மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மாவுக்குத் தேவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதாகக் கற்பித்து, இங்கே உலகில் கடவுளுக்கென்று கொடுக்கும் பொருட்களெல்லாம் சொர்க்கத்திற்குப் போன ஆன்மாக்களுக்குப் போய் கிடைப்பதாக பல காலம் பலராலும் கூறப்பட்டு, இந்நம்பிக்கையில் கடவுளுக்கு என்று உணவு அளிக்கத் திருவிழாக்களும், கடவுளுக்கென்று பலவகையான பொருட்காணிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.
மனிதன் உழைத்து சம்பாதிக்கும் எப்பொருளும் அவனைப் போன்று மனித உருவில் உள்ளவர்களுக்குத் தக்க முறையில் உதவி வாழ்வுக்கு வளமளிப்பது அவசியம். மனிதன் கடவுளுக்கு என்று கொடுக்கின்ற எந்தப் பொருளானாலும் எங்கே போய்ச் சேருகிறது என்று கண்டுபிடித்துக் கொள்வது ஒன்றும் சிரமமல்ல. கடவுளுக்கு மனிதன் அதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இடைத்தரகர்களாக உள்ளவர்களின் ஏமாற்றுச் செயல்கள் தாம்.
...
மனிதகுலத்தின் வளத்தை அழிக்கின்ற பல விசயங்களில் முக்கியமானவை கடவுளுக்கென்று கொடுக்கின்ற பொருட்களும், செய்கின்ற செயல்களுமாகும். இந்தப் பெரிய பொத்தல், இந்த விஞ்ஞான காலத்தில் சிந்தனை மிக்க அறிஞர்களால்தான் அடைக்கப் பட வேண்டும். இப்பொத்தல் அடைக்கப்பட்டு விடும் என்று உறுதியாகவும் நம்பலாம். ஏனெனில், அந்த அளவுக்கு அறிவு கல்வியினாலும், ஆராய்ச்சியினாலும், விஞ்ஞானத்தினாலும், இயற்கையாகவே உயர்ந்து கொண்டு வருகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -