Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 31 டிசம்பர், 2015

மனிதன் :


.
தெய்வமெனும் மெய்ப்பொருளே ஆற்றலாகி, ஆற்றலின் திணிவு நிலை வேறுபாடுகளால் விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் எனும் ஐம்பூதங்களாகி, பேரியக்க மண்டலமெனும் பிரபஞ்சமாக விரிந்து, இவ்வைந்தும் பொருத்தமான அளவில் இணைந்து ஒரு சிற்றுருவம் தாங்கி அவற்றின் ஒழுங்கான சுழலோட்டம் ஒன்றோடொன்று ஒத்து, அமைந்து உணர்ச்சி நிலை பெறும் போது உயிராகி, அவ்வுயிரே தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவை மூலம் தொடர்பு கொள்ளும் பொருட்களுக்கேற்ப ஊறு, சுவை, மணம், ஒளி, ஒலியென்னும் பஞ்சதன் மாத்திரைகளாகி தனது விரிவான பேரியக்க மண்டல அமைப்பை, உணர்ந்து இரசித்து இன்புற்று, தன் முழுமை நோக்கி விரையும் பயணத்தில் தடைப்படும் நிகழ்ச்சிகளையெல்லாம் துன்பமாகவும், தடையற்ற பயணத்தை இன்பமாகவும் உணர்ந்து, துன்ப இன்ப நிலை காண ஓங்கிய சிறப்பில் வாழ்வின் உண்மையறியும், பேரார்வமாகிய ஆறாம் நிலையறிவைப் பெற்று மனம், உயிர், மெய்ப்பொருள் எனும் மூன்று மறை நிலைகளை உணர்ந்து நிறைவும், முழுமையும் பெறத்தக்க, பெற்று அமைதி பெற்ற ஒரு திருஉருவமே மனிதன்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
******************************************
அறிவின் முழுமைப்பேறு:
"தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்
தெய்வநிலை யதனை வெளி, பிரம்மம் என்று
தேர்ந்த சில சொற்களினால் விளக்கலாகும்;
தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்
திருவிளையாடல் தன்னை உணர்ந்து கொண்ட
தெய்வர்களல்லால் மற்றோர் உயிரைப் பற்றித்
திருத்தமுடன் உரைப்போர் யார் வாரீர் சொல்வேன்."
.
மனிதர் அறிவு உயர்ந்து வருகிறது:
"மனிதருக்கு நாளுக்கு நாள் ஆராயும்
மதிநுட்பம் உயர்கிறது இதன் விளைவாய்
மனிதரெலாம் பகையொழித்து பிணக் கொழித்து
மயக்கம் ஒழிந்தே வாழும் வழியைக் காண்பார்
மனிதருக்கு அருள் வாழ்வே இயல் பென்றாலும்
மாசு பல பொருள் துறையில் வளர்ந்ததாகும்
மனிதருக்குப் பொருள் துறையில் சிக்கல் ஆற்றல்
மனம் பண்பாட்டுயர்வாக வாழ்வார் காணீர்."
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 30 டிசம்பர், 2015

பேரறிவு :


இருப்புநிலை, சூன்யம், ஒன்றுமில்லாதது என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறானது. இருப்புநிலை எல்லாவற்றையும் தன்னுள் பெற்றுள்ளது. அனைத்து பொருளும் இங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றது. இதனுள் இயங்குகின்றது. இருப்புநிலையை கடல் என்று நாம் எண்ணினால் பிரபஞ்சத்தில் உள்ள மிகச்சிறிய பொருள்களிலிருந்து மிகப் பெரிய பொருள் வரை அதன் இயக்கங்கள், சக்திகள் அனைத்தும் கடலில் தோன்றுகின்ற அலைகளாகும். அலைகள் கடலில் தோன்றி, கடலின்மேல் அசைந்து, கடலில் முடிவடைகின்றது. அதே போன்று மிகச்சிறிய பொருளிலிருந்து மிகப் பெரிய சூரியன் வரை உள்ள அனைத்து பொருள்களும், உயிர்வாழும் ஜீவன்களும் இருப்புநிலையிலிருந்து (Static State) தோன்றி, அதனுள் இயங்கி, அதனுள்ளே முடிவடைகின்றது.

.
நீக்கமற நிறைந்துள்ள பூரணத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இருப்பு நிலையில் மிதக்கின்றன. அசைகின்றன. தண்ணீரில் அதன் நுரை மிக நின்றாகத் தெரியும். நீரில் நுரை மிதப்பதைப் போன்று அனைத்துப் பொருள்களும் பூரணத்தில் மிதந்து கொண்டு உள்ளன. எண்ணிப் பாருங்கள். ஒரு பொருள், அதன்மேல் மற்றொரு பொருள் இதில் எது சக்திவாய்ந்தது. அசைகின்ற ஒவ்வொரு பொருளையும் தன்னிடம் பிடித்துக் கொண்டிருப்பது இருப்புநிலை. பிரபஞ்சம் முழுதும் பூரணத்தில் அடங்கியுள்ளது. பூரணத்தில் மிதந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கிறது. சுற்றிலும் சூழ்ந்துள்ள இருப்புநிலையின் அழுத்தத்தால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகளும் தற்சுழற்சி வேகத்துடன் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களின் தன்மைக்கேற்ப பிரபஞ்சம் முழுதும் வெவ்வேறு வேகத்துடன் அவைகள் இயங்கிக் கொண்டுள்ளது. இருப்புநிலையே எல்லாம் வல்லது, அதுவே ஆதிநிலை.

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.
*************************************************

.
எது பிரபஞ்சம் :

வேகத்தின் எல்லையே பருமனாக
விளைந்துள்ளது அதன் தொடரே காலமாகும்
வேகமது பிளவுபட்டு இயங்கும்போது
வேறு படுத்தும் வெளியின் அளவே தூரம்
வேகம் பருமன் காலம் தூரம் என்ற
விதம் நான்காய்ப் பரம் பரம அணுவாயிற்று
வேகமாய் அணு இயங்க வெளி அழுத்த
விளையும் தொடர் நிகழ்ச்சிகளே பிரபஞ்சம் ஆம்.

.
"கும்பிடுதல் பொருட்கள் பல கொடுத்தல் இவை இரண்டிற்கே
குரு தெய்வ நாட்டமுடன் கூடி அலையும் உலகீர்
வம்புகளை வளர்க்கின்றீர் வாழ்வைப் பாழாக்குகின்றீர்
வாரீர் அறிவை அறிந்தவ் வழி ஒழுகி உயர்வடைவீர்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஐம்புலனால் அறிய முடியாதது அரூபம் :

சத்து சித்து ஆனந்தம் அனைத்து மாகி...
சர்வ வியாபகமாயும் நிறைந்து உள்ள
அத்துவித ஆதிபராசக்தி தன்னை
ஐயுணர்வில் எதைக் கொண்டும் அறியப் போகா
தத்துவங்கள் அனைத்திற்கும் மூலமான
தலையாய நம் சக்தி அரூப மன்றோ?
வித்து நிலையை அறிந்து அறிவை ஒன்ற
விவேகயூகம் உயர்ந்து அதே தானாகும்.

சத்து என்பது பூரணமான பேராதார நிலை (Potential Energy) அதன் எழுச்சி நிலையான அணு முதல் அண்டங்கள் பிண்டங்கள் அனைத்தும் தோற்றம், இயக்கம், மாற்றம் என்ற இயக்கத்தில் உளதால் சித்து எனப்படும். பரிணாம சிறப்பின் உச்சமாகிய உணரும், அறியும் நிலையாகிய அறிவு ஆனந்தம் எனப்படும்.

இம்மூன்று நிலைகளை அடைந்தும் ஆதி நிலையாய் குறைவுபடாமல் பேதப்படாமல் பூரணமாக நிறைந்து எல்லையற்றிருக்கும் அரூப சக்தியைக் கண், காது, மூக்கு, நாக்கு, ஸ்பரிசம் இவற்றில் எதைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் நாமாக நமது மூலமாக இருக்கும் அந்தச் சக்தி அரூபமாக இருப்பதால், உடலியக்கத்திற்கும், அறிவியக்கத்திற்கும் மூலமான விந்துவின் நிலையை அறிந்து, அவ்விடத்தே அறிவை நிறுத்திப் பழகி வரும் தவத்தால் ஏற்படும் ஓர்மை நிலையில் அறிவே அதுவாகி - ஆதியாகி விடும். இதை யூக உணர்வினால் மட்டும் அறிந்துகொள்ள முடியாது.

ஆகாயத்தில் நாம் பார்க்கும் போது கண்களுக்குப் புலனாவது வெட்டவெளி அல்ல. அது அணுவெளி. அணுக்கள் மீது சூரியன் முதலிய கிரகங்களின் ஒளிக்கதிர் படுவதால் ஏற்படும் பிரதிபலிப்பு ஒளி நமக்குத் தோற்றமாக வெளிச்சமாகப் புலனாகிறது. சுத்த வெளி இருள், அகண்டம், எனும் நிலையில் அரூபமானது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

***********************************************
.
"கதிரவன் காலத்தே காணாத விண்மீன் போல்
புதிர்போன்ற அறிவுநிலை புலன் இயங்குங்கால், தோன்றா."
.
அறிவு ஒன்றே:-
"புத்தனென்ற பெரியாரும் இயேசுநாதர்
பொது நோக்கில் கவி புனைந்த திருவள்ளுவர்
உத்தமராம் நபிகள் எனும் உயர்ந்த ஞானி
உண்மைக்கே உயிரளித்த சாக்ரடீஸ்
நித்தியமாம் நிலையறிந்த ஞானியர்கள்
நிலஉலக மக்களுக்கு எடுத்துச் சொன்ன அத்தனையும்
சேர்த்து ஒரு தொகுப்பாய்ச் செய்தால்
அனைத்துமிணைந்து ஒரு கருத்தாய் அமையக்காண்போம் ."
.
அகத்தவத்தின் பெருமை:
.
"அகத் தவம் தீவினை யகற்றும்
அருள் நெறியை இயல்பாக்கும் !
அகத் தவமே இறைவழிப்பாடனைத்திலும்
ஓர் சிறந்த முறை !
அகத் தவமே உயிர் வழிபாடதனை
விளக்கும் ஒளியாம் !
அகத் தவமே மதங்களெல்லாம்
அடைய விரும்பும் முடிவு ! "
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 28 டிசம்பர், 2015

தன்னிலை அறிந்தவன்


ஒரு மருந்துக்கடையில், ஆயிரக்கணக்கான மருந்துகள் இருந் தாலும், அதன் அடுக்கிய வரிசையும், பெயர்களும் நன்றாக அறிந்தவன் எது வேண்டுமோ அதை உடனே தேர்ந்தெடுப்பது போலும், இயந்திர இயக்க அமைப்பு அறிந்த நிபுணன் அதை ஓட்டும்போது, சிறிது கோளாறு ஏற்பட்டாலும் அது ஏற்பட்ட இடத்தைத் தானே, தாமதமின்றித் தெரிந்து சரிப்படுத்தி ஓட்டுவதைப் போலும், ஒரு அறையில் பல பொருள்களுக் கிடையில் இருக்கும் ஒரு பொருளை வெளிச்சத்தில் எடுப்பது போலவும், தன்னிலை அறிந்தவனுக்கு, வாழ்க்கையில் தனக்கோ, சமூகத்திற்கோ விளையும் இன்ப துன்பங்களின் இயல்பு அறிந்து அவ்வப்போது தேவை யான முறையில் வாழ்க்கையைத் திருப்பி அனுபவிக்கும், அனுபவிக்கச் செய்யும் திறமை ஏற்படும்.
புலன்களின் அளவிலே அறிவைக் குறுக்கி அதனால் பெரும்பாலும் ஏற்படும் கற்பனை மயக்கங்களால் தனக்கும், பிறருக்கும், எவ்விதமான துன்பமும் விளைவித்துக் கொள்ளாத விழிப்பு நிலையும் ஏற்படும். ஆகவே, ஒழுக்கமும், சிறப்பும் உடைய, உயர்தர முறையில் வாழ்க்கை நடத்தும் தன்மையை ஆன்மீக நிலை அறிந்தவன் பெறுகிறான்.


-அருள் தந்தை

***********************************************
.
அறிவில் முழுமை எய்த:-
.
"ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும்
ஒன்றிணைந்த உயர்நெறியே அறம் என்றாகும்;
ஒழுக்கத்தில் கடமை, ஈகை இரண்டும்
உள்ளடங்கி இருப்பதனை உற்றுப் பாரீர்;
ஒழுக்கமே வாழ்வில் என்றும் வெற்றி நல்கும்
உயர் மக்கள் செல்வமும் அளிக்கும் மேலும்
ஒழுக்கமே இறையுணர்வில் ஒளியுண்டாக்கி
உயர்த்தி அறிவில் முழுமை எய்த வைக்கும்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

யோகப் பயிற்சி

தோற்றப் பொருட்களைப் பற்றி அறியும் விஞ்ஞான அறிவோடு, தோன்றாத மறைபொருட்களாக உள்ள மனம், உயிர், மெய் இம்மூன்றையும் அறிய வேண்டும். இதற்கு முறையான உளப்பயிற்சி அகத்தவம் [தியானம்] ஒன்றுதான் சிறந்த வழி.

.
இத்தகைய உளப்பயிற்சியினால் அறிவானது கூர்மையும், நுண்மையும் அமைதியும், உறுதியும் தெளிவும் பெறும்; பேரியக்க மண்டலம் முழுவதும் தனக்குள்ளாக்கி விரிந்து நின்று ஆழ்ந்து சிந்திக்கும் திறன் பெறுகிறது. இதனால் எல்லாப் பொருட்களின் தன்மைகளையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. பிற உயிர் பெறும் இன்ப துன்ப உணர்வுகளின் தன்மையை ஊடுறுவி நின்று அறியும் நுட்பமும் உயிர்கள் படும் துன்பத்தை இயன்றவரை போக்க உதவும் தகைமையும், எவ்வுயிருக்கும் துன்பம் விளைக்காமல் தனது தேவை விருப்பம் இவற்றை நிறைவு செய்து கொள்ளும் ஒழுக்கப் பண்பும் இயல்பாக உருவாகி விடும். எனவே யோக சாதனையால் மனிதன் அறிவிலும், செயலிலும் சிறந்து விளங்க முடியும். இவையெல்லாம் பொதுவாக யோகப் பயிற்சியினால் மனிதனுக்குக் கிடைக்கும் பெரும் பயன்கள்.

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.
****************************************************

.
வாழ்க்கை நெறியே யோகம் :

"தீயவினைப் பதிவுகளைத் திருத்திப் போக்கித்
தெளிந்த அறிவின் விழிப்பில் நிலைத்து என்றும்
தூயவினை, தேர்ந்தாற்றித் துன்பம் நீக்கும்
தொழில்களையே கடமையெனத் தேர்ந்து செய்து
மாயமெனும் மறைபொருளாம் அறிவறிந்து
மண்ணுலகில் உயிர்கட்குத் துன்பம் நீக்க
நேயமுடன் தொண்டாற்றி இன்பம் துய்க்கும்
நிறைவாழ்வாம் நெறியதுவே யோகமாகும்."

சனி, 26 டிசம்பர், 2015

தொடரும் பதிவுகள்



பிறந்தபோது நாம் ஒன்றுமே கொண்டு வரவில்லை, வாழ்ந்து கொண்டிருக்கின்றபோதும், பல கோடி ஆண்டுகள் ஆண்டு கொண்டி ருந்தபோதிலும் கூட, குடல் ஜீரணம் ஆகும் அளவுக்கு மேல் யாருமே உணவை உண்ண முடியாது. தான் சுமக்கும் அளவுக்கு மேலே உடை யைத் தூக்க முடியாது. இதைத்தான் சங்க காலப்புலவர் ஒருவர் ""உண்பது நாழி, உடுப்பன இரண்டே'' என்று கூறியுள்ளார்.
நின்றால் கால் அளவு, படுத்தால் ஆறு அடி. ஒரு அடி இதற்கு மேல் இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள இயலாது. எல்லாமே எல்லை கட...்டி இருக்கிறது. போகும்போது ஒன்றுமே கொண்டு போவது இல்லை. என்றாலும், தொடர்ந்து என்ன வருகிறது என்று பார்க்கும்போது தான் அவன் ஆக்கிய செயல்கள், அவன் அறிந்த அறிவு, எல்லாம் வினையின் பதிவாக, அறிவைப் பரம்பொருளிடத்திலே நெருங்கச் செய்யும் ஒரு பாதையாக, ஒரு வெற்றியாக அமைந்து விடுகின்றது.
ஆகவே, அந்தப் பெருஞ்ஜோதியை நாடிய நாட்டம் எல்லாம், தனிப் பெரும் கருணையை நாடி உலகுக்கு, உயிருக்குச் செய்த சேவையும், அறநெறியும் இறை வணக்கமும், இந்த இரண்டிலே ஏற்பட்ட பதிவுகளும் தான் மனிதனைத் தொடர்ந்து போகுமே தவிர வேறு ஒன்றும் தொடர்வது இல்லை.
-அருள் தந்தை



எண்ணிப்பார்:-
"நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக்கொள்வீர் :
மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
மேற்பட்டாய் அனுபவத்தில் அதுவே இலாபம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 25 டிசம்பர், 2015

வாழ்க்கை நெறி :


.
உலகில் பிறந்து வாழ்ந்த எந்த உயிரும், எக்காலத்தும் அழிவுறுவதில்லை. வினைப்பயனாக ஏற்படும் பழிச்சுமைப் பதிவுகள், வாழ்வில் கண்ட விளக்கம், அல்லது உலக இன்பம் துய்க்கும் வேட்பு இவற்றிற்கு ஏற்ப இயங்குவதில் இடமாற்றம் பெறுகின்றன. வாழும் உயிர்களுக்கு நலமோ, கேடோ தருவனவாக அமைகின்றன.
.
ஆழ்ந்து மனித சமுதாயத்தின் வாழ்க்கை நிலையை அறிவு நிலையைச் சிந்தித்தோமானால் ஒவ்வொரு மனிதனுடைய உயிரும் இன்று வாழும் மக்களுடைய உயிரில் மலர்ந்து வீசிக் கொண்டிருக்கும் நினைவலைகளோடும், இது வரையில் வாழ்ந்து இறந்து போன உயிர்களில் அடங்கியுள்ள ஆற்றலோடும் தொடர்பு கொண்டு தான் இயங்குகிறது என்ற உண்மை தெளிவாகும். அறிவில் விளக்கம் பெற்ற மகான்கள் உலக மக்கள் அறிவை தெளிவு வழியிலும், மற்றவர்கள் மக்களை மயக்க வழியிலும் செலுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். இந்த இரண்டு பக்கங்களின் இழுப்புகள் எங்கெங்கு எந்த அளவு வெற்றி பெறுகின்றனவோ, அதற்கேற்ற செயல்களும் விளைவுகளும் மனித சமுதாயத்தில் காணுகின்றன. ஆயினும் விஞ்ஞான அறிவு பெற்ற பலர் மெய்ஞானம் பெருங்காலம் அண்மையில் உள்ளது. அப்போது எல்லா மக்களும் விடுதலை வழியில் வாழ்ந்து அமைதிபெற ஏற்ற சமுதாய வாழ்க்கை நெறி உருவாகிவிடும்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
****************************************************
.
(இயேசுநாதர் கருணை செயல் ...)
.
அன்பின் ஜோதி:-
"மனித இன நல் வாழ்விற்கெனவே தன்னை
மன முவந்து அர்ப்பணித்துக் காலமெல்லாம்
புனித முறையில் அன்பின் நிலையுணர்த்திப்
பூவுலகில் ஆன்மிக ஒளிபரப்பி
தனிமனிதன் சமுதாயக் கடமை காட்டி
தரித்திரம், நோய், பஞ்சமா பாதகம் போக்கும்
கனிவுடனே உயிர் வாழ்ந்த இயேசுநாதர்
கருணை செயல் மறவாது அன்பாய் வாழ்வோம்." (777)
.
உலகமே ஒரு கலாசாலை:-
"உலகமே ஒரு பழைய பள்ளிக்கூடம்
ஒவ்வொருவருக்கும் அன்றாடம் வாழ்வில்
பல புதிய பாடம் சூழ்நிலைகட்கேற்ப
பலாத்காரமாகப் போதிக்கும், என்றும்
நாம் விரும்பும் அறிஞர்பலர் செய்யும் போதம்
நல்வாழ்வில் அவர்கள் சந்தித்தாராய்ந்த
சில முக்கிய நிகழ்ச்சிகளின் விளக்கமாகும்
சிந்தனையைச் செயல்திறனை ஒழுங்கு செய்யும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

வியாழன், 24 டிசம்பர், 2015

தியாக உணர்வு




எல்லோரும் என்னை அருட்தந்தை என்று அழைக்கிறீர்கள்.  ஆனால் உங்களுடைய திருமணத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இன்று அகக்காட்சியாக பார்க்கிறேன்.

.
நீங்கள் சாதாரணமாகப் பெண்மையை புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்ற தேவையே இல்லை. உள்ளதைப் பாராட்டினாலே போதும். சாப்பாடு செய்து போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லையா? நாக்கு வராது. அதை மாற்றிக்கொள்ள வேண்டும். இனிமேல் காலை முதல் மாலை வரை யார் நன்மை செய்தாலும் நன்றி பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது பண்பாட்டின் உயர்வு. இனிமேல் இந்த பண்பாடு எல்லா இடத்திலும் வர வேண்டும்.

.
உலகத்திலேயே நட்பு மிக மிகச் சிறந்தது; பயனுடையது; அதிலே கணவன் மனைவி நட்பைப் பற்றி சாதாரணமாகச் சொல்ல முடியாது. அத்தகைய நட்பு எந்தவிகிதத்திலும் மேலானதாகவும், மேன்மையுறவும், வளர்ச்சி பெறவும், வலுப்பெறவும் இரண்டு பேருடைய வாழ்க்கையும், தூய்மையானதாகவும் மேன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். அப்போது அவர்களின் குழந்தைகள் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த உயர்வான நன்மையைக் கருதி முன் ஏதேனும் பிணக்கு இருந்தாலும் மன்னித்து விடுங்கள். மன்னிக்க முடியாத குற்றமேயில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் தியாக உணர்வுடன் வாழ்கிறீர்கள். அந்த உணர்வையே நினைவில் வைத்துக் கொண்டு சிறு சிறு குற்றம் குறைகள் இருந்தால் அவைகளை எல்லாம் போக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் அனைவரையும் இறைநிலையில் மனதை நிறுத்தி வாழ்த்துகின்றேன்.

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வளாக வளமுடன்.

.
*******************************************

.
"பெண்களது பெரும் மதிப்பை உணர்ந்தே உள்ளேன்
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்ன
பெருமை இதைவிட எடுத்துக் கூறுவதற்கு"

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 23 டிசம்பர், 2015

பெருந்தகை



அளவுக்கு மீறி ஒருவர் உன்னிடம் மரியாதை காட்டுவாரேயானால் உங்கள் இருவரில் எவரிடமோ, தவறு இருக்கின்றது என்றுதான் பொருள்.
.
ஒன்று அவன் அப்பாவியாக இருந்து உன்னை ஏதோ அதிக ஆற்றல் உள்ள மனிதனாக கற்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.
.
அல்லது, உன் நயவஞ்சகமான வேடமும், நடிப்பும் அவனை ஏமாற்றி இருக்க வேண்டும்.
.
அல்லது அவன் உன்னிடமிருந்து சலுகையையோ, இலாபத்தையோ அளவுக்கு மீறிப் பெறத் திட்டமிட்டுக் கொண்டிருக்க வேண்டும். பிறரை ஏமாற்றாமல் வாழ்பவன் ஒரு நல்ல மனிதன். பிறரிடம் ஏமாறாமல் வாழ்பவன் ஒரு அறிவாளி. பிறர் ஏமாற்றுகின்றார்கள் எனத் தெளிவாக உணர்ந்தும் அதை தெரிந்து கொள்ளாததுபோல் நடித்து, இயன்ற அளவிலும், பாதகமில்லாத முறையிலும் விட்டுக்கொடுத்து இருவரும் நலம்பெறக் காண்பவன் ஒரு பெருந்தகை.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வளாக வளமுடன்.
************************************************
.
நலம் தீது சீர்தூக்கி வினையாற்ற :
.
"சிந்தித்து நலம்காத்துச் செயலாற்றும்
பண்புடையோர் சிலர்க்கும் தங்கள்
செயல் விளைவாய் சிலர் இன்பம் சிலர் துன்பம்
தவிர்க்க முடியாதபடி பெறுதல் காண்போம்.
இந்த ஒரு நிலை வந்தால் இதைச் செய்தால்
செய்யாக்கால் எங்கு நலம் மிகும் என்று
எண்ணிச் சோதித்த பின்னர் ஏற்பதா இச்செயலை
விடுவதா எனும் முடிவை எடுக்க வேண்டும்.
எந்த ஒரு வகைத் துன்பம் எத்தரப்பில்
வந்தாலும் இன்பம் காண்போர்
ஈடாகத் துன்புருவோர்க் காறுதலாய்
ஈதல் எனும் ஏற்றபண்பைப்
பந்தமின்றிச் சீர்தூக்கிப் பலன் மிகுதி
கண்டாற்றல் மனித நீதி
பண்பாடே எற்றதாம் பகுத்துணர்ந்து
செயல்படுத்தி நலமாய் வாழ்வோம்."
.
எண்ணமும் செய்கையும்:-
"எண்ணு, சொல், செய் எல்லோர்க்கும் நன்மை தர
எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி



செவ்வாய், 22 டிசம்பர், 2015

மகரிஷி அவர்களின் சில கவிகள்

"ஆண்டுதோறும் 'மார்கழி' மாதம் தினமும், மகரிஷி அவர்களின் துணைவியார் 'அன்னை லோகாம்பாள் அவர்கள்' வீட்டின் முன் கோலமிடும்போது, கோலத்தை சுற்றி கோலமாவால் கவி எழுதுவதற்காக, மகரிஷி அவர்களால் 1953ம் ஆண்டு தொடங்கி சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து மார்கழி மாதம் நாள்தோறும் தேதியிட்டு சொல்லப்பட்ட கவிகளில் அன்பர்களின் சிந்தனைக்காக சில கவிகள் :
.
இயல்பும் - உயர்வும் : (22-12-1953)
....
"அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு".
.

அன்பின் செயல் : (22 - 12 - 1954)
"அனைத்துயிரும் ஒன்றென்று
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமையெல்லாம்
அன்பின் செயலாகும்."
.
மனிதன் ஆற்றல் : (22-12-1955)
"இயற்கையால் விளைதுன்பங்கள் போக்கிட,
முயற்சித்து, அணுமுதலண்டங்கள் நிலைகண்டான்.
பயிற்சியால் புவி வாழ்வை மேலாக்கிட,
செயற்கைப் பொருள்பல செய்தான் மனிதனே."
.
குறை காண வேண்டாம் : (22-12-1956)
"பறை ஒளியால் சங்கீதம்
பயனற்றுக் காண்பதைப் போல்,
குறை காண்போர் அறிவில் நற்
குணங்கள் பயனற்றிருக்கும்."
.
அன்பு வளர : (22-12-1957)
"பொருளாதாரத் துறையில் ஏற்றத் தாழ்வை
போக்கிவிட்டால் கற்பனை பேதங்கள் போகும்,
அருளாதாரத் துறையில் அறிவு செல்லும்,
அன்பு வளரும், மனிதர் வாழ்வு சீராம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
("மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து")

அவரவர் துன்பத்திற்கு அவரவரே காரணம்

அவரவர் துன்பத்திற்கு அவரவரே காரணம் :-
...
.
வினா : "நம் வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கு நாமே காரணமாக எப்படி இருக்க முடியும்?"

.
விடை : "உங்களுக்குத் துன்பம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நினைப்பில் தான் துன்பம் இருக்கிறது. உண்மையில் அது துன்பமே இல்லை. உங்களுக்கு 85 வயது என்றும் உங்கள் அப்பாவுக்கு 110 வயது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அவர் இறந்துவிட்டார். நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். உண்மையில் அது துன்பமா? இன்னும் இருந்தால் இரண்டுபேருக்குமே துன்பமாக இருக்கும். இம்மாதிரி எத்தனையோ இன்பத்தைத் துன்பமாக நினைக்கிறோம். அதிகமாகச் சாப்பிட்டால் துன்பம் வரும் என்பது தெரியுமே. ஆனால் சாப்பிடும் போது இன்பமாக இருக்கிறதே. அளவோடு யார் நிற்கிறார்கள்? அஜீரணம் வருகிறது. எனக்கு இவ்வளவு சொத்து இருந்தால் தான் இன்பம் என்று நினைக்கிறார்கள். அப்படி எதிர்பார்க்கும் போது கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படுகிறார்கள். உண்மையில் அது கிடைத்துத் தான் வாழ வேண்டும் என்பதில்லை. ஆனாலும் கூட எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள். யார்மேல் குற்றம்?"

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வளாக வளமுடன்.

*********************************************

(..மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.)

அருள் தொண்டு:-

"குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்;
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்,
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்."

.
வாழ்க்கைக் கடமை:-

"ஆக்க முறையால் அன்றிப் பிறர் உழைத்து
ஆக்கிவைத்த பொருள் கவர்ந்து பிழைக்க மாட்டோம்;
நீக்கமற நிறைந்த நிலை நினைவிற் கொண்டே
நிலையற்ற வாழ்க்கையிலே கடமை செய்வோம்."

.
யோகம் :-

"எண்ணம் தானாக எழுந்து அலையாமல்,
எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 21 டிசம்பர், 2015

நல்மருந்துகள் :



எந்த இடத்தில் மனிதன் ஐவகைப் பற்றுக்களால் அறிவு குறுகி, மயங்கி, தன் பிறவி நோக்கத்தையும் வாழ்வின் நெறியையும் மறக்கின்றானோ அதே நேரத்தில் மனிதனிடம் அமைந்துள்ள அடித்தள அறிவாற்றலாகிய பேரறிவு, குறுகி நிற்கும் புற அறிவை நேரான வழிக்கு திசை திருப்புகிறது. அப்போது விருப்பங்கள், செயல்கள் இவற்றில் தடைகள் விளைந்து வாழ்வில் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே துன்பமாக, சிக்கலாக, கருத்துப் பிணக்காக பெற்று புறமனம் குழப்பமடைகின்றது. ...

இத்துன்பங்களிலிருந்து புறமனத்தை மீட்க பேரறிவு, விரிந்த இயற்கை ஆற்றல் மூலமாகவும், மனிதர் மூலமாகவும் உதவிக் கொண்டே தான் இருக்கும். இந்த நிலையிலேனும் புறமன இயக்கத்திலேயே குறுகியுள்ள மனிதன் அவன் வாழ்வின் இயக்க களமான அருட்பேராற்றலை நினைவு கொள்ள வேண்டும். பேரறிவின் நிலைக்கு, அந்நினைவு அழைத்துச் சென்று ஒன்ற வைத்துவிடும். இந்த வகையில் பேரறிவில் புறமனம் தொய்வு பெறும் மனித முயற்சியே யோகம் எனப்படுகிறது. எனவே வாழ்வின் சிக்கல்களும் துன்பங்களும் பிறவியின் நோக்கத்திற்கு முரண்பட்ட செயல்களின் விளைவுகளேயாகும். அவை திசைமாறி நிற்கும் புற மனத்தை ஒழுங்குபடுத்தப் பேரறிவு அளிக்கும் நல் மருந்துகளே (Divine Treatments) யாகும். இயற்கையின் இத்தகைய ஒழுங்கமைப்பை உணர்ந்து, அதனால் விளைந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு திருத்தம் பெற மனிதன் முயன்றால் உய்வு நிச்சயம்.

யோகப் பயிற்சியின் மூலமான மனிதன் பேரறிவாக, விழிப்போடு இயங்கவும், வாழ்க்கையில் சிக்கல்கள், துன்பங்கள் விளையாமல் காக்கவும், வந்தபின் முறையாகப் போக்கவும் ஆற்றலைப் பெறுகிறான். இதன் மூலம் பிறவி நோக்கத்திற்கு முரண்படாது அவன் பயணம் இனியவையாக அமையும். இத்தகைய பெருமை வாய்ந்த யோகப் பயிற்சியில் மிகவும் மதிப்புடைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்று வரும் பேறுபெற்ற உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி



*********************************************
.
தெய்வத்தைப் பற்றிய கருத்து :-
"தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்
தெய்வமிலை என்போன் அச்சொல் விளங்கான்
தெய்வ மென்று கும்பிடுவோன் பக்தன், அந்தத்
தெய்வத்தையறிய முயல்வோனே யோகி;
தெய்வ நிலையுணர்ந்தவனே தேவனாம், அத்
தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்
தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே
தெய்வத் தொண்டாற்றுபவன் மனிதன் காணீர்."
.
குண்டலினி யோகம்:-
"அறியாமை, உணர்ச்சிவய மயக்கம், மேலும்
அலட்சியம் மூன்றுமே அறிவின் ஏழ்மை;
அறிவுகுறுகிப் பிறழ்ந்து துன்பம் நல்கும்
அனைத்துச் செயலும் பிறக்கும் உண்மைகாணீ ர்;
அறிவை அயரா விழிப்பில் பழகிக் கொண்டு
அவ்வப்போ எழும்எண்ணம் ஆய்ந்து தேர்ந்து
அறிவின் ஒளியாய் வாழ ஆற்றல் நல்கும்
அருள்வழியே குண்டலினி யோகம் ஆகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பெண்ணின் பெருமை

கருத்தரித்த நாள் முதற்கொண்டு ஒன்பது மாதம் பத்து நாள் வரையில் ஒரு தாய்க்கு என்ன துன்பம் இருக்கும் என்று யாராலும் எண்ணிப் பார்த்தால், அதைவிட துன்பம் உலகத்தில் மனிதனுக்கு இருக்க முடியாது. எல்லையற்ற பெருவெளியாகி மெய்ப்பொருள் தன்னில் உள்ளமைந்துள்ள ஆற்றலால் நுண்ணியக்க மூலக்கூறாகிய ஆகாசமெனும் சக்தியாகி, சிவம் சக்தி இரண்டின் கூட்டுச் சேர்க்கையில், விகிதாச்சார அமைப்புக்கேற்ப அணு முதல் அண்ட கோடிகளாக விளங்குவதை சிந்தனையாற்றல் பெற்ற அனைவரும் அறிவோம்.
.
பேரியக்க மண்டலமெனும் பிரபஞ்சத்தின் ஆக்கம், நிகழ்வு, முடிவு எனும் மூன்றும் அணுக்கள் கூடுதல், இயங்குதல், பிரிதல் எனும் நிகழ்ச்சிகளேயாகும். எனினும் உயிரினங்கள் தோற்றங்கள், காப்பு இவற்றை பெண்மையினிடத்தே அருட்பேராற்றல் அமைத்திருக்கும், ஒப்புவித்திருக்கும் பேருண்மையை உணர்ந்து போற்ற வேண்டியுள்ளது.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
********************************************
பெண்மையின் பெருமை :
"பெண் வயிற்றிலுருவாகிப் பின்னுமந்த
பெண் கொடுத்த பால் உண்டே வளர்ந்துமேலும்
பெண்துணையால் வாழுகின்ற பெருமை கண்டு.
பெண்மையிடம் பெருமதிப்பு அறிஞர் கொள்வார்;
பெண்மையே தன் உடலில் பாதியாகும்
பேருண்மை உணர்ந்ததனால், எனினும் சில்லோர்
பெண்ணினத்தைப் பழித்தெழுதிப் பாடியுள்ளார்
பேதைமையால், அறிவுநிலை உயரா முன்னம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 19 டிசம்பர், 2015

தன் முனைப்பு (EGO)


 .
உயிர்கள் அனைத்திலும் மேன்மையானவன் மனிதன். மனிதன் உடற்கருவிகளின் சிறப்பு வியத்தகு முறையில் அமைந்துள்ளன. ஐம்புலன்களால் உணர முடியாத இயற்கை ரகசியங்களை எல்லாம் உணரத்தக்க பேராற்றல் ஆறாவது அறிவாக மனிதனிடம் மிளிர்கின்றது. ஆறாவது அறிவு முழுமை பெற்று தன்னையறியும் வரையில் புலன் கவர்ச்சி மயக்கத்தில் தன்னை மறந்து நிற்கிறான்.
.
உடலமைப்பு, வலிவு, செயல் திறன், கல்வி, அறிவு நுட்பம், புகழ் இவை ஒருவருக்கொருவர் வேறுபட்ட தரங்களில் அமைந்து இருக்கின்றன. அறிவின் மயக்க நிலையில் தனக்கு மூலமும் முடிவுமான ஒரு பேரியக்க நிலையையும் அதன் ஆற்றலையும் மறந்திருப்பதால் அவன் அடைந்துள்ள எந்த உயர்வும் அவனுக்கு ஒரு செருக்கான மன நிலையில் அமைகின்றது. இந்த அறிவின் மயக்கச் செருக்குதான் தன்முனைப்பு ஆகும். இது ஒரு திரை போன்று அறிவின் ஒளியை மறைத்து நிற்கின்றது.
.
அவன் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்கிறான். ஆனால் கண்கள் அவனால் செய்து கொள்ளப்பட்டவை அல்ல. நறுமணங்களை முகர்ந்து மகிழ்கிறான். மூக்கு அவனால் செய்து கொள்ளப்பட்டதல்ல. இது போன்றே அவன் காது, நாக்கு, தொட்டுணர் கருவி, மற்ற உறுப்புக்கள் எல்லாவற்றையும் கொண்டு இயக்கி உலகப் பொருட்களைத் துய்த்து மகிழ்கிறான். இவற்றில் எதுவும் இவனால் ஆக்கப்பட்டது அல்ல. இவனுக்கு உள்ளும் புறமும், தொடக்கமாகவும், முடிவாகவும் ஒரு பேராற்றளால் இவை எல்லாம் தோன்றின; இயங்கிக் கொண்டும் இருக்கின்றன.
.
மனிதன் உடலோ அணுக்களால் ஆகிய ஒரு கூட்டு இயக்க வடிவம். உயிரும் நுண்ணியக்க ஆற்றலே. இவ்விரண்டும் எல்லாம் வல்ல பரம்பொருளின் மலர்ச்சிகளே. சூக்கும வடிவமாகிய உயிர் உடலோடு கொண்ட தொடர்பால் இன்ப துன்ப உணர்ச்சிகள் எழுகின்றன. இந்த உணர்ச்சி நிலைகளால் கட்டுண்ட மனிதன் தன் ஆன்ம நிலையை மறந்து, புலன் மயக்க நிலையில் மயங்கிச் செருக்குற்றிருக்கிறான். இந்த மயக்கச் செருக்கிலிருந்து பிறப்பனவே ஆறு தீய குணங்களும். அவற்றால் விளையும் தீமைகளே துன்பங்களும் வாழ்க்கைச் சிக்கல்களும் ஆகும்; தவறான பழிச் செயல்களும் பாவப் பதிவுகளுமாகும்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
***************************************
தன் குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்பாம்:
"தன் குற்றம் குறை கடமைத் தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்
ஏன் குற்றம் பிறர்மீது சுமத்தக் கூடும்
ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்
மேன்மைக்கே மனம் உயரும் பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்
நன்மைக்கேயாம் செய்த பாபம் போச்சு
நான் கண்ட தெளிவு இது நலமே பெற்றேன்."
.
நல்லோர் உள்ளமும் பொறாமையால் கெடும் :
"நல்ல உள்ளம் பண்பட்ட குடும்ப மேன்மை
நாடறிந்த புகழ் வாழ்க்கை அமைந்துள்ளோர்க்கும்
மெல்ல ஒரு நபர் மீது பொறாமை வந்தால்
மிகுந்து அது உள்ளத்தை நச்சு ஆக்கி
செல்லரித்த புத்தகம்போல் சீர்மை கெட்டுச்
செயல் திறனைச் சிறக்கவிடா துண்மை கண்டோம்
வல்ல மனவளக்கலையைப் பயில்கின்றோரே
வாழ்த்துகின்றேன் வாழ்வீரே பொறாமைவிட்டு."

வெள்ளி, 18 டிசம்பர், 2015

சிந்தாமணி

சிந்தாமணி. சிந்தை மணியான நிலை. அறிவு சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர் நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூலநிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து, உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய், முடிவாகத்தான் இயக்க மற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப்பொருளாகி வ...ிடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற் கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.

தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பு அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலை தான் சிந்தாமணி. இது தான் மனிதனின் முழுமைப் பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும். பிறப்பும் அறும். பழிச்செயல்கள் கழிக்கப் பெற வேண்டும். அப்போது தான் தூய்மை பெறும். தன்னிலை மறந்து, ஆன்மா புறக் கவர்ச்சியில் மயங்கி செயலாற்றும் போது, ஆசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு குணங்களாக நிலைமாறி இயங்குகிறது. இதன் விளைவாகவே பழிச் செயல்கள் விளைகின்றன. உள்ளத்தில் களங்கமும் உடலில் நோயும் பதிவாயின. இதனால் ஆன்மா சிறுமைப்பட்டுத் துன்புறுகின்றது. இந்த நிலையிலிருந்து ஒரு நல்ல திருப்பம் அதற்குக் கொடுத்தாக வேண்டும்.

எனவே இச்சையே தொழிலாக உடைய ஆன்மாவை அதன் போக்கிலிருந்து திருப்பிவிட வேண்டும். இது மனித குலத்திற்கு இன்றியமையாதது என்று நம் முன்னோர்கள் கண்டனர். புறத் தோற்றங்களால் கவரப்பெற்று புலன் வரையில் இயங்கும் ஆன்மாவிற்கு ஒரு உயர்வு கிட்ட வேண்டுமெனில் தன் விருப்பம்போல் நிலைத்து நிற்க முறையான உளப்பயிற்சி அவசியம். அனுபவத்தால் தேர்ந்த அப்பயிற்சி [1] ஒர்மைநிலை (Concentration), [2] அடக்கநிலை (Meditation), [3] ஒடுக்கநிலை (samadhi), என மூன்று பிரிவுகளில் அடங்கும். அறிவு ஓர்மை பெற்று அடங்கி லயமாகும். இப்பயிற்சியே ஆலயம். "ஆ + லயம்" = ஆன்மலயம் என்று வழங்கப்பெறுகின்றது. மூன்று படிகளான ஆலய முறைகளில் முதன் முதல் தேவையானதும், பயன் மிகுந்ததும், எளிதானதும் ஓர்மை நிலைப் பயிற்சியே.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 17 டிசம்பர், 2015

உயர் நிலைக்கான பயிற்சி

"எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதையெல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும் பொழுது, அந்தப் பரம்பொருள் இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக மக்...களாக, எனக்கு உரியவர்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிறபோது, "நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும் பிச்சை எடுக்க வேண்டும்?" என்ற நிலை ஏற்படும். செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு, கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் என யாரேனும் இருந்தால் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. உன்னை வாழ்த்திக் கொள், உன் குடும்பத்தை வாழ்த்து, சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து. மன அமைதியைப் பேணும் வகையிலே தியானம், சிந்தனை, அகத்தாய்வு, இவற்றில் தொடர்ந்து ஈடுபாடு. உடற்பயிற்சியையும் நன்கு செய்துவா.

இவ்வாறு ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியைக் கைக்கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம், ஏனென்றால் எந்தச் செயல் செய்தாலும் அங்கே விளைவு கடவுள் செயல்தான். (That is the Cause and Effect system). அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத்தக்கவாறு, பொருளுக்கு தக்கவாறு உனக்கு இன்பமோ துன்பமோ, வெகுமதியாகவும் தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ அதுவே தான் எல்லாம் வல்ல இறை. ஆகவே அந்த இறைவனை உன்னுடைய செயலின் விளைவாகக் காலையிலிருந்து மாலை வரையில் பார்த்து மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டுத் தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம்.

ஞானமானது நம் நாட்டில் பிறந்தது தான். "துறவு" என்ற தத்துவம் இங்கே ஜனித்தது தான்; ஆனால் அது குழப்பப்பட்டு இருக்கிறது. "துறவு" என்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்கேயாகிலும் ஓடிவிடுவது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. இடம் மாறினால் துறவாகி விடுமா என்ன. ஒருவர் சென்னையிலுள்ள அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவரை 500 மைல் தொலைவிலுள்ள ஊருக்கு மாற்றிவிட்டார்கள் என்றால் இன்னொரு இடத்துக்குத் தான் போய்விடுகிறார் - இது துறவாகுமா? அதே போல இடமாற்றமோ அல்லது செயல் மாற்றமோ வேறு எந்த வெளிமாற்றமோ துறவு அல்ல. உள்ளத்திலே ஒரு நிறைவு ஏற்பட வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் "அளவு" ஒன்று "முறை" ஒன்று என்று வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு, முறை இவை மீறும்போது தான் துன்பம் உண்டாகிறது. இந்த முறை (Limitation and Method) இரண்டையும் கடைப்பிடித்தால் அதுதான் துறவு. இந்தக் கருத்தைத் தான் நான் ஒரு கவியில் எழுதியுள்ளேன்; "உறவிலே கண்ட உண்மைநிலைத் தெளிவு துறவு எனப்படும்," என்று.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

****************************************
உறவும் துறவும்:-
"உறவிலே அமைந்துள்ள உண்மையை உணர்ந்திடு
துறவிலே உள உள்ளத் தூய்மை பெற்றுய்யலாம்."
.
போலித் துறவிகள் :-
"வாழவகையறியாதோர் வாழ்க்கைக் கேற்ற
வசதிகளே இல்லாதோர் சோம்பல் மிக்கோர்
கோழை, கயவர், குற்றவாளியானோர்
கொடுத்தோ பெற்றோ கடனால் தோல்வி கண்டோர்
வாழையடி வாழையென பிட்சையேற்றே
வாழ்ந்துவரும் பரம்பரையார் இவர்கள்கூட
ஆழமனைதைப் பழக்கி அறிவறிந்து
அறம்புரியும் துறவிகள்போல் வேடங்கொள்வார்."
.
துறந்தோர் காட்டிய வழி:-
"துறவறத்தில் அறிஞர் பல கண்டதென்ன?
சோறு துணி வீடு இவை தோற்று தற்கும்
பிற ஏதும் எளிய வழி போதித்தாரா?
பிச்சை எடு! தொண்டு புரி! பற்று விட்டு
அறநெறி நில்! போதனை செய்! ஐம்புலன்கள்
அடங்க மன ஓர்மைக்கு மௌனம் போற்று!
மறவாதே மயங்காதே என்று சொன்னார்.
மனிதரெலாம் இவையேற்றால் உலகு என்னாம்?."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

புதன், 16 டிசம்பர், 2015

ஆறாவது அறிவு

தெய்வமே, நானாகவும் இருக்கிறது என்பதை அறிவதே ஆறாவது அறிவின் நோக்கம். ஐந்தாம் அறிவுக்கப்பால் அறிவு இறைநிலை நோக்கி எழுகிறது. அதன் வேகத்தைத் தடுத்து, அதன் நோக்கத்தைத் திருப்பிப் புலனுணர்ச்சியில் விடும்போது தான் முரண்பாடுகள் விளைகின்றன. இன்றைய உலகத்தின் சிக்கல்கள், குழப்பங்கள், துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் அறிவிற்குத் தன் லட்சியப் பூர்த்தி கிடைக்காத நிலை தான். அந்த வேகம் புலனுணர்வில் செயல்படும் போது துன்பங்களின் அளவும், எண்ணிக்கையும் மிகுகின்றன.
.
ஆறாவது அறிவால் பிரம்மம் தன்னைத்தானே அறிந்து கொள்கிறது. வேலை முடிந்து பரிணாமம் பூர்த்தியடைகிறது. பிரம்மம் தன்னைத்தானே அறிந்து கொள்வது தான் பரிணாமத்தின் நோக்கம். அந்நோக்கம் நிறைவுறும் வரை மனிதர்களுக்கு அமைதியில்லை. அத்தகு மனிதர்களைக் கொண்டிருக்கும் சமுதாயத்திற்கும், உலகத்திற்கும் அமைதியில்லை. கடலில் இருந்த நீர் கடலுக்குத் திரும்பப் போய்ச் சேரும் வரை நீருக்கு அமைதியில்லை. இடையில் மேகமாக இருக்கிறது. மழையாக அருவியாக... ஆறாக, நதியாக இருக்கிறது. ஆனால் கடலை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. கடலை அடைந்தால் தான் அதற்கு ஓய்வும், அமைதியும்.
.
அப்படி, பிரம்மமே அணுவாகி, பஞ்சபூதமாகி, ஜீவனாகி, மனிதனாகி இருக்கிறது. இவையெல்லாம் இடைநிலை தான். இனி, மனிதனின் ஆறாவது அறிவு மேலோங்கப் பெற்று அவன் தன்னிலையை - தான்பிரம்மம் என்ற நிலையை அடைந்தாக வேண்டும். அதுவரை மனிதனுக்கு அமைதி கிட்டாது.
.
உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் என்றாலோ மனம் என்று ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனமென மறுபெயர் பெற்றிருக்கிறது? உயிரோ அணுக்கூட்டம், அணுவோ பிரம்மத்தின் இயக்கநிலை. எனவே நாம் பிரம்மம் என்பது தெளிவாகிறது.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
***********************************************
உய்யும் வழி :-
.
அறிவின் இயல்பு :
"அறிவு ஆறாம் நிலையை எய்த பின்னர்
அது முழுமை பெற்று தனையறியு மட்டும்
அறிவிற்கு அமைதி கிட்டா அவ்வப்போது
அது தேவை பழக்கம் சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காமமுதல் ஆறுகுணங்கள்
ஆகி விளைவாய் இன்ப துன்பம் துய்த்து
அறிவு தன் மூல நிலை நோக்கி நிற்கும்
அதன் பிறகே படிப்படியாய் முழுமை யெய்தும்."
.
பிரம்ம வித்தை:-
வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்
வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது,
அத்து விதமாகி அவன் எங்கு மாகி
அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்
சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை
சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்
தத்துவத்தின் முடிவான தானேயான
தனை யறிந்த வித்தை அது தர்க்கம் வேண்டாம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

தெய்வீக உறவு

குழந்தைப்பேறு உண்டாவதற்கு முன்னதாகவே கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை நமது பண்பாட்டில் நாம் வளர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் பிணக்கு (Conflict Thoughts) எழாது உள்ள குடும்பத்தில் தான் குழந்தைகள் நன்றாக இருக்கும். அங்கு பிணக்கு இருக்குமேயானால் அடிப்படை சுதந்திரத்தையே அடக்குமுறையால் தடுக்கும் போக்கு, அதில் உள்ள போராட்டம் குழந்தைகளிடம் பாதிக்கும்; மனம், உடல் நலம் கெட்டதாகத் தான் அமையும். இதை மிகவும் முக்கியமாக காண்கின்ற போது, கணவனும் ஒத்துழைக்க வேண்டும், மனைவியும் ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உள்ளத்தைப் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதற்காக வந்தாகிவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. இனி வாழ்ந்து தான் ஆக வேண்டும். ஒருவருக்கொருவர் உதவித்தான் ஆக வேண்டும் என்ற அளவிலே வந்துவிட வேண்டும்.

.
அங்கு விட்டுக் கொடுப்பதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் ஒருவிதமான பிடியை பிடித்துக் கொண்டு, என் கருத்துத்தான் உயர்ந்தது என்று வைத்துக் கொண்டால் பிணக்குதான் வரும். இதெல்லாம் சரி செய்வதற்கு அகத்தவம் என்ற முறையிலே ஒரு தியான முறையை நல்ல முறையில் செய்து வந்தார்கள் என்றால் மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்து சரி செய்து கொள்ளலாம்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

*************************************************

.
வாழ்த்த மனம் நிறையும்:-

"மனைவியவள் தனைமதிக்க வில்லையென்ற குறையால்
மனம்வருத்தும் கணவருக்கும் மணந்தவர் பொறுப்பாய்
எனைமதிக்க வில்லையென்று ஏங்கும் பெண்களுக்கும்
இன்பவாழ்வு மலர்வதற்கு ஏற்றவழி சொல்வேன்;
நினைவு கூர்ந்துன் வாழ்க்கைத்துணை இதுவரை உங்கட்கு
நிறை மனத்தோடன்பு கொண்டு செய்தவெல்லாம் பாரீர்,
உனைமதித்து ஆற்றியுள்ள இனியசெயல் அனைத்தும்
உள்நினைந்து நன்றிகூறி வாழ்த்த மனம் நிறையும்."

.
அகத்தவம் பெற்றார் குழந்தைகள் :

"திருமணத்தின் முன்னரே அகத்தவத்தைத்
தொடங்கியவர் குழந்தைகளைப் பெற்றபோதும்
கருவினிலே அமைந்திட்ட தவத்தின் வித்து
களங்கத்தைப் போக்குவதில் திருப்பங்கொள்ளும்;
பெருநெறியாம் ஆன்மிக அறிவில் வாழும்
பெற்றோர்க்குப் பின்னர் வரும்குழந்தை எல்லாம்
திருநிலையாய் மெய்ப்பொருளை நாடிச் செல்லும்
தெய்வ உணர்வைப் பெறுவர், களங்கம் போகும்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 14 டிசம்பர், 2015

தெய்வம் படும் பாடு

இறைவழிப்பாட்டின் மதிப்புணர்ந்து முதற் காலத்தில் ஆன்மீகத் துறையில் சிந்தனை செலுத்திய மகான்கள் அகத்தவத்தின் மூலம் மெய்பொருள் கண்டார்கள். அதை மொழி விளக்கம் செய்த போது அது வேதாந்தம் ஆயிற்று.

.
அக்காலத்தில் அறிவில் போதிய வளர்ச்சி பெறாத மக்களுக்கு பக்தி வழி போதனை தொடங்கியது. இறைவனை தனித்த சன்னியாசியாக காட்டி அதற்கு ஏற்ற உருவம் கற்பித்து வணங்கச் செய்தார்கள்.

.
மத்திய காலத்தில் பக்தி வழியில் இறைவழிபாடு மாற்றம் பெற்றது. மனிதனுடைய மன இயல்பை வைத்துக் கடவுளைக் கற்பித்தார்கள். தனியாக இறைவனுக்குச் சிலை வைத்து வணங்குவது சிலருக்கும் பொருந்தவில்லை. இறைவன் தனியாக இருந்தது கண்டு பரிதாபப்பட்டார்கள். இறைவனுக்கு அருகில் சக்தியை வைத்து வணங்குவதற்கு முற்பட்டார்கள் தெய்வங்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

.
மத்திய கால பிற்பகுதியில் தெய்வங்களைப் பழிவாங்க நினைத்தார்கள் சிலர். மனிதன் குழந்தைகளைப் பெற்று படும்பாட்டை தெய்வமே பட்டுப் பார்க்கட்டும் என்ற கருத்தில் தெய்வங்களுக்குப் பிள்ளைகளை உருவாக்கினார்கள் !

.
தற்கால விஞ்ஞான யுகத்தில் பக்தி மார்க்கத்தில் ஒரு புதுமை மலர்ந்தது. கடவுள்களுக்கு அலங்காரம், பொன், வைர நகைகளும், வாண வேடிக்கை முதலியனவும் கூட்டப்பெற்றன.

.
காலத்திற்கு ஏற்ப தெய்வங்களுக்கு ஆடைகளும் மாற்றப்பட்டன. முதற்காலத்தில் காட்டு மிருகங்களின் தோல்கள் உடுத்தப்பட்டன. பிறகு நார், பட்டு, உடைகள் உடுத்தப்பட்டன. இக்காலத்தில் நைலான் துணிகள் அணியப்பட்டு வருகின்றன. மனிதனை படைத்த கடவுள், மனிதனுக்கு அறிவாற்றலை அளித்தது. அறிவில் திசைமாறிய மனிதன் தெய்வத்தையே 'அல்லலுக்கு உள்ளாக்கி விட்டான்'. தெய்வமே தானாகவும் உள்ளது என்ற உண்மையை பெரும்பாலோர் உணரும் வரையில் மனிதன் படும்பாடெல்லாம் தெய்வம் படுவதாகக் காட்டும் நகைச்சுவை (humorous) நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்.

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

*******************************************

அத்வைதம், துவைதம் :

"கற்கண்டு என்ற ஒரு வார்த்தை சொன்னால்
கரும்பு ரசப்பக்குவத்தின் சரித்திரமாகும்;
கற்கண்டைக் கரும்பு-ரசம் என்றால் அஃது
கருத்துக்கு அத்துவித தத்துவம்போல்;
கற்கண்டு கரும்புரசம் வேறு வேராய்க்
காட்டுவது துவித நிலை விளக்கம்;
கற்கண்டு கரும்புரசம் இரண்டும் போலாம்
கடவுளும் மற்றனைத்துருவும் கருத்துணர்ந்தால். "

.
இறைநிலை:

"தெய்வத்தை நாடுவதும் தெளிந் தறிவில் தேறுவதும்
திருநிலையாம் மனிதனவன் பிறவி நோக்கம் பயனாம்
தெய்வநிலை தெரிந்து கொண்டேன் திருவருளே நானாகத்
திகழும் அனுபவம் எனக்கு இல்லை யென்பர் சில்லோர்;
தெய்வமெனும் பாலைப் பிறை இட்டுத்தயிராக்கிப் பின்
தேடுகிறார் பாலை, அதைக் காணேன் என்றால் மயக்கே;
தெய்வம் உயிர்க்குள் அறிவாய் அதன் படர்க்கையிலே
திகழ்கிறது மனமாகத் தேடுவது எதை? எங்கே?."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

வாழ்க்கையின் சிற்பி

இன்று மக்களிடையே   “இவரைக் கெடுத்துவிட வேண்டும்” என்று அவரும் “அவரைக் கெடுத்துவிட வேண்டும்” என்று இவரும் இன்னும் பலப்பல விதத்திலும் தீய எண்ணம் மலிவாகக் காணப்படுகிறது. ஆனால், அந்த எண்ணங்கள் செயல்பட விடாமல் அவரவர்களும் எதிர் நடவடிக்கை மூலம் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். செயலுக்கு வர முடியாத இந்தத் தீய எண்ணங்களின் தொகுதி என்ன ஆகும்? செயலாகாத வரை அவற்றுக்கு நிறைவும் வராதே! அதுதான் இன்றெல்லாம் நாம் காணும் இயற்கை உற்பாதங்களாக - அதாவது புயல், வெள்ளம் என உருவெடுத்து எல்லோருக்கும் துன்பமாக மலர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், இயற்கையே தான் எண்ணமாக வந்திருக்கிறது. எண்ணமும் இயற்கையின் ஒரு கூறுதான்.


ஒளி ஒன்றுதான். அது ஆற்றிய செயல்களும், விளைவுகளும் பலப்பல. அதுபோல் எண்ணமும் ஒன்றுதான். என்றாலும் அது ஆற்றும் செயலும் விளைவுகளும் கணக்கிட முடியாதன. எண்ணத்தின் விளைவறியாது எண்ணி எண்ணி அது விளைவாகிச் செயலாக மலரும்போது அவற்றைத் தாங்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அவனே வலையும் விரித்து, அதற்குள் அவனே சிக்கிக் கொள்கிறான். அவரவர் வாழ்க்கையின் சிற்பி அவரவர் எண்ணங்களே.


- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

சனி, 12 டிசம்பர், 2015

ஆசையும் ஞானமும்

ஆசையும் அடக்கினால் அது பிதுங்கிக் கொண்டு வேறுவேறு துன்பங்களாக உருவாகும். ஆராய்ந்தால் பிறந்த இடத்திலேயே அது ஒடுங்கும். ஆசை நிறைமனமானால் மற்ற எல்லா நலன்களையும் பெறுவது எளிதாகச் சாத்தியமாகி, வாழ்வின் இலட்சியமே நிறைவேறிய ஓர் உணர்வு உண்டாகும்.

ஆசையின் மறுமலர்ச்சியே ஆறு குணங்கள். ஆசை தடைப்படும் போது அத்தடையை நீக்க எழும் ஆர்வமே சினம். ஆசையுள்ள பொருட்களைத் தனக்கு வேண்டுமெனவும், பிறர் கவராமலும் பாதுகாத்துக் கொள்ளும் செயலே கடும்பற்று (லோபம்). ஆசை பிற பாலை நாடி எழுந்தால் அதுவே மோகம். ஆசையானது பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் மீது அழுந்தி அதைக் கொண்டு மக்களை உயர்வாக அல்லது தாழ்வாகக் கருதும் பேதம் மதம். சினத்தை முடிக்க வலுவையும், வாய்ப்பையும் நாடி நிற்கும் ஆசைதான் வஞ்சம்.

ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத்தக்க வகையில் பண்படுத்தி - ஒழுங்குபடுத்திவிட்டால், அதுவே ஞானமாகவும் மலரும்
 ********************************************
.
"சன்மார்க்க நிலைகாணத் துடிக்கும்
மெய்யன்பர்களே வாருங்கள்..."
.
அன்பின் அழைப்பு:-
.
"பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்,
அஞ்சாதீர் ! அன்புடனே உமையும் ஏற்போம்;
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்,
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்."
.
எனது பணி :-
"அகநோக்குத் தவமுறையில் அறிவறிந்து
அறிவடங்கி உயிராகி மெய்யுமாகி
அகநோக்கின் மதிப்புணர்ந்தேன், திறன்வேட் புள்ளோர்க்கு
அறிவித்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றேன்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

மறைபொருட்களை உணரும் நிலை

.

பிரம்மஞானம் உலகில் மக்கள் அனைவருக்கும் பரவாமல் தடைப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதை உணர்ந்து கொண்டு, தக்க முறையில் அந்தத் தடைகளைக் களைய வேண்டும். தடைக்குக் காரணங்களாவன:
.
அனைத்தியக்க அருட்பேராற்றலான இறைநிலை – பிரம்மம்,
அதிலிருந்து தோன்றிய விண்,
விண் சூழலிருந்து தோன்றிய காந்தம்,
காந்தத் தன்மாற்றங்களாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவற்றின் கடைசி அலை இயக்கமாகிய மனம்.
.
இவையனைத்தும் மறை பொருட்கள். இவை இல்லையென்று மறுத்துக் கூற முடியாது. இவ்வாறு உள்ளன என்று புலனறிவுக்கு எடுத்துக் காட்டவும் முடியாது. ஆயினும் இவற்றை அறிவதற்காகவே ஆறாவது அறிவு எனும் சிந்தனையாற்றல் மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஐந்து புலன்கள் மூலம் தோற்றப் பொருட்களை உணர்வது ஐயறிவு. புலன்கள் மூலம் உணரப் பெறும் பொருட்களுக்கு மூலமான மனம், காந்தம், விண், மெய்ப்பொருள் இவற்றை உணரக்கூடிய அறிவு தான் ஆறாவது அறிவு. புலன்களால் பொருட்களை உணரும்போது மன அலைச்சுழல் மிகவும் விரைவாக இயங்குகிறது. அந்த விரைவு நிலையில் மறைபொருட்கள் விளங்கா. மன அலைச் சுழல் விரைவை அகத்தவச் சாதனையால் குறைத்து, மன அலைச் சுழல் விரைவை அகத்தவச் சாதனையால் குறைத்து, அந்த நுண்ணிய நிலையில் தான் மறைபொருட்களை உணர முடியும்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.
******************************************
அகத்தவப் பயன் :-
"இறைநிலைக்கும் மனநிலைக்கும் இடையிலுள்ள உயிரை
எளிதாக உணர்ந்திடலாம் அகத்தவத்தின் மூலம்
மறைவிளக்கும் உண்மைகளை மனத்தினுள் உணர்வாய்
மற்றவர்கள் காட்டுவதற்கு வெளியில் ஒன்றும் இல்லை
பொறையுடைமை, விழிப்புநிலை, அஞ்சாமை, தியாகம்
புலனுணர்வு இன்பத்தில் அளவு முறை வேண்டும்.
நிறைவுபெற முடிவு எடுத்து வழுவாது ஆற்றி
நேர்மையுடன் வாழ உன்னில் அவன் – அவனில் நீயே."
.
மனத்தூய்மை :-
"பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் நான்கிலே
புகுந்தழுந்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்
இருள் நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்
இறை நிலையே எங்கெதிலும் இருப்பாய் அமர்ந்தாற்றிடும்
அருள் நடனக் காட்சியை அகத்துணர்வாய்க் கொள்ளுவீர்
அப்போதும் எப்போதும் அறிவு விரிவாகியே
மருள் நிலையில் ஏற்ற ஆசை மற்றும் பழிச்செயலெல்லாம்
மாறிவிடும் மெய்ஞ்ஞானம் மலரும் உள்ளொளி என."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 10 டிசம்பர், 2015

மனிதவளக் கம்ப்யூட்டர் :



மனிதவளக் கம்ப்யூட்டர் :
.
இறைநிலையினது நெடும் பயணத் திருவிளையாடல்கள் அனைத்தும் முழுமையாக அலை வடிவில் சுருக்கி வைத்துள்ள கருவூலம் தான் உயிரினங்களின் உடலின் மையத்தில் அமைந்துள்ள கருமையம்.
.
ஒரு பெரிய ஆலமரம் அதன் சிறு வித்தில் அலை வடிவில் சுருங்கியுள்ளது போல, இயற்கையின் பரிணாமச் சரித்திரமானது வான்காந்த அலையில் பதிவாகி, மேலும் மனிதனுடைய சீவகாந்தக் கருமையத்தில் சுருங்கி இருப்பதாக உள்ளது. இந்தக் காலத்தின் விஞ்ஞானப் பேரறிஞர்கள் கண்டுபிடித்து, வழக்கில் வந்துள்ள கம்ப்யூட்டர் கருவியைப் போல, இறை ஆற்றலால் வடிவமைக்கப்பட்டது கருமையம் எனும் Organic Computer காந்தமையம். இயற்கை வளச் சரித்திரத் திரட்டான மனிதவளக் கம்ப்யூட்டர் என்னும் கருமையம் காந்த ஆற்றலின் திணிவு பெற்ற பிரபஞ்சப் பிரதிபலிப்பு கண்ணாடி ஆகும். இத்தகைய இயற்கைச் சுரங்கத்தைத் தன்னகத்தே அடக்கம் பெற்றுள்ள பாக்யசாலியே மனிதன் என்ற திருஉருவம்.
.
இந்தத் தெய்வீக நிதியை மதிப்போடும் தூய்மை கெடாமலும் காத்து வரவேண்டியது ஆறாவது அறிவின் நிலையில் வாழும் மனிதனுடைய கடமையாகும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
*******************************************
அறவழி:
"வாதங்கள் வேண்டாம் வாழ்வாங்கு வாழ்ந்த முன்னோர்கள்
வேதங்கள் விரித்துள விளக்கத்தொகுப்புகளனைத்தும்
ஆதங்கம் வறுமை அறியாமை போக்கி மனிதரெல்லாம்
பேதங்கள் அற்றுப் பிழையற வாழும் அறவழியே."
.
அறிவையறியக் கருதவம் அவசியம்:
"தன் உடலின் பரிணாம அமைப்பு, மேன்மை
தத்துவமாம் அறிவினது இயல் பியக்கம்
பின் விளைவும் பேருலகில் ஜீவகொடி
பிறப்பு இறப்பு நடுவாக அனுபவிக்கும்
இன்ப துன்பம், இவைகள் எல்லாம் வயது வந்தோர்
எல்லோரும் அறிந்தறிவால் ஒன்றுபட்டு,
நன்முறையில் வாழ்க்கையிலே அமைதிகானும்
நினைவு உயர்வு கருதவத்தால் ஆகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

புதன், 9 டிசம்பர், 2015

மதிப்புமிக்க மனித இனம்

இறைநிலையின் பரிணாம சரித்திரத்தில் உலகம் என்ற அழகிய வளம் பலவும் பொருந்திய நந்தவனத்தில் இறுதியாகப் பூத்த மலர்கள் தாம் மதிப்பு மிக்க மனித குலம் என்ற சீவ இனம்.
.
மேன்மையான ஆறாவது அறிவின் சிறப்பைக் கொண்டு மனத்தூய்மையும் வினைத் தூய்மையும் பெற்று இறையுணர்வு அடைந்து பிறவிக்கடல் கடந்து உய்ய வேண்டும் என்ற இடைவிடாத முயற்சியில் பலப்பல சிரமங்களை ஏற்று வாழ்ந்து கொண்டிருப்பதே மனித இனம்.
.
பரிணாமம் என்ற இயற்கையின் நெடும் பாதையில் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டுத் தொடர்ந்து வரும் புலன் மயக்கச் செயல்களின் பதிவுகள் பலப்பல. இவையனைத்தும் அறிவினுடைய முழுமை நோக்கிச் செல்லும் மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடுத்தும் தாமதப்படுத்தியும் வருகின்றன. இதன் விளைவாக மனித குலத்தில் உடல் நலம், மனவளம், நட்புநலம், செல்வப் பெருக்கம் இவை சீர்குலைந்து உலகெங்கிலும் வாழும் மக்களில் பெரும்பாலோர் சோர்வும், துன்பமும், வாழ்க்கைச் சிக்கலும், கவலையும் அடைந்து துன்பமடைகிறார்கள்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
***********************************************
"உலகப் பேரறிஞ ரெலாம் மனிதர் வாழ்வில்
உள்ள குறைகள் தீர உணர்ந் துரைத்தார்,
கலகங்கள் தீரவில்லை காரணங்கள்
கணக் கெடுத்தோர் பலப்பல நூறாகச் சொன்னார்.
நில உலகக் கவர்ச்சியிலே புலன் மயக்கில்
நினை விழந்து தனைமறந்து வாழ்க்கைச் சிக்கல்
பல பெருக்கம் அறியாமை ஒன்றால் அன்றோ
பார்மீது மெய் விளக்கம் பரவ நன்றாம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

உலகக் குடும்பம்


நாம் எல்லோரும் உலகம் என்ற மண்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கிருப்பது ஒரே சூரியன் தான். நமக்கு ஏற்படும் நீர் தேவைகளை முடிப்பதற்கு இருப்பது ஒரே கடல் தான். நாம் எல்லோரும் மூச்சு விடுவதற்கு உள்ள காற்றும் ஒன்றுதான். இவற்றில் ஒன்றைக்கூட நம்மில் எவருமே உற்பத்தி செய்தது இல்லை. நமது முன்னோர்களும் செய்ததில்லை.
.
எல்லாம் வல்லதாகிய இறைநிலை என்னும் இயற்கையானது தனது பூரணம், பேராற்றல், பேரறிவு என்ற மூலதனத்தைக் கொண்டும் அதன் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் என்ற இயக்க நியதிகளைக் கொண்டும் வான்மண்டலத்தையும் உலகையும் உருவாக்கி, இந்த அழகிய வளம் நிறைந்த உலகின் மீது நம்மையும் உருவாக்கி வாழ வைத்திருக்கிறது. நமக்கு அன்னையாகவும், தந்தையாகவும் உள்ள அருட்பேராற்றலான இயற்கை நாம் அனைவரும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ எல்லா வளங்களையும் நிறைவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.
.
நமது சிந்தனையை உயர்த்தி இவற்றையெல்லாம் நாம் உணரும்போது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்தவர்கள் என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்றது அல்லவா?
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
***************************************************
சேர வாரீர் :-
"பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த
பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு
நலமொன்றே பலனான ஞானமார்க்கம்
நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப
சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்
சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து
உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி
உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர், வாரீர்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 7 டிசம்பர், 2015

அமைதி அடைவோம்

அமைதி அடைவோம் :...
.
"இதுவரையிலும் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன், இப்படி ரசிக்கக்கூடியவனும், எண்ணக்கூடியவனுமான என்னை ஆக்கியவன் யார் என்று தன்னையே திரும்பிப் பார்க்கிறான் பாருங்கள், இதுதான் ஆறாவது அறிவு. அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்நிலை ஆறாவது அறிவு.
.
கடலில் இருந்த தண்ணீர் தான் மேகமாகி மழையாகப் பொழிகிறது. அருவியாக, ஆறாக ஓடும் தண்ணீர் மீண்டும் எங்கே சென்று சேர்கிறது? கடலில் தானே? குளமாக, ஏரியாக அந்த நீரைத் தேக்கி வைத்தாலும் புடைத்துக் கொண்டே இருக்கும் அது. கரை உடைந்தால் தன் மூலமான கடலை நோக்கியே விரைந்தோடும். கடலை அடையும் வரை அதற்கு ஓய்வு, அமைதி இல்லை. இது போன்றே, மெய்பொருளே [பிரம்மமே] அணுவாகி, பஞ்சபூதமாகி, ஜீவனாகி, மனிதனாகி இருக்கிறது. அவையெல்லாமே இடைநிலை தான். இனி மனிதன் ஆறாவது அறிவு மேலோங்கப்பெற்று அவன் தன்னிலையை, தான் பிரம்மம் என்ற நிலையை அடைந்தாக வேண்டும். அதுவரை மனிதனுக்கு அமைதி கிட்டாது. எதை அடைய வேண்டுமோ அதை அடையாதவரை வேறெது கிட்டினும் மனக்குறை மனிதன் உள்ளத்தில் தலையெடுத்துக் கொண்டே தான் இருக்கும். அடைய வேண்டியதை அடைந்து அமைதி பெறுவோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
*************************************************
தெளிவுக்கு வழி :
"தனையறியும் பெருநோக்கில் உயர்ந்தமக்கள்
தரணியில் ஆயிரமாயிரங்களாகும்
தனையறிய முயன்றோர்கள் அறிந்தபேர்கள்
தந்துள்ள விளக்கங்கள் எண்ணிறந்த;
தனையறிய துடிதுடிப்பும் விளக்கமில்லாத்
தன்மையிலும் எழுதிய நூல் பல படித்துத்
தனையறிய ஆர்வமுள்ளோர் மனம் குழம்பித்
தத்தளிக்கும் நிலை தெளிய வழிதவம் ஆகும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

நிலையும் அலையும்



"இறைவெளியாகிய பிரம்ம நிலை, அதன் இயல்பான தன்மைகள் - பூரணம், அறிவு, விரைவு என்பன வெளிக்காட்டாத இருப்பு நிலையாகும். "பிரம்மம்" எனும் புனிதப் பொருளை, அகத்தால் நோக்கும் போது அது பூரணமானது, முற்றறிவாக உள்ளது : அனைத்தியக்கங்களுக்கும் மூலமான "அழுத்தம்" எனும் விரைவடக்கமானது என்று கொள்ள வேண்டும். பிரம்மம் வேறு, பூரணம் வேறு, அறிவு வேறு, விரைவு மூலமான அழுத்தம் வேறாகக் கருதவே முடியாது. பிரம்மமே பூரணமாகவும், அறிவாகவும், ஆற்றலாகவும் உள்ளது, என்றுதான் கொள்ள வேண்டும். பூரணமே, பிரம்மமாகவும் அறிவாகவும் ஆற்றலாகவும் உள்ளது. அறிவே பிரம்மமாகவும், பூரணமாகவும், ஆற்றலாகவும் இருக்கிறது. ஆற்றலே பூரணமாகவும், பிரம்மமாகவும், அறிவாகவும் இருக்கிறதென்று ஒவ்வொரு தத்துவத்திலும் நான்கையும் சேர்த்தே மதிக்க வேண்டும். அகப் பொருளான "அறிவு" தான் எல்லாப் பொருளிலும், இயக்கத்திலும், ஒழுங்காற்றலெனும் சீரமைப்புத் திறனாக முகிழ்ந்து செயல் புரிகின்றது.
.
கருமையக் காந்தத் திணிவில் அடிப்படை ஆற்றலாக இருப்பது "இறையாற்றல்" இதில் அடக்கமாகவுள்ள - அறிவு, காந்த நிலையில் புலன்கள் மூலம் இயங்கும் போது "மனம்" எனப்படுகின்றது. நிலையாக உள்ளது "அறிவு" அலையாக உள்ளது "மனம்" விளக்கும் - வெளிச்சமும் போல, நீரும்-அலையும் போல, நிலையாக அறிவும், அலையாக மனமும் உள்ளன."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
*******************************************
.
"இறைநிலையின் பேரறிவை, தத்துவத்தைத் தெளிவாய்
எவராலும் மொழிமூலம் விளக்க முடியாது,
முறையாக எப்பொருளும் இயங்குதற்கு ஏற்ற
உருவமைப்பு, குணம், காலம், ஒழுங்கமைப்பு எல்லாம்
நிறைவாக தவறு இன்றி எவ்வியக்கமதிலும்
நேர்மையோடு நிகழ்த்தும் ஒழுங்காற்றலே அறிவாம்;
மறைபொருளாய் அமைந்த இந்த மாஅறிவுதனை நாம்
மதிப்போடு இறைநிலையின் பேரறிவு என்போம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 5 டிசம்பர், 2015

பிரமச்சரியமும் ஞானமும்

 
 எப்போதும் ஆண்பெண் உடலிணைப்பே இல்லாமல் வாழ்வது பிரமச்சரியம் என்று தவறாகக் கருதப்படுகிறது. இந்த வைராக்கியம் கொண்டவர்கள் மிகவும் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இவ்வாறு நீங்கள் கருத வேண்டாம் என்று உங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன். உலகமீது உருவாகி வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் அனைவரும் இந்த விரதம் கெட்டபோது தான் உற்பத்தியானார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
.
உலக உத்தமர்கள், ஞானிகள், தீர்க்க தரிசிகள், அனைவரும் பிரம்மச்சரியம் கெட்டவிடத்தில் தான் தோன்றினார்கள்; ஆண் பெண் நட்புடன், ஒழுக்கத்துடன், வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள் என்று உதாரணம் காட்டுகிறேன்.
.
வயது வரும் வரையில் கட்டுப்பாடாக இருந்து, பின்னர் ஒழுக்கத்துடன் திருமணம் கொண்டு, அளவு முறையுடன் உடல் கலப்புக் கொண்டு வாழ்வதையே நல்ல கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறேன்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
*************************************
காயகற்பப் பலன்கள் :-
"காயகற்பப் பயிற்சியினால் கண்கள் நன்றாம்,
காம மிகை குறைசமனாம், குடும்ப வாழ்வில்
காயகற்பம் இனிமைஅன்பு விருப்பம் ஊக்கும்,
கடமையுணர் வும்தெய்வ நினைவும் ஓங்கும்;
காயகற்பம் மூலநோய் குடல்புண் போக்கும்
கனத்த உடல் இளைப்பிவற்றைச் சமப்படுத்தும்,
காயகற்பம் இருதயநோய் இரத்த பித்தம்
கடும்மலக்கட் டிவைபோக்கி உடலைக் காக்கும்."
.
"கரைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்,
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்.
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்;
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம்உயிர்மெய் யுணர்வு கிட்டும்
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

வெள்ளி, 4 டிசம்பர், 2015

கடமை

 

நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள். உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


********************************
தினக்கடன் :
"உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்,
நினைப்பதும், செய்வதும், நித்தியக்கடன்."
.
கடவுளும் கடமையும் :
"கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவார்
கடவுளை அறிந்தோர் கடமையில் வாழுவார்."
.
மரணத்திற்கு அஞ்சாத கடமை :
"மரணத்தை எதிர்நோக்கப் பிறந்த நாமோ
மதிப்பிலே இன்பதுன்பம் அனுபவித்து
மரணமென்ற இரத்த ஓட்ட நிறுத்தத்தின்பின்
மறந்துவிடுவோம் பின்னர் ஒன்றைப் போவோம்;
மரணத்திற்கிடையே நம்தேவை எல்லாம்
மனித இனக் கூட்டுறவால் கிடைக்கக் கண்டோம்
மரணத்திற் கஞ்சாமல் மறந்திடாமல்
மதி உடலின் இயல்பறிந்து கடமை செய்வோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.




வியாழன், 3 டிசம்பர், 2015

கருமையப் பதிவுகள்

ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளைச் செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன. எப்படி ஒரு ஒலியானது பதிவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதே போல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கிப் புள்ளி வடிவில் பதிவாகிறது.

மூளைச் செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது. பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளைச் செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும். அப்படி விரித்துக் காட்டப்படும்போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும், எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.


**********************************
"நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,
மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,
நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம்உட லுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்."
.
"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!"
.
"மனத்தூய்மை வினைத்தூய்மை மனிதன் வாழ்வில்
மகிழ்ச்சி, இனிமை, நிறைவு, அமைதி நல்கும்;
மனம்உயர நேர்மைவழி அகத்தவம் ஆம்
மற்றும் தன்வினை உயர அறமே ஆம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 2 டிசம்பர், 2015

சேஷ்டையும் நிஷ்டையும் :



உயிருணர்வு பெற்ற பிறகுதான் எல்லா இடத்திலும் நிரம்பி இருகின்றதை நாம் நினைக்கின்றோம்; தெரிந்து கொள்கின்றோம். ஆனால், சில சந்தர்பங்களில், ஆங்காங்கே துன்பப்படுவதையும் பார்க்கின்றோம். அவ்வாறு துன்பப்படுவதைப் பார்த்து எந்த இடத்தில் அதைச் சகிக்க முடியவில்லையோ, பொறுக்க முடியவில்லையோ, அங்கே இறங்கி உதவி செய்ய வேண்டும் என்னும்போது அப்பொழுது தான் அறிவு மேம்பாடு அடைந்து, ஊடுருவி நிறைந்து இயங்கக்கூடிய தன்மை, நிற்கக்கூடிய தன்மை வருகின்றது. அந்தத்தன்மை வந்தபிறகு தான் மேலும் விரிந்து நிறைந்து உள்ள ஒரு பொருளாக இணைந்து உறைந்து அதுவே "தான்" என்று உணர்ந்து கொள்ளக்கூடிய "உண்மை உணர்வு" உண்டாகிறது. ஜீவன்களிடத்தில் ஊடுருவி நின்று இன்ப துன்ப உணர்வுகளைக் கண்டறிந்து துன்பத்தை உண்டு பண்ணாமல் செயலாற்றவும், துன்பப்படும் உயிர்களுக்கு இதம், அதாவது துன்பத்திலிருந்து விடுதலை, பரிகாரம் அளிக்கவும் உதவி செய்யவும் ஏற்ற எண்ணம் உண்டாகிறது. இந்த இரண்டு நினைவுகள் மாத்திரம் எப்பொழுதும் அயரா விழிப்போடு இருந்தால் அங்கே அவனுடைய அறிவு உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அப்படி உயர்ந்து கொண்டே இருக்கிறபொழுது பரிபூரணப் பொருளோடு கலப்பதற்கு நலவாழ்வாக அமையும்.
.
உண்மை உணர்வு ஏற்படுவதற்கு முன் ஐம்புலன்களினால் காணக்கூடிய இன்பம் இன்னும் சிறிது தொடர்ந்து போனால், கடந்து போனால், சலிப்புத்தான் ஏற்படும். ஆனால் அறிவை அறிந்த இன்பமோ என்ன ஆகும் என்றால் அது பூரணமாக, எவ்வளவுக்கு எவ்வளவு இருந்தாலும் சலிப்பில்லாத இன்பமாக இருக்கும். இதைத்தான் நிட்டையிலே பெரிய சுகம், அதாவது பேரின்பம் கண்டோம் என ஒரு ஞானி சொல்லியுள்ளார். இந்த நிலை வராதவர்களுக்குக் கட்டையிலே போகும் நாள் வரை கவலை தானே என்றும் கூறுகிறார் !
.
விரிந்து பல சாகசங்களைச் செய்து கொண்டு இருப்பது சேஷ்டை. அந்த சேஷ்டை நிலையிலிருந்து ஒடுங்கி நிஷ்டை நிலையில் வருவதற்கு உபதேசம் வேண்டும் இல்லையா? உயிரோடு ஒன்றி இருக்கவேண்டும் அல்லவா? அந்தத் தொடக்கம் இப்போது வந்துவிட்டது. புலன் உணர்ச்சிக்காக எடுக்கக்கூடிய ஒரு ஆரம்ப கட்டத்திலேயிருந்து அந்தப் புலன் உணர்ச்சி ஆற்றலே உயிர் ஆற்றலை அழுத்திக் கொண்டு அறிவு அறிய முடியாமல் திளைத்து மயக்கத்திலே மயங்கி இருக்கக் கூடிய காலத்திலே அது முழுமையும் துன்பம் தானே. அது எதுவரைக்கும்? தாலி கட்டையிலேயிருந்து ஒரு கட்டையிலே போகும் மட்டும் கவலை தானே அவர்களுக்கு! உயிர் விடுகிற வரைக்கும் கவலைதான் இருக்கும். ஆனால் பரம்பொருள் நிலையில் மனத்தைக் கொண்டு நிஷ்டை கூடித்தவம் செய்து தவத்திலே இருக்கக்கூடிய காலம், அது தொடங்கிய நாள் முதற்கொண்டு பரம்பொருளை அடைகிற நாள் வரையிலே இன்பம் தான்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
****************************************************
பரம் - உயிர் - அறிவு :
"உணர்ச்சிகளில் அறிவியங்க உயிர்விளக்க மாகாது
உள்ளொடுங்க உயிர் உணர்வாம் உயிர் ஒடுங்க தெய்வநிலை;
உணர்ச்சி உயிர் பரம் மூன்றும் உணரவழி அகத்தவமே,
உண்மை உயிர் உலகு அறிவு உணர்பவனே மூன்றாவான்."
.
உயிர் நிலையறிய :
"கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை,
உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை."
.
சச்சிதானந்தம் :
"உயிரின் இயக்கமே உணர்ச்சிகள் அனைத்துமாம்
உயிரின் உணர்தலே உள்ளமாம் அறிவிதே;
உயிரின் ஒடுக்கமே வெளியெனும் உயர்வீடு
உயிரின் நிலைகளே உயர் சத்-சித்-ஆனந்தம்."
.
பக்தி - யோகம் - முக்தி - ஞானம்:
"அறிவு அறிவுக்கு அடிமையாவதே பக்தி
அறிவை அறிவால் அறியப்பழகுதல் யோகம்
அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி
அறிவை யறிந்தோர் அன்பின் அறமே ஞானம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 1 டிசம்பர், 2015

பிரம்ம ஞானம் :


சுத்தவெளிதான் இறைநிலை. இதுவே தான் கடவுள் ஆகும். இறைநிலையானது எல்லாம் வல்ல பூரணப் பொருள். இதன் இயல்பான தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதற்குள்ளாகவே செறிவு ஏற்பட்டு மடிப்புகள் விழுந்து, அதன் சூந்தழுத்தும் ஆற்றலாலேயே மிக விரைவான தற்சுழற்சி பெற்ற நுண்துகள்தான் முதல்நிலை விண் எனும் பரமாணு. இந்த நுண்ணணுக்களின் கூட்டங்களே பேரியக்க மண்டலத்தில் காணும் அனைத்துத் தோற்றங்களும் ஆகும். முதல் நிலை விண்களின் விரைவான தற்சுழற்சியானது அதைச் சுற்றியுள்ள தின்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலான இறைவெளியோடு உரசும் போது எழுகின்ற நுண் அலைகள் தான் காந்தம் எனும் நிழல் விண்கள்.
.
நிழல் விண்கள் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தைத் தாங்க முடியாமல் கரைந்து போகும் நிகழ்ச்சிகள் தான் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்பனவாகும். இறைவெளியானது முதல்விண், நிழல்விண், காந்தம், காந்தத் தன் மாற்ற நிலைகளான அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறுவகை, இவற்றை மனதில் பதியவைத்துக் கொண்டு பிரபஞ்சத்தை எண்ணிப் பார்த்தால், ஆராய்ந்தால் பேரியக்க மண்டல தோற்றம் இயக்கம் விளைவுகள் அனைத்தும் விளங்கிவிடும். பரமாணு முதல் கொண்டு, எந்தப் பொருளும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும். எல்லா இடங்களிலும் எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் எனப்படுகின்றது.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
******************************************
"பேரியக்க மண்டலத்தைத் தத்துவங்கள்
பத்தாக விளங்கிக் கொள்வோம்.
பெரியசுமை மனதிலிருந் திறங்கிவிடும்.
மனம்அறிவாம் சிவமு மாகும்.
ஓரியக்க மற்றநிலை வெட்டவெளி
இருப்ப துவே; ஆதி யாகும்.
உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும்
விண்ணாகும். அதிலெ ழுந்த
நேரியக்க விரிவுஅலை நெடுவெளியில்
கலப்புறவான் காந்த மாச்சு.
நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம்ஒலி
ஒளிசுவையும் மணம்மனம்ஆம்.
சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை
உள்ளுணர்ந்தால் அதுமெய்ஞ் ஞானம்.
சிந்திப்போம், உணர்ந்திடுவோம், சேர்ந்திருப்போம்
இறைநிலையோ டென்றும் எங்கும் ! ".
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.