கே."
.
"உலகமே ஒரு பெரிய பழைய பள்ளி,
ஒவ்வொருவருக்கும் தினம் புதியபாடம்!
பலகலைகள் கற்றோர்க்கும் பாமரர்க்கும்,
பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 12 ஜனவரி, 2016

மனிதகுல வாழ்வின் இனிமைக்கும் அமைதிக்கும் காயகல்பக் கலை


 உடல் மற்றும் மனநலனுக்கு முக்கிய பொருளான விந்து நாதங் களின் பெருமையையும், கற்பு நெறியின் மேன்மையினையும் மனித குலம் உணர வேண்டும். விந்து நாதத்தை இன்பத்துக்குரியதோர் சாதன மாக மட்டும் இன்றைய மனிதர்கள் கருதுகிறார்கள். நோயற்ற உட லுக்கும், தெளிந்த அறிவு மேன்மைக்கும் விந்து நாதந்தான் ஆதாரம்.
எனவே, அவற்றைப் புனிதப் பொருளாகக் கருதி, அவற்றின் தூய்மையைப் பராமரித்து அவற்றுக்கு மேன்மையளிக்கவும் வேண்டும். அதற...
்கு உதவுவது தான் காயகல்பக் கலை. உடல்நலமும், மனவளமும் தான் வாழ்வில் வெற்றியையும், நிறைவையும் அளிக்கும். அவற்றைக் காயகல்பம் கொடுக்கும் என்பது தெரியும்போது தான் இன்றைய மக்கள் குலத்தினர் அக்கலையைக் கற்க முன் வருவார்கள்.
இக் காயகல்பக்கலையைக் கற்க வேண்டிய சரியான வயது உயர் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் தான். விந்துநாதம் கெட்ட பின் தூய்மைப்படுத்துவது என்பது சரிதான். ஆனால் கெடா முன்னரே அவற்றின் மதிப்பு இளைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இது வளர்ந்தவர்களாகிய நமது பொறுப்பாக உள்ளது.
எந்த அளவுக்கு இளைஞர்கள் காயகல்பத்தின் மூலம் உடல் வளமும் அறிவு உயர்வும் பெறுகிறார்களோ, அந்த அளவுக்குத் தான் எதிர் கால சமுதாயத்தில் இனிமையும், அமைதியும் நிலவ முடியும்.
இந்த உண்மையை மனவளக்கலை மன்றத்தினர்களும் மற்றும் கல்விக்கூட மேலாளர்களும் உணர்ந்து கொண்டு இளைஞர்கள்/ மாணவர்கள் மத்தியில் காயகல்பத்தையும், மனவளக்கலையையும் அறிமுகப்படுத்த வேண்டும்.
**********************************************
"கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்;
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்;
இறையுணர்வு, விழிப்புநிலை, அறிவுக் கூர்மை
இனியசொல், எண்ணத்தின் உறுதி, மேன்மை
மறைபொருளாம் மனம், உயிர்மெய் யுணர்வு கிட்டும்,
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும் !
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 11 ஜனவரி, 2016

சிக்கலும் தீர்வும்:



வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் விளைகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள் தான் வாழ்க்கைச் சிக்கல்கள் விளையக் காரணமாகின்றன. எப்படி எனப் பா
ர்க்கலாம். அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் புரிவதில்லை. தவறு செய்தால் இன்றோ, நாளையோ, அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்ளும் துன்பங்களே வியாதியாகவும் வாழ்க்கைச் சிக்கல்களாகவும் நம்முன் எழுந்து நிற்கின்றன.

அறிவின் குறைபாட்டால் சமுதாய ஒழுங்கமைப்பு விதிகள் புரிவதில்லை. பலர் இணைந்த கூட்டுறவு வாழ்வு எனும் சமுதாயத்தின் பராமரிப்புக்கும், காப்புக்கும், மேம்பாட்டுக்குமான விதிமுறைகளை அறியாமல் அல்லது அவமதித்து, அதன் விளைவாகச் சந்திக்கும் துன்பங்கள் தாம் வாழ்க்கைச் சிக்கல்களாக மாறுகின்றன.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உருளும் வாழ்வு எனும் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் 'நான்' யார் என்று தெரிவதில்லை. என் மூலமென்ன? என் முடிவென்ன? என்பதை விளங்கிக் கொள்வதில்லை. தன்னிலை விளக்கம் பெறவேண்டும் என்று கூடத் தெரிவதில்லை. அதன் விளைவாக, வாழ்வின், பிறவியின் நோக்கமாகிய வீடுபேறு என்ற உன்னதமான லட்சியத்திற்கு இசைவான வகையில் வாழும் முறையை அமைத்துக் கொள்ளாமல், அந்த லட்சியத்திற்கு இடையூறாக, எதிரிடையாக என்னென்ன வழிகள் உண்டோ அப்படியெல்லாம் வாழ்வதால் அந்த முரண்பாடே வாழ்க்கைச் சிக்கல்களாக முளைக்கிறது. தன்னிலை விளக்கம் பெற்று லட்சிய வாழ்வு வாழ்வோம்.

*****************************************
.
"சிக்கல்களை சந்திக்க போதிய பலமில்லாத
மனநிலையைக் 'கவலை' என்கிறோம்."
.
"முறுக்கேறிய பஞ்சு நூலாகி வலுவடைவது போல
சிந்தனையாலும் உழைப்பாலும் பண்பட்ட
உடலும் உள்ளமும் துன்பங்களைத் தாங்க
வல்லமையுடையவை ஆகின்றன."
.
மனத்தூய்மை வினைத்தூய்மை :
"மனத்தூய்மை வினைத் தூய்மை மனிதன் வாழ்வில்
மகிழ்ச்சி, இனிமை, நிறைவு, அமைதி நல்கும்.
மனம் உயர நேர்மைவழி அகத்தவம் ஆம்.
மற்றும் தன்வினை உயர அறமே ஆகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

சினம் ஒரு சங்கிலி




வாழ்க வையகம்                                                                                        வாழ்க வளமுடன்

ஒரு குடும்பத்தலைவனுக்கு அடிக்கடி சினம் வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அவனது மனைவி மக்கள் மனநிலைகள் அதனால் பாதிக்கப்படும். அவர்கள் சோகம் கப்பிய முகத்தினராவார்கள். அவர்களது மனவலிமை குன்றிப் போகும். தோல்வி-மனப்பான்மை அவர்களிடத்தில் தோன்றும். மறைவாகத் தீங்கு செய்யும் குணமுடையவர் ஆவார்கள், அவர்களும் சிடுமூஞ்சிகளானாலும் ...
ஆவார்கள். எளிதில் சினம் வயப்படும் பலவீனத்தையும் அவர்கள் பெற்று விடுவார்கள். அம்மட்டோடு போகுமா, போகாது; சினம் ஒரு சங்கிலி போன்றது. தொற்றுநோய் போன்றதென்றும் சொல்லலாம்.

ஒரு அதிகாரியின் வீட்டுக் குழந்தை அதன் தாயாருக்குத் தன் பிடிவாதப் போக்கினால் கோபமூட்டுகிறது. அதன் விளைவினால் அந்த அம்மாள் தன் கணவனிடம் எரிந்து விழுகிறாள். அந்த அதிகாரி இந்தக் கோபத்துடன் தன் அலுவலகத்திற்குச் சென்று தன் பணியாளரிடம் சிடுசிடுவெனப் பேசுகிறார். மனம் புண்பட்ட பணியாளர் வீட்டுக்குப் போய்த் தன் மனைவியிடம் காரணமில்லாமல் கோபித்துக் கொள்கிறார். அந்த அம்மாள் உள்ளக் குமுறலுடன் இருக்கும் சமயம் அவள் குழந்தை வந்து ஏதோ கொடுக்கும்படி அவளை நச்சரிக்கிறது. அவள் ஆத்திரம் தீர அந்தக் குழந்தையை அடித்துவிடுகிறாள். இப்படிச் சினமானது சங்கிலித் தொடர் போலச் சென்று பலருக்கும் துன்பத்தை விளைவிக்கும்.

சினமானது பிறரை எவ்வாறு துன்புறுத்துகின்றதென பார்ப்போம். சொந்த மகன், மகள், வாழ்க்கைத் துணை என்று வைத்துக் கொள்வோம், சினம் எழும்போது அவர்கள் மனம் என்ன பாடு படுகின்றது என்பதை நாம் உணர வேண்டும். பிறர் நம் மீது சினம் கொள்ளும் போது நம் மனம் எவ்வாறு நோகின்றது, வருந்துகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதுபோன்றுதானே பிறர் மேல் நாம் கொள்ளும் சினம் அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் என்று கண்டுகொண்டால், நம்மோடு ஒத்த உறவினர், நமக்கு நலம் செய்பவர்களை இப்படி வருந்தவிடுவது நல்லதல்ல என்று தெளிவாகும். எனவே அதைத் தவிர்க்கத் தான் வேண்டும்.

அதுமாத்திரமல்ல, ஒருவர் மீது சினம் கொண்டால் அது ஒரு அவமதிப்பும் கூட. ஒருவர் மீது சினம் கொள்ளும் போது அவர்கள் படும் வருத்தம் ஒரு சாபமாகவே மாறுகிறது. இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கும் போது பிறரை எவ்வாறு சினம் பாதிக்கிறது என்பது நன்றாக உங்களுக்குத் தெரியவரும்.
 .
**************************************************
.
சினமும் அச்சமும் வாழ்வைச் சீர்குலைக்கும் :
.
"சினம் அச்சம் இரண்டும் ஓர் மனிதன் வாழ்வில்
சீர்குலையச் செய்யும் கொடும் உட்தீயாகும்
சினம் அச்சம் ஒழிய சிந்தனையை ஏற்றி
சிவன் சீவன் நிலைகளை நன்குணர வேண்டும்."
.
கவலை சினம் ஒழிக்க வழி :
.
"சினம் கவலை என்னும் இரண்டும் மனிதர் வாழ்வைச்
சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்;
மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்
மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும்;
தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி
சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு -
இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்
என்று பல முறை கூறு; வெற்றிகிட்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


சனி, 9 ஜனவரி, 2016

குரு தானாக வருவார்

வாழ்க வையகம்                                                                    வாழ்க வளமுடன்



...
நாம் அறிவு வளர்ச்சி பெற்று சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கின்றவரையிலே இந்த ஐந்து புலன்களிலேயே இயங்கி நாம் எதைப் பார்க்கின்றோமோ அதனுடைய பதிவு அதிலே ஏற்படக்கூடிய இன்ப துன்ப விளைவுகள், அவற்றினுடைய பதிவுகள், அதை ஒட்டி எழும் செயல்கள், அந்தப் பதிவுகள் மீண்டும் மீண்டும், மேலும் மேலும், அந்த வினப்பதிவுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆகையினால் அந்த மெய்ப்பொருளாக உள்ள ஆதி நிலையானது அறிவுக்குப் பிடிபடவில்லை. நாம் எங்கேயிருந்து வந்தோம், எதற்காகப் பிறந்திருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பது நினைவுக்கே வரவில்லை. சூதாட்டத்தில் இறங்கி விட்ட ஒருவனுக்கு, அந்த மயக்கத்திலே செயல்பட்டுக்கொண்டு இருக்கக் கூடிய ஒருவனுக்கு, எப்படிக் குடும்பத்தைப் பற்றியோ லாப நஷ்டத்தைப் பற்றியோ எண்ணம் வராதோ, அதுபோல் இந்த இன்ப துன்பம் என்ற ஒரு சூதாட்டத்தில் நம்மைப் பற்றிய நினைப்பே எழுவதில்லை.

இந்த இடத்திலே தான் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு, குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது. இங்கே ஒரு கேள்வி? குரு என்றால் யார்? குரு என்றால் அவர் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும்; தேடி இருக்க வேண்டும். நான் பிறந்து வந்துள்ளேனே, என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே, தெரிந்து கொள்ள வேண்டும், " என்று இவனாக நினைத்திருந்தாலும் சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி, அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி, அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்து விடும். வழியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதை விட, ஒரு மனிதனுடைய கர்மா, அவனுடைய action, அவனுடைய சிந்தனை, அவனுடைய தெளிவு, அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்து விடுகிறது; அதுவே குருவையும் கொண்டு வந்து கொடுத்து விடும் காலத்தாலே. அந்த குருவினுடைய பார்வை, சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் தூண்டி விடுகிறது.

***********************************************
.
ஞானமும் - முக்தியும் :
"தவபலமும் தனையறிந்த நிலையும் கொண்டு
தனையடைந்தோர்க் கருள்புரியும் தகைமையுள்ள
சிவநிலையோன் மெய்ஞ்ஞானி குருவாய் நின்று
சீடனது புருவமையம் விரலால் தீண்ட ;
அவனிலவன் லயமாகி ஆசான் தொட்ட
அவ்விடத்தே ஞாபகத்தை ஒன்றி ஒன்றி
உவமையிலாப் பேரின்பம் உள்ளுணர்ந்து
ஒருமைத்தத்துவம் அறிந்தால் அதுவே முக்தி."
.
தொட்டுக் காட்டல் :-
"குருவினது விரல்பட்ட உடனே ஆங்கோர்
குறுகுறுப்பும் சிறு உணர்வும் அறிவிற் கெட்டும்
ஒருமையுடன் உற்றுற்று உணர்ந்து வந்தால்
உள் நாட்டமே உனக்குப் பழக்கமாகும்.
பெருகிவரும் பேரின்ப எல்லை கண்டு
பிறப்பிறப்பு எல்லைக்கு அப்பால் உள்ள
நிருவிகற்ப நிலைகண்டால், எங்கும் என்றும்
நீயனைத்துமாகி நிற்கும் தன்மை காண்பாய்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 8 ஜனவரி, 2016

அளவான தேவை

தேவையை பெருக்கிக் கொண்டே செல்லக்கூடாது. பெருக்கினோமானால் அனுபோகத்திலேயே மனம் சென்று கொண்டிருக்கும். பழிச்செயல் புரிந்து மேலும் மேலும் பிறவித் தொடர் நீளும். தேவைகளை முடிந்தவரை ( to the minimum) சுருக்க வேண்டும். அப்போது தான் வந்த வேலையை முடிக்க முடியும். வந்த வேலை எது? முறையோடு வாழ்ந்து பாவப்பதிவுகளை எல்லாம் அழித்து, இனிப்பழி புரியாத தகைமை பெற்று, தன்னை அறிந்து, அறிவில் முழுமையை அடைந்து, ஆசைகள் எல்லாம் ஒழிந்த நிறை மனம் என்னும் நிர்க் குணம் வந்து, முக்தி பெற வேண்டியதன்றோ வந்த வேலை? அந்த வேலைக்கு இடையூறான இந்த ஆசையை முதலில் ஒழுங்கு செய்தாக வேண்டும். நல்ல விருப்பங்களின் மேலும் உணர்ச்சி வேகப் பிடிப்பை மாற்றியாக வேண்டும்.

துய்ப்புப் (அனுபோகப்) பொருட்கள் குறையக் குறைய உடல்நலம் காக்கப் பெரும். இங்கொரு ஆளை, அடுத்த ஊரில் ஒரு கம்பெனி, இன்னொரு ஊரில் உற்பத்திச் சாலை, அங்கே ஒரு விவசாயப் பண்ணை, நான்கு வீடுகள், இரண்டு எஸ்டேட்டுகள் என்றெல்லாம் சொத்துக்கள் பெருகாமல் பார்த்துக் கொண்டால் உடல் நலத்தோடு மன அமைதியும் காக்கப்பெறும். நமது பொறுப்பிலும் பராமரிப்பிலும் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக இருந்ததால் அந்த அளவில் நமது சுதந்திரம் காக்கப் பெரும். அனுபோகப் பொருட்கள் மிக மிக உடல் நலம் கெடும். சொத்துக்களின் எண்ணிக்கை மிக மிக மன அமைதி கெடும். பாதுகாக்கப்பட வேண்டிய குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை மிக மிக சுதந்திரம் கெடும்.

அதே சமயத்தில் நமது கடமைகளையும் பொறுப்புக்களையும் அலட்சியம் செய்யவோ தள்ளிவிடவோ கூடாது.

                                                                                                                 -வேதாத்திரி மகரிஷி
********************************************
வினைப் பிரிவு:-
"முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு.
மூளையிலே உன் செயலின் பதிவனைத்தும் உண்டு.
பின்னே நீ செய்வினைக்குப் புலனைந்தும் இயக்கிப்
பெற்றப் பழக்க பதிவு உண்டு இம் மூன்றும்
உன்னைநீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்
தன்னில் பதிவான வினைப் பதிவுகளை மாற்ற
தணிக்க பொருள் செல்வாக்குப் பயனாகா துணர்வீர்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 7 ஜனவரி, 2016

எண்ணத்தின் ஆற்றல்:



ஒருவர் ஒரு திருவிழாவுக்குப் போக வேண்டுமென்று எண்ணுகிறார். அந்த எண்ணத்தில் ஒரு ஊர், அங்கு போகும் செயல், அங்கு காண விழையும் காட்சிகள், அனைத்தும் அகக்காட்சியாகின்றன. இவ்வாறு புறமனத்தால் ஒரு எண்ணம் உருவாகும் போது அதற்கு வேண்டிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய எழுச்சிகள், உயிராற்றலின் இயக்க அலைகள் மூலம் ஏற்படுகின்றன. உயிராற்றலை மூளையின் சிற்றறைகளில் எத்தனை கோடி இணைந்து அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக மாற்ற முடியுமோ அத்தனையும் இணைந்து இயங்கியே ஒரு எண்ணத்தில் அக்காட்சி உருவாகின்றது.

இவ்வாறு மூலையில் ஏற்படும் பதிவுகளும் பிரதிபலிப்புகளும் 'நடுமனமாகும்'. மேலும் இந்தப் பதிவுகள் வித்தணுக்களில் தரப் (மரபுப்) பதிவாக (Heriditary quality) பதிவு பெறுகின்றது இதுவே 'அடிமனமாகும்'. இந்த இயக்கத்தின் தொடராக உடலின் உயிராற்றல் அதிர்வு அலை இயக்கம் வேறுபட்டு உடல் முழுவதும் உள்ள அணு அடுக்குகளில் பதிவுகள் உண்டாகின்றன. அது மட்டுமல்ல ஒருவர் ஓர் எண்ணம் எண்ணினால் அது பிரபஞ்ச சமஷ்டி உயிரோடு தொடர்பு கொண்டு எண்ணிறந்த மக்கள் மூளையிலும் பதிவாகின்றதோடு பிரபஞ்ச உயிரில் (universal soul) நிரந்தரப் பதிவாகவும் ஆகிவிடுகின்றது.

இவ்வாறு ஓரு தடவை ஒருவர் எண்ணும் எண்ணத்தால் ஏற்படும் உடல், மூளை, தன்னுயிர், பிற உயிர், சமஷ்டி உயிர் பதிவுகள் திரும்பத் திரும்பப் பிரதிபலிப்பாகும் போது எண்ணம் தோன்றிய இடத்திலேயே அதிக ஆழமாகச் செயலாவது இயல்பு. சமுதாயத்தைப் பற்றியோ தனிப்பட்ட பிறரைப் பற்றியோ எண்ணும் எண்ணங்கள் உரியவரிடம் அதிக அழுத்தமாக திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கும்.

பல தடவை திருவிழாவிற்குப் போக வேண்டுமென்ற எண்ணம் பிரதிபலிக்கும்போது எண்ணத்திற்குச் செயலாற்றவல்ல போதிய வலுவு ஏற்பட்டுவிடும். இந்த எண்ணத்தால் ஏற்பட்ட உயிராற்றல் விரைவு அதிர்வு அலைகள் உடல் கருவிகளையெல்லாம் ஊக்கி எண்ணத்தைச் செயலாற்றத் தயார் நிலையை ஏற்படுத்திவிடும். பிறகு திருவிழாவிற்குப் போய் பார்த்துக் களிக்கும் செயல் மலர்கின்றது. அதனால் இன்ப துன்ப அனுபவங்கள் பதிவாகின்றன.

இவ்வாறு செயலாகப் பதித்த எண்ணமும் செயலும் தேவையாக, பழக்கமாக, சூழ்நிலைக் கவர்ச்சியாக மாறி, அடிக்கடி மனிதனைச் செயல்படுத்துகின்றன. இந்த விளக்கத்தைக் கொண்டு ஒரு எண்ணம் எவ்வாறு பதிவு, பிரதிபலிப்பு, செயலாற்றல், இன்ப துன்ப விளைவுகள் என்ற நான்காக மாற்றம் பெறுகிறது என்பதை நன்குணரலாம்.

--வேதாத்திரி மகரிஷி
********************************************
எண்ணம் :-
"எண்ணமே ஒரு நாடக மன்றம் போல்
எண்ணமே அதில் எண்ணற்ற நடிகர்கள்.
எண்ணமே அதைப் பார்ப்போர் ரசிப்போராம்
எண்ணமே தான நிர்வாகி உடையவன்."
.
எண்ணத்தின் வலிமை :-
"எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்,
எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்திடல்."
.
எண்ணம் பிறக்குமிடம் :-
"எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திடில்
எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும்."
.
நன்மையே நோக்கு :-
"எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும்
நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு."
.
"அகநோக்குப் பயிற்சி தேவை (Simplified Kundalini Yoga) " -
---------------------------------------------------------------------------
.
எண்ணம் சீர்பட தற்சோதனை (Introspection) :-
"அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 6 ஜனவரி, 2016

உள்ளத்தின் சோதனை

மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும். நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்துப் பய...ிராகி அதனதன் தன்மைக்கேற்ற பயன் தருகின்றது.
அது போன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதி பெற்று, வாழ்வின் பயனாக விளைந்து விடும். ஆகவே, நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்தவிதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ, வளரவிடவோ கூடாது.
கோபம், வஞ்சம், பொறாமை, வெறுப்புணர்ச்சி, பேராசை, ஒழுக்கம் மீறிய காம நோக்கம், தற்பெருமை, அவமதிப்பு, அவசியமற்ற பயம், அதிகாரப் போதை என்ற பத்து வகையும் நமது உள்ளத்தில் நிறைபெறவொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து, களைந்து கொண்டே இருக்க வேண்டும்.
இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ, நிலைப்பதற்கோ, இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறி விடும். உடல் காந்த சக்தியைப் பாழாக்கிக் கொண்டே இருக்கும் ஓட்டைகளாக, இக்கெட்ட குணங்கள் மாறிவிடும்.
காலையிலும், மாலையிலும் 10 நிமிட நேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தைச் சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி


***********************************************
"முட்டைக்குள் அமைந்த கரு உடலாலும் உயிராலும் வளர்ச்சி பெற்றால்
மூடிய ஓடுடைந்துவிடும் குஞ்சு வெளிஉலகைக் கண்டின்பம் துய்க்கும்;
திட்டமிட்டு அறம் ஆற்றித் தூய்மை அறிவில் உடலில் பெற்றுவிட்டால்
தீரும்வினை புலன்மயக்கம் தாண்டிடலாம் தீய வினைப்பதிவு எல்லாம்
விட்டுவிடும் விளைவாக வீடுபேறெனும் அறிவையறிதல் கிட்டும் ;
வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது,
தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளே பேராற்றல் புதையல் கண்டோர்
தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 5 ஜனவரி, 2016

தியானமும் எண்ணமும்

மனதை நிறுத்தி வைப்பதென்பது இயலாத ஒன்று. ஆகவே தியானப் பயிற்சியாளரை அவ்வாறு செய்யச் சொல்வது எந்த பயனையுமளிக்காது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மன இயக்கத்தைச் சற்று ஒழுங்கு படுத்துதல் தான். அவ்வாறு ஒழுங்குபடுத்துதல் என்பது நம் தவமுறையிலும் அகத்தாய்வின் மூலமும் நிச்சயம் சாத்தியமான ஒன்றுதான்.
.

சாதாரணமாக மனம் ஓர் இடத்தில் நிலைப்பதில்லை. ஏனெனில் உணர்ச்சிவயப்பட்டும், வேகமாகவும் செயல்பட்டே அது பழகி விட்டிருக்கிறது. உதாரணமாக, மழை நீரானது புவி ஈர்ப்பு விசைக்கேற்றபடித் தனது பாதையை அமைத்துக் கொண்டு ஓடும். மீண்டும் மழைவரும் போது, அதே பாதையின் வழியாகத் தானே ஓடும் அது வேறு திசையில் செல்ல முயற்சிப்பதில்லை. பழைய அதே பாதையிலேயே செல்வது அதனுடைய தன்மை.
.

மனமும் அது போன்று தான் செயல்படுகிறது. ஆனால், தியானம் என்பதோ, அதைப் பயின்ற பிறகு மனதை பழைய வழியில் செல்லாதிருக்குமாறு வைத்துப் பழக்குவதே ஆகும். இந்த திறனில் வெற்றி கிட்டச் சில காலம் ஆகும். ஆனால் இடையில் மனந்தளராமலும், முயற்ச்சியை கைவிடாமலும் இருக்க வேண்டும்.
.

மழைநீரின் வழியை மாற்ற வேண்டுமானால், அதன் ஓட்டத்திற்கு மாற்று வழி ஒன்று தயார் செய்ய வேண்டும். நீர் முழுவதும் அதில் திரும்புமாறு செய்ய வேண்டும். அதே போல் தொடர்ந்து தியானம் செய்யும் போது, (தாங்கள் எதிபார்க்கும் காலத்திற்கு முன்பாகவே கூட) மனம் நுண்ணிய நிலையை அடைந்துவிடுவதால், புதிய பாதையில் திரும்பி விட மனதினால் முடியும். ஆரம்பப் பயிற்சி அன்பர்கள் நிறை பேர் உட்கார்ந்து தவம் செய்யும் கூட்டுத் தவத்தில் கலந்து கொள்ளும் போது, அவர்களின் தவ ஆற்றலும் சேர்ந்து, அந்தக் கூட்டுத் தவத்தில் கலந்து கொள்ளுகின்ற ஆரம்ப சாதகர்களின் ஆற்றலும் சிறிது சிறிதாகப் பெருகி வரும்.
.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

*******************************************

உயிரே படர்க்கையில் அறிவு :

"உயிர் நிலையை உற்றுற்று
உள்ளுணர்ந்து
ஒடுங்கி விரிந்து ஆராய்ந்து
ஒத்துணர்ந்தேன் ;
உயிர்தானே ஏற்றவாறு
அமைத்துக்கொண்ட
உடலூடே இயங்குங்கால்
உணர்ச்சியாக ;
உயிர் மலர்ந்து மணக்கும்
திருக்கோலமேதான்
உருவற்று ஓங்குமுயர்
அறிவுமாகும் ;
உயிரறிய அறிவறிய
ஆர்வமுள்ளோர்
உருக்கமுடன் எனைச்சார்ந்தால்
உரைப்பேன் உண்மை."
.

"எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்;
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 4 ஜனவரி, 2016

தவம்:

தவம் என்னும் யோகமானது மனித வாழ்வுக்கு இன்றியமையாத வாழ்க்கை நெறி. இதன் மதிப்புணர்ந்து பெரியோர்கள் தங்கள் வாழ் நாளை அர்ப்பணம் செய்து மனித குலத்துக்கென உருவாக்கி போற்றிக் காத்துத் தேவையும், தகுதியும் உள்ளவர்க்கு உதவச் செய்தனர். தற்காலத்தில் வாணிப நோக்கமுள்ள பலரால் யோகத்தின் கருத்தும், செயல் முறைகளும், விளைவுகலும் திரித்துக் கூறப்படுகின்றன; பரவலாகப் போதிக்கப்பட்டும் வருகின்றன.

.
மாயாஜாலங்களைப் புரிந்து மக்களை மயக்கவல்ல அற்புத ஆற்றல்களை அளிக்கும் பயிற்சி முறையே யோகம் என்றும், தனி மனிதன் பெருமையையும், புகழையும் உயர்த்தும் ஒரு சாதனைதான் யோகம் என்றும் பொதுமக்கள் கருத்துக் கொள்ளுமாறு யோகத்துக்குப் பொருள் கூறப்படுகின்றது. பல இடங்களில் யோகமென்னும் தவத்திற்கு உண்மை விளக்கம் கூறி வருகின்றேன். அறிவாளிகள், சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். உண்மை உணர்ந்த தெளிவிலே மனநிறைவு பெறுகின்றனர்.

.
மனதை உயிர்மேல் வைத்துப் பழகும் தியானமோ, அசைவற்று, நினைவற்றிருக்கும் சாதனையோ, பல கோணங்களில் செய்யும் உடற்பயிற்சியோ, தற்சோதனையோ, மாத்திரம் தவம் அல்ல. மனிதப் பிறவியின் பெருநோக்கமும், மதிப்பும் உணர்ந்து; அறிவின் நிலை அறிந்து; பேரறிவு நிலை எய்தி, புலன்களை ஒழுங்குபடுத்தி; ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறிகளை தனதியல்பாகக் கொண்டு, அயரா விழிப்பு நிலையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் இனிதாக வாழ வைக்கும் உயர்வாழ்வே தவம் ஆகும்.

.
இத்தகைய பண்பாட்டுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளும் பயிற்சி முறைகளே தியானம், தற்சோதனை, உடற்பயிற்சி, அறநெறி விளங்கிக் கொள்ளும் போதனை, வேதாந்த விளக்கங்கள் இவையாவுமாகும். இவை எல்லாம் வழிகளே. முடிவு, அறிவை அறிந்த பேரற வாழ்வாகும்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************************

"அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்;
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர், அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்;
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம்."
.

அகத்தவத்தின் பயன் :

"அறிவு உயிரை நோக்கும் அகத்தவத்தால்
புலன் வென்று ஆட்சியேறும்
அறிவின் ஆற்றல் பெருகும்
அகன்று விரிந்தாராயும் நுட்பம் ஓங்கும்
அறிவு தன்னிலை யுணரும் அந்நிலையில்
அதுவே மெய்ப் பொருளாய் நிற்கும்
அறிவு உயர்வுக் கேற்ப அன்பு கருணை ஈகை
தொண்டிவை தன்னியல்பாய் ஓங்கும்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி

நாம் வாழும் காலத்தில் உடலையும் மனத்தையும் சரிப்படுத்திக் கொண்டால் நமக்குப் பின்னாலே பிறக்கக்கூடிய குழந்தைகள் எப்படியிருக்கும் என்று பார்த்தீர்களானால் அவை ஆரோக்கியமான கட்டமைப்பு (structure) கொண்டதாகத் திகழும். அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகுக்குத் தருவதற்கு நமது உடற்பயிற்சி, தியான முறை இரண்டும் வாய்ப்பு அளிக்கும். அவற்றின் மதிப்பை உணர்ந்து நீங்கள் முறையாகச் செய்ய வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும் போது, ஊதியம் தராத உடற்பயிற்சி, தியானம் இவற்றை முதலில் நிறுத்தி விடலாம் என்று எண்ணாது, உள்ளூர இயங்கிவரும் இறைச்சக்திக்குத் தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி, உளப்பயிற்சி செய்து நாளுக்குநாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று வாழ வேண்டும்.

தினந்தோறும் நாம் காலையிலிருந்து மாலைவரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும் பண்டங்களையும் கையாளுகின்றோம். சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். சுத்தப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும்?. அதே போல தினந்தோறும் மனத்தையும் உடலையும் உபயோகிக்கிறோம்; அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்கங்களை போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்குத் தயாராக வைத்துக்கொண்டால் தானே நன்றாக இருக்கும்?

உடலுக்குக் கொடுக்கக்கூடிய உடற்பயிற்சி, மனதிற்குக் கொடுக்கக்கூடிய தியான பயிற்சி, உயிர்க்கு உறுதி அளிக்கும் காயகல்பப் பயிற்சி இம்மூன்றும் உடலையும், உள்ளதையும், உயிரையும் மேன்மைப்படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பனவாகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.





*****************************************

குண்டலினி யோகம்:
"அறியாமை, உணர்ச்சிவய மயக்கம், மேலும்
அலட்சியம் மூன்றுமே அறிவின் ஏழ்மை;
அறிவுகுறுகிப் பிறழ்ந்து துன்பம் நல்கும்
அனைத்துச் செயலும் பிறக்கும் உண்மைகாணீர்
அறிவை அயாரா விழிப்பில் பழகிக் கொண்டு
அவ்வப்போ எழும்எண்ணம் ஆய்ந்து தேர்ந்து
அறிவின் ஒளியாய் வாழ ஆற்றல் நல்கும்
அருள்வழியே குண்டலினி யோகம் ஆகும்."
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
-

சனி, 2 ஜனவரி, 2016

நல்வாழ்விற்கான வழி

முற்றறிவாக உள்ளது இயற்கை. மனிதனானவன் இயற்கையில் ஒரு பகுதி. பகுதி அறிவிலிருந்து முற்றறிவை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும் ஒரு தத்துவந்தான் மனிதன்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் இயற்கையானது மனிதனுக்கு அறிவின் பெருக்கத்திற்குரிய பாடங்களை தந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு அனுபோகமும் மனிதனுக்கு இயற்கையின் இரகசியத்தை, பெருமையை, மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

இந்த பாடங்களை உற்று நோக்கி, மதித்துப் பின்பற்றி வாழும் மனிதன் அவன் பிறவி நோக்கமாகிய முற்றறிவின் விரிவை நோக்கி உயர்ந்தும், சிறந்தும் விளங்கிக் கொண்டே இருக்கிறான்.

வாழ்வில் அவனுக்கு இனிமை, நிறைவு, மகிழ்ச்சி, அமைதி இவையெல்லாம் அமைகின்றன. இயற்கை தரும் பாடங்களை அலட்சியப்படுதுபவனோ, அறிவில் தேக்கமுற்று வாழ்வின் பயணத்திலே திசை மாறி துன்பம், நோய்கள், குழப்பம், சோர்வு இவற்றால் துன்பப்படுகிறான்.
2
வாழ்வின் நோக்கம் என்ன என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டும். அந்த நோக்கத்திற்கு முரண்படாத நெறி நின்று வாழ வேண்டும். அவனே வாழ்வாங்கு வாழ்பவன். அவனால் தான் மனித சமுதாயம் நலம் பெறுகிறது. மனித சமுதாயத்தால் அவன் போற்றப்படுகிறான்.


வாழ்வாங்கு வாழும் நெறியை விஞ்ஞான ரீதியாக விளக்கி நல்வாழ்வு பெற உதவும் கலைதான் "மனவளக்கலை".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

*******************************************
அமைதி இயல்பாகும் :
"அகத்தவமும் அறநெறியும் இணைந்து ஓங்க
ஆன்மாவின் வேண்டாத பதிவு நீங்கும்,
இகத்துறவு அத்தனையும் இனிமைநல்கும்
எப்போதும் மன அமைதி இயல்பதாகும்;
மிகத்தெளிவு உண்மையுமாம்; இந்த உண்மை
மீறி எழும் பழவினையில் மறைந்துநிற்கும்
தொகுத்துணர்வாம் விரிந்த மனத் தொடர்முயற்சி
சுய நிலையாம் மெய்ப் பொருளாய்த் தன்னைத்தேரும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 1 ஜனவரி, 2016

மனவளக்கலை ஒரு பெட்டகம்



தான் உயரவும், பிறரையும் உயத்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன.

இரண்டு வேலையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம்... தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவையுன்டாகும்.

தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை - வினைப் பதிவுகளை மாற்றி விடலாம்.

ஆசைச் சீரமைப்புப் பயிற்சி செய்யுங்கள். உடல் நலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதியுன்டாகும்.

சினம் தவிர்த்துப் பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்திலுல்லோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு இவை பெருகும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

கவலை ஒழிப்புப் பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு உண்டாகும்.

நான் யார் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு, அனைத்து மறை பொருட்கள், மனம், உயிர், மெய்ப்பொருள் உணர்வு உண்டாம்.

இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக் கல்வியே 'மனவளக்கலை" யாகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேரு பெற்றிருக்கிறீர்கள். இக்கலையின் மான்புனர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்று விட்டால், அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை.

- அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி


அமைதியோடு வாழ :
"புத்தாண்டு இன்று பிறந்துளது உலகிற்கு
உத்தமர்கள் அறிவிற்கு ஒத்தபடி எல்லோரும்
சித்தம் மகிழ்வோடு சீர்திருந்தி வாழ்வின் வளம்
அத்தனையும் பெற்று அமைதியோடு வாழ்கவே !"
.
வாழ்த்து :
"அறிவினிலே சிறந்தோங்கி நீங்கள் வாழ்வீர் !
அணுவும் அதன் இயக்கமும் போல் பிரிவு இன்றி
நெறியினிலே பிறழாது நீங்கள் வாழ்வீர் !
நிலவுலகும் அதன் கவர்ச்சி ஆற்றலும் போல்
வறியோர்க்கு வாழ்வளிப்பீர், உள்ளம் ஒன்றி
வறுமையின்றிச் சூரியனும் ஒளியும் போன்று
சிறியவரும் பெரியவரும் நலமே காணும்
சிறப்புடனே பல்வளமும் பெற்று வாழ்வீர்!"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.