Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 27 பிப்ரவரி, 2013

முழுமைப் பேறு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்



நமது அகத்தவப் பயிற்சி, தியானம் [Meditation], தற்சோதனை [Introspection], உச்சமேம்பாடடைதல் [Sublimation], முழுமைப் பேறு [Perfection] ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாகும். தியானத்தில் ஆரம்ப கட்டத்தில் மனம் உயிரில் லயமாக்கப்பட்டு மயக்க நிலை நீங்கி விழிப்பு நிலை ஏற்படுத்துகிறது. தற்சோதனை மூலம் குற்றங் குறைகளை உணர்ந்து விளக்கத்திற்கும் பழக்கத்திற்கும் உள்ள போராட்டம் நீங்கப்பெற்று மனம் செம்மைப்படுத்தப்படுகிறது. தனக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து, தான் ஆற்றவேண்டிய சமுதாயக் கடமையை நன்கு உணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுத்துகிறது.

பிறகு தன் கடமைகளை ஆற்றிக்கொண்டே தானே பரம் பொருளாக இருக்கும் உண்மையை துரியாதீத தவத்தின் மூலம் உணர்ந்து உச்ச மேம்பாட்டையடைய வழி செய்யப்படுகிறது. கடைசியாக எப்பொழுதும் பரம்பொருள் நிலையிலேயே இருந்து செயல்படும் முழுமைப் பேரும் கிடைக்கப் பெறுகிறது. யாருக்கும் தீமை நினைக்கவும் முடியாத அளவு ஆன்மீக விழிப்பு, எல்லா உயிரும் பரம்பொருளின் பிரதிபலிப்பே என்ற ஆன்ம விழிப்பு [Esoteric awareness] ஏற்பட்டு விடுகிறது. ஈதல் இசை பட வாழ்தல் என்பதன் உட்கருத்தும் விளங்குகிறது. மனதின் மூலத்தைத் தெரிந்து கொள்ளும் போது அதுவேதான் உயிர் எனத் தெரியும். உயிர் நிலையை உணர வேண்டுமாயின் அதற்கு மனம் அடங்கி மிக நுண்ணிய அதிர்வலைக்கு நாம் வரவேண்டும். சாதாரணமாக நம் மனம் எப்போதும் பொருள் கவர்ச்சியிலேயே இருப்பதால் அவற்றிற்கேற்ப அதன் ஓட்டமும் அதிர்வலைகளும் மூலாதாரத்தையே நோக்கி செயல்படும். கீழ்நோக்கியே செயல்படும். ஆகவே நுண்ணிய இயக்கத்திற்கு வரவேண்டுமானால் மனம் அடங்க வேண்டும். இயக்க வேகம் குறைய வேண்டும். இதைத்தான் நம் குண்டலினி யோகத்தால் நாம் சாதிக்கிறோம்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 


 

பூஜ்யமும் பூஜ்யரும் :



பூஜ்யம். முழு எண் ஒன்று இருக்குமானால் அது பூஜ்யம் ஒன்று தான். ஏன் என்றால் மற்ற எண்ணெல்லாம் ஒரு பக்கம் ஆரம்பிக்கும். ஒரு பக்கம் முடியும். உருவம் கோணல் மாணலாக இரு...க்கும். '1' என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், அதற்கு மேல் முனை, கீழ்முனை என்று இரண்டு இருக்கின்றன. '2' என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், முன் முனை இருக்கிறது. பின் முனை இருக்கிறது. மற்ற எண்கள் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் வளைகின்றன. 3,4,5,6,7,8,9 என்று எல்லா எண்களும் கோணல் மாணலாக இருக்கின்றன. ஆனால் பூஜ்ஜியத்தை எடுத்துப் பாருங்கள். ' 0 ' அது எங்கே தொடங்குகிறதோ, அங்கே போய்த் தான் முடிகிறது.

பூஜ்யம் தான் முழுமையான எண், மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்யத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம். ஆனால், அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணிணை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் பின்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10. பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை. ஒன்றுமிலாததை மதித்து அதற்குப் பின்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகிவிட்டது. பூஜ்யத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்யத்தை அலட்சியப்படுத்தி 1ஐ முன்னாள் போட்டால் 1 இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1].

அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன். யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள். இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களைப் பூஜ்யர் என்பார்கள்.
 

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 



குடும்பம் அமைதி பெற :



இணக்கத்தை வற்புறுத்தும்போதும், பிணக்கத்தை தீர்க்கும் போதும் இன்சொல்லையே உள்ளமும் உதடும் உபயோகப்படுத்த வேண்டும். இன்சொல்லினால் கெடுதல் ஒழிய நன்மைகள் பல பெறலாம்.

... குடும்ப அமைதியைப் பெற, சலனமில்லாததும், விசாலமானதுமான மனம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் என்பார்களே அது இங்கே தான் வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மை இவை எல்லையின்றித் தேவையாகும். எவ்வளவு பெரிய குழப்பமானாலும் பொறுமை ஒன்றினாலேயே வெற்றி கண்டு விடலாம்.

பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல் பிறர் கூறும் கடுஞ் சொற்களையும் - அவை சொல்லப்படாதது போல் பாவித்து ஒதுக்கிவிட வேண்டும். அப்போது தான் அமைதி பிழைக்கும்.

தற்போது அம்மா - மகளுக்கிடையே கூடப் பிணக்குகள் தோன்றுவதையும், வளர்வதையும் பார்க்கிறோம். அவர்களுக்கிடையே கூட, விட்டுக் கொடுத்தல் (Adjustment) இல்லையானால் வேறு யாரிடம் அதைத் தேடுவது? அம்மாவுக்குப் பெண்ணாக இருக்கும் போதே இப்படி என்றால் பின்னால் வாழ்க்கை எப்படி அமையும்?. அப்புறம் யார்மேல் குற்றம் சொல்வது?.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக்கொள்ளவில்லை யென்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு - அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை - தள்ளி வைக்க வேண்டியது தான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.
 

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


 "வாழ்க்கை என்பதே சிக்கல் நிறைந்த மனப் போராட்டமாகும்.
உடலும் உயிரும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே".
.

"தவறு செய்யப்பட்ட கையேடு புத்தி சொல்லக்கூடாது.
குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது".
.

"தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுத்து
தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கி பின்னரும்
துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு -
உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வு சினம் ஆகும்"
.

தற்சோதனையும் (Introspection),
தவமும் (Simplified Kundalaini Yoga) :
----------------------------------------------------
.
அருள் வெளிச்சம்:

"விழிப்பு நிலை யென்ற அருள் வெளிச்சம் கொண்டு,
விருப்பு வெறுப்பெனும் சுழலில் அலை மனத்தின்
அழுக்கற, தற்சோதனையில் முனைந்திடுங்கள்:
அன்பூற்றால், கடமையுணர் வாகும் வாழ்வு;
பழுத்து விடும் அறிவு, அந்தப் பக்குவத்தால்,
பரத்தோடு உயிர் ஒன்றும் துரியாதீத
முழுத்தவமோ பிறப்பு இறப்புச் சக்கரத்தை
முறித்து விடும். மெய்விளங்கி முழுமையாவீர்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



 

மனிதனே தெய்வம்

ஆன்மப் பேரொளியை மறைத்திருக்கும் தன்முனைப்புத் திரை நீக்கப்பட்டு விட்டால், மனிதனே தெய்வம். ஆன்ம உணர்வைப் பெற்று விடுகிறான்; ஆன்மாவுக்கும் மூலப் பேராற்றலான தெய்வ உணர்வையும் பெற்று விடுகிறான்.

பேரியக்க மண்டலத்தில் அவன் காணும்...
எல்லாத் தோற்றங்களும், நிகழ்ச்சிகளும், விளைவுகளும் தெய்வீக ஒழுங்கு அமைப்பின் திருவிளையாடலாகவே காண்கிறான். அவன் உணர்ச்சி வயப்படுவது இல்லை. பொறுமைக் கடலாகிறான். அவனிடம் பழிச்செயல்கள் எழுவது இல்லை. அறக்கடலாகத் திகழ்கிறான். அவன் அறிவிலே மயக்கமில்லை. மெய் விளக்கத்தால் மேன்மை பெற்ற பேரொளியாகத் திகழ்கிறான். அவன்வாழ்வில் ஒழுக்கம் இயல்பாக அமைகிறது. அவ்வொழுக்கத்தைப் பின்பற்றி எண்ணிறந்த மக்கள் தங்களைத் தூய்மை செய்து கொள்கின்றனர் மேன்மை பெற்று வாழ்கின்றனர்.

இந்தத் தன்முனைப்புத் திரையை அகற்றுவது எப்படி? அது அவ்வளவு எளிதானதா? அத்தகைய நற்பேறு தனக்கும் கிடைக்குமா? இவ்வாறான ஐயங்கள் பலருக்கு எழுவது இயல்பு. மனிதன் தான் தனது தன்முனைப்புத் திரையை விளக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையானது அக்கறையும், முயற்சியுமே. சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எல்லோருக்கும் இது கைவரக்கூடியது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"தான் உயரவும் பிறரை உயர்த்தவும்
ஏற்ற பயிற்சியும் தொண்டும்
மனவளக்கலையில் அடங்கியுள்ளன".
.
"அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் மூன்று
வகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது".
.
"ஆறாவது அறிவின் கூர்மை தான் சிந்தனை;
சிந்தனை தான் அறியாமையை அகற்றி
அறிவை முழுமையாகக வல்லது".
.
தன்முனைப்பை நீக்க :
--------------------------------
"தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து
தவம்ஆற்றும் சாதனையால் உயரும்போது
நன்முனைப்பாம் அருட்தொண்டால் பயன்காண்போர்கள்
நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்;
உன்முனைப்பு நிலவு ஒளி, ரவியால்போல்
உயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு,
"என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்
எனக்கு?" என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்!"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.




தற்சோதனையின் அவசியம்



தற்சோதனை என்பது மனத் தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஐயுணர்வின் வயப்பட்டு ஆன்மாவானது உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிகிறது. விளைவறிந்து செயலாற்றும் பண்பு ஓங்கும் வரையில் ஆன்மாவின் செயல்களால் பெரும...்பாலும் துன்பமே விளைகின்றது, துன்பமோ பொருந்தா உணர்வு.
அறிவு உயர்ந்து விழிப்பு நிலை பெறும்வரையில் ஆன்மா பழக்கத்தின் வழியே தான் செயல்களை ஆற்ற முடியும். எனவே, துன்பங்கள் மேலும் மேலும் பெருகுகின்றன. இந்த நிலைமையிலிருந்து தன்னையே தான் மீட்டுக் கொள்ள நிச்சயமான ஒரு வழி "தற்சோதனை" தான்.

தன்னைப் பற்றி, தன் இருப்பு, இயக்க நிலைகளைப் பற்றி, தன்னிடமிருந்து எழும் எண்ணங்களைப் பற்றி, செயல்களைப் பற்றி சிந்தனை செய்து, நலம் தீது உணர்ந்து, தீமைகளைந்து , நல்லன பெருக்கிப் பயன் காணும் ஒரு உளப்பயிற்சியே தற்சோதனையாகும். இது மனிதன் அறிவை உயர்த்தி வாழ்வை வளப்படுத்தும் ஓர் நற்பயிற்சி.

சமுதாயத்திலே நீ ஒரு பொறுப்பை ஏற்றுத் தொழில் புரிவதால் உன்னை வளர்த்து வாழவைத்த சமுதாயத்திற்கு நீ கடனைத் தீர்க்கிறாய். குழந்தைகளை ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறப்படையச் செய்வதும். சமுதாயத்திற்கு ஆற்றும் ஒரு சிறந்த கடமை தான். ஒரு நல்ல குடிமகனை உலகுக்கு அளித்து உதவுகிறாய் என்பது தான் பொருள். உன் வருவாயை விட்டுக் கடமைகளை மறந்து வெளியேறினால் நீ எங்கே போக முடியும்? அடுத்த வேலைக்குப் பசி வந்தால் நீ என்ன செய்யப் போகிறாய்? பிச்சை தானே எடுக்க வேண்டும். அது பிறர்க்கு சுமை அன்றோ?.
 

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
" "மனித மனமானது" இறைநிலையின் முடிவான பொருள்.
(other end of the mind is "Almighty" the god).

.
"மனதை அதன் இருப்பு நிலையான இறைநிலையை
நோக்கக் கூடிய ஒர்மைநிலையே "அகத்தவம்"(Meditation) ஆகும்".

.
"நாள்தோறும் பழகிவரும் தியானத்தினால் தவ ஆற்றல் மிக மிக..
எல்லாம் வல்ல இறைநிலையே எவ்வாறு மனிதனிடத்தில்
உயிராகவும், மனமாகவும், அறிவாகவும், இயங்கிக்
கொண்டிருக்கிறது என்கிற உள்ளுணர்வு உண்டாகும்".

.
எண்ணம் சீர்பட தற்சோதனை :

"அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.




கால வேகம்

 

விருப்பு, வெறுப்பு உணர்ச்சிகளில் அதிக வன்மையும், வேகமும் உடைய மனிதன், விலங்குகளைப் போல், காட்டிலும், குகைகளிலும் வாழ்ந்திருந்த காலம் உண்டு.

நெருப்பை...
க் கண்டுபிடித்து, அதை உபயோகிக்கக் கற்றபின், வேகவைத்து ஆகாரம் உண்ணக் கற்றுக் கொண்டான். செயற்கையில் ஒளி ஏற்படுத்திக் கொண்டான். நேற்று இன்று நாளை எனக் கடந்த, நிகழ், எதிர் காலங்களைச் சுட்டும் முன்னேற்றம் அடைந்தான். பொருட்களைச் சேமித்தல், பாதுகாத்தல் என்பனவற்றையும் கற்றுக் கொண்டான்.

இரும்பையும், மின்சாரத்தையும் கண்டுபிடித்த பின், பல துறைகளிலும் வேகமாக மின்னேறி வாழ்வை வளமாக்கிக் கொண்டான். அறிவு மேலும் உயர்ந்து அணுசக்தியைக் கண்டுபிடித்த பின், வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும் பாதையில், ஒரு திருப்பம் வந்திருக்கிறது.

அதாவது அவன் அடைந்த முன்னேற்றங்கள் யாவும் பயனற்றே போகும் அளவுக்கு அணுசக்தியைத் தவறாக மனித இன வாழ்விற்குப் பாதகமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டதால், மனித இனமே அழிந்து விடக்கூடிய அபாயம் தோன்றிவிட்டது.

இத்தகைய விபரீத விளைவுகளைத் தடுத்து மனித இனத்தைக் காப்பாற்ற எல்லோரும் பெரு முயற்சி கொள்ள வேண்டும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
ஆக்கமும் அழிவும் கண்டீர் - அமைதியும் காண்பீர் :
"விஞ்ஞான அறிஞர்களே! நம் குலத்தை
வேரறுக்க, வாழவைக்க, உங்களுக்கு,
எஞ்ஞான்றும், மேன்மேலும் திறமை கூடும்.
இனி நீங்கள் உலகநலப் பொறுப்பை ஏற்று
அஞ்ஞான முடையோர்கள் அறிவில்கூட
அணுநிலையோ டாதிநிலை இரண்டும் காட்டி,
மெய்ஞ்ஞானம் ஊட்டுதற்கு முயலவேண்டும்.
மிகஎளிது உங்களுக்கு இதைச் சாதிக்க."
.
விஞ்ஞானத்தால் விளைந்த பயன்:
"ஆறறிவின் ஆரம்ப நிலையில் நின்று
அனுபவித்தாய் அனுபவத்தின் பயனுணர்ந்தாய்;
பேரறிவைப் பெறவேண்டிப் பெருத்த வேகம்
பெரிதென்ற விஞ்ஞானத் துறையிலிட்டாய்.
யாரறிந்த ஒன்றும் இதில் ஞான, கர்ம
இந்திரியங்க்கட்கு உபகருவி யாச்சு
ஊரறிந்தாய் உலகறிந்தாய். உன்னையார் என்று
ஒன்றுமட்டும் அறியவில்லை விஞ்ஞானத்தால்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

உயர்ந்த சிந்தனை



1.அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.

2.உழைப்பினால், உடலும் உள்ளமும் உலகமும் பயன் பெறும் உணர்வீர்!
...
3.கடமை உணர்ந்து அதைச் செயலில் காட்டுபவன் தியாகியாம்.
கடவுளே மனிதனான கருத்தறிந்தோன் ஞானியாம்.

4.உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு.

5.ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து, ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்.

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 25 பிப்ரவரி, 2013

கடவுள் எங்கே இருக்கிறார்?


கடவுள் எங்கேயோ இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவன் மனிதனின் மன இயக்கத்தில் இருக்கிறான். ஆம், தெய்வம் அதற்குள்ளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. வேறுவேறாக இல்லை, இறைவன் மனிதனிடம் ஒன்றுபட்டுத் தான் இருக்கிறான். அனால் மனிதனுடைய எண்ணத்தின் காரணமாக, இச்சையின் காரணமாக, பல பொருட்களின் மீது வைத்திருக்கிற ஆசையின் காரணமாக, இறைவன் தூரத்தில் இருப்பது போல் மனிதனுக்குத் தோன்றுகிறது. இச்சையின் அடுக்குகளே இறைவன் தூரத்தில் இருப்பது போல் செய்து வருகின்றன.
.

நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா? எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.
.

பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ, அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும். ஆகவே, ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால், இறைவனைக் காணலாம். ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால், அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக் கொண்டு தான் இருப்போம். அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும். அனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால், ஒரு பளுவும் இல்லை. ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும். அங்கே இறைவன் இருப்பான்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை,
முறைப்படுத்தப்பாட்டால் நிறைமனம்".
.

"மனிதன் தன்முனைப்பு அற்றாலே போதும்; அவன்
இறைநிலையென்னும் பெரிய ஆற்றலோடு
தன்னைக் கரைய விட்டுக் கொள்கிறான்"
.

"தன்முனைப்பு, பாவப் பதிவுகள், தேவையில்லாத கடும்பற்று -
இந்த மூன்றும்தான் மனிதனை எல்லைகட்டி
குழப்பத்தில் ஆழ்த்தி வைக்கிறது".
.

ஓர்மை நிலைப்பயிற்சி :-

"நினைப்பும் மறப்பும் அற்று இருக்க நீ பழகிக்கொள், புலன்கள்
அனைத்தும் அடிமையாம், அமைதி கிட்டிடும் ஆங்கே
ஒன்றையும் நினையாது, உன்னையும் மறவாது
நின்ற நிலையே அது. நீயறி நினைவை நிறுத்தி".
.

நிறை நிலையில் அமைதி :-

" எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம்
இரவு பகல், சிறிது பெரிது, ஆண் பெண், கீழ் மேல்,
நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,
நட்டம் லாபம் என்று அனைத்தும் தோன்றும்;
வல்லமையும் அதன் முழுமை நிலையாய் உள்ள
வரைகடந்த மெய்ப்பொருளாம் அகத்துணர்ந்தால்
அல்லலற்று அறிவு விழித்தும் விரிந்தும்
அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கேள்வி: ஐயா, ' மனசாட்சி ' என்று கூறுகிறார்களே அது கருமையம் தானா?



மகரிஷியின் பதில்: ஆம். அதாவது ஒரு பொருளை வியாபாரி தெருவில் விற்றுக் கொண்டு வருகிறார். பொருளின் விலை என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர் 10 ரூபாய் விலை சொல்கிறார். ஏனப்பா நீ என்ன விலைக்கு இதை வாங்கினாய் என்று கேட்கிறீர்கள். அதற்கு அவர் 'நான் 8 ரூபாய்க்கு வாங்கினேன்' என்று உங்களிடம் கூறுவார். ஆனால் உண்மையில் அவர் 5 ரூபாய்க்குத் தான் வாங்கியிருப்பார். உண்மையைச் சொன்னால் நீங்கள் 6 அல்லது 7 ரூபாய்க்குத் தான் வாங்க முடியும் என்று கூறுவீர்கள்' என எண்ணி 8 ரூபாய்க்கு வாங்கியதாக வாய் சொல்லும். ஆனால் அங்கே உள்ளே உள்ள கருமையப் பதிவு 5 ரூபாய்க்குத்தான் வாங்கினேன் என்று சொல்லுமல்லவா. அது தான் மனசாட்சி.

ஒரு திருடன் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். நீதிபதி திருடனைப் பார்த்து "ஏனப்பா நீ இன்னின்ன பொருட்களை இந்த விலாசத்தில் உள்ள வீட்டில் திருடினாய் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதே நீ என்ன பதில் சொல்கிறாய்?" என்று கேட்கிறார். திருடனுக்குள், தான் அந்த வீட்டில் எப்படிப் போய் எந்த நேரத்தில் என்னென்ன பொருள்களைத் திருடினானோ அத்தனையும் கருமையத்திலிருந்து காட்சியாகிக் கொண்டேயிருக்கும். ஆனால் வாய் "நான் திருடவே இல்லைங்க" என்று கூறும். நமக்குள் உள்ள அறிவே தெய்வமாக இருந்து கூறுவதைத்தான் 'மனசாட்சி' என்கிறோம்.


 - வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

காய கல்ப யோகம்



மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு.

1. ரசம்
2. ரத்தம்
3. சதை
4. கொழுப்பு 5. எலும்பு
6. மஜ்ஜை மற்றும்
7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் 'சீவ இன அனைத்தடக்கப் பொருள்' தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.
உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.
இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. 

இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.
திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.

1.
ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா

2.
கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!

காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.
சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
காயகற்பப் பயிற்சி பயன்கள்

உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.

இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.